Friday, November 8, 2019

தோல்வி அல்ல

தோல்வி அல்ல

Dr.Fajila Azad 
(International Life Coach – Mentor – Facilitator)
fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad

தோல்வி இந்த வார்த்தையை கேட்கும் போது உங்களுக்குள் என்ன செய்கிறது. தோல்வி இந்த ஒற்றை வார்த்தைக்கு மிரளாதவர்களே இல்லை எனலாம்.

ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் ஆண் பெண் என்று எந்த பாகுபாடின்றி எத்தனை முயற்சிக்கு இடையிலும் தோல்வியை சந்திக்காதவர்களே இருக்க முடியாது.

வளர்ந்து வரும் நாடுகