Monday, November 11, 2019

புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்....


இஸ்லாமிய சமூகத்தின் நான்காவது கலீபா அலி(ரலி) அவர்கள் ஆட்சி காலம் . அப்போது கூபா நகரத்தின் நீதிபதியாக இருந்தவர் அறிஞர் சுரைஹ் ...

ஜனாதிபதி அலி (ரலி) அவர்களின் உருக்கு சட்டை ஒன்று தொலைந்து விட்டது

பல போர்களில் அலி அவர்கள் அந்த உருக்கு சட்டையை கேடயமாக பயன் படுத்தி உள்ளார்கள். அவர்கள் அதிகம் விரும்பும் ஒரு பொருளாக அந்த உருக்கு சட்டை இருந்தது.

எந்த உருக்கு சட்டையை அலி அவர்கள் தொலைத்தார்களோ அதே உருக்கு சட்டை ஒரு யூதனின் கரத்தில் இருந்ததையும் அந்த உருக்கு சட்டையை விற்பனை செய்வதற்காக அந்த யூதன் சந்தைக்கு கொண்டு வந்திருப்பதையும் அலி (ரலி) அவர்கள் கண்டார்கள் ..

சந்தையில் யூதனின் கரத்தில் இருந்த உருக்கு சட்டையை அலி(ரலி) அவர்கள் கண்டதும் அது தமது உருக்கு சட்டை தான் என்று அறிந்து கொண்டு அந்த யூதனிடம் சென்று குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் அந்த உருக்கு சட்டையை தாம் தொலைத்து விட்ட தகவலை சொல்லி தமக்கு உரிய உருக்கு சட்டையை திருப்பி தருமாறு ஜனாதிபதி அலி அவர்கள் வேண்டி கொண்டார்கள்.


அந்த யூதனோ இல்லை இல்லை இது எனக்கு உரியது என்று மறுத்து விட்டு இதை நீங்கள் பலவந்தமாக அடைய விரும்பினால் நான் நீதி மன்றம் செல்வேன் என்று யூதன் கூற ஜனாதிபதி அலி அவர்கள் அதை ஒப்பு கொண்டு நீதி மன்றம் சென்றார்கள்.

வாதி ஜனாதிபதி அலி அவர்கள்...

பிரதி வாதி நாட்டின் ஜனாதிபதி அலி அவர்களின் ஆளுகையின் கீழ் வாழும் ஒரு சிறுபான்மை சமுகத்தை சார்ந்த யூதன்....

வழக்கு ஆரம்பமானது.....

நீதிபதி அறிஞர் சுரைஹ் அவர்கள் வழக்கு விசாரணையை தொடங்கினார்.

ஜனாதிபதி அலி அவர்கள் தமது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்கள் .

யூதன் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கூர்ந்து கவனித்த நீதிபதி சுரைஹ் அவர்கள் ஜனாதிபதி அலி அவர்களை நோக்கி ,"அலி அவர்களே !
நீங்கள் உண்மையாளர் சத்தியத்தை தான் பேசுவீர்கள் என்பதை நான் அறிவேன் ஆனால் வழக்கு நீதிமன்றம் என வந்து விட்டால் நல்லவர் கெட்டவர் உண்மையாளன் பொய்யன் என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள முடியாது நீதிமன்ற வழக்குகளில் ஆதரங்களும் சாட்சிகளும் தான் பேசும்
உருக்கு சட்டை குறிப்பிட்ட யூத சமூகத்தை சார்ந்த நண்பரின் கரத்தில் உள்ளது "...

"அது உங்களுக்கு சொந்தமானது என்றால் அதற்கு சாட்சிகள் தேவை".. என நீதிபதி ஜனாதிபதி அலி அவர்களிடம் சொல்ல..
அலி (ரலி) அவர்களும் " ஆம்
அதற்கு என்னிடம் சாட்சி இருக்கிறது " என கூறிவிட்டு குன்புர் என்ற ஒரு சகோதரரையும் தனது மகன் ஹஸனையும் சாட்சியாக விசாரிக்க சொல்கிறார்கள் அதிபர் அலி அவர்கள்...

இங்கு குறுக்கிட்ட நீதிபதி சுரைஹ் அவர்கள்
ஜனாதபதி அவர்களே நீங்கள் குறிப்பிட்ட இரு சாட்சிகளில் முதல் சாட்சியை நான் ஏற்று கொள்கிறேன் ஆனால் இரண்டாவது சாட்சியை என்னால் ஏற்று கொள்ள முடியாது மறுத்து விட்டார்கள்

"நபிகள் நாயகத்தால் சுவனத்திற்கு சொந்த காரர் என புகழ்ந்துரைக்க பட்ட நபிகளாரின் பேரன் ஹஸன் அவர்களின் சாட்சியை நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்களா,? .... என்று
ஜனாதிபதி அலி அவர்கள் வினவ அதற்கு நீதிபதியின் பதில் இதோ...
"ஹஸன் அவர்கள் எங்களில் மிக சிறந்த மனிதர். சுவனத்திற்கு சொந்த காரர் என்பதில் இரண்டு கருத்திற்கு இடம் இல்லை .நான் ஹஸன்அவர்களின் சாட்சியை ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னது அவரின் மீதுள்ள மரியாதை குறைவினால் அல்ல தந்தைக்கு மகன் சொல்லும் சாட்சியை இந்த இடத்தில் அனுமதிக்க முடியாது என்ற காரணத்தினால் தான்"... என விளக்கம் தந்தார்

இதை செவியுற்ற ஜனாதிபதி அலி அவர்கள் "என்னிடம் வேறு சாட்சிகள் இல்லை .உருக்கு சட்டையை நீங்களே வைத்து கொள்ளுங்கள்"... என அந்த யூதனிடம் கூறிவிட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்கள்

இது வரையிலும் இங்கு நடந்த வாத பிரதி வாதங்களை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த உருக்கு சட்டையை தன் கரத்தில் வைத்திருந்த யூதன் இப்போது பேச ஆரம்பித்தார்.....

"ஆம் இந்த உருக்கு சட்டை எனக்கு உரியதல்ல இது உண்மையில் ஜனாதிபதி அலி அவர்களுக்கு உரியது தான் என கூறி உருக்கு சட்டையை அலி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு கலிமா மொழிந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்...!

அதற்கு அந்த யூதன் கூறிய முக்கிய காரணம் "நான் இந்த நாட்டின் சிறுபான்மை மதத்தை சார்ந்த ஒரு எளிய மனிதன் எனக்கு எதிராக நீதி மன்றத்திற்கு வந்தவர் இந்த நாட்டின் அதிபர்"..
"அலிஅவர்கள் ஜனாதிபதியாக இருந்தும் அவருக்கு முக்கியத்துவம் தராமல் *நீதிபரிபாலனம்* ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் தான் அமையும்".. என்று நீதிபதி சுரைஹ் அவர்கள் கூறியது உண்மையாகவே என்னை ஈர்த்தது

இந்த மார்க்கம் சத்திய மார்க்கம் என்பதற்கு இந்த நீதிபரிபாலன முறையே சிறந்த சான்றாக அமைந்துள்ளது என கூறினார்

இது ஒரு வரலாறு இந்த வரலாற்றில் பல பாடங்கள் புதைந்து கிடக்கின்றன

"இஸ்லாமிய குடியரசின் நான்காவது ஜனாதிபதியின் வாழ்கை பொருளாதார நிலை ஒரு உருக்கு சட்டைக்காக வழக்கு தொடுக்கும் ஏழ்மை நிலையில் தான் இருந்திருக்கிறது" என்பது முதல் பாடம்

"அரசையும் அதிகாரத்தையும் வைத்து கொண்டு ஊரை அடித்து உலையில் போட அவர்கள் கனவிலும் நினைத்தது இல்லை"... என்பது இரண்டாவது பாடம்

*"இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மை மக்கள் எவ்வித அச்சமுமின்றி சிறப்பாக வாழ்ந்துள்ளனர்..*
ஆட்சியாளரை எதிர்த்து வழக்கு தொடரும் அளவிற்க்கு அவர்கள் முழு சுதந்திரமும் உரிமையும் பெற்று வாழ்ந்துள்ளனர்" ...என்பது மூன்றாவது பாடம்

*இஸ்லாமிய நீதி என்பது மதங்களை கடந்தது. பாதிக்க பட்டவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு இஸ்லாம் நீதி வழங்கும்* என்பது நான்காவது பாடம்...

இப்படியாக பல பாடங்களும் படிப்பினைகளும் நிறைந்ததாக இந்த உண்மை வரலாறு அமைந்துள்ளது....
இந்த வரலாற்றை இன்றைய முஸ்லீம் சமூகமும் முஸ்லீம் சமூகத்தை வெறுக்க வைக்கப்பாடுபட்டு வரும் சில இந்துத்துவ இயக்க சகோதரர்களும் உணரட்டும்...

செய்யது அஹமது அலி . பாகவி
தகவல் தந்தவர் Abdul Basith

No comments: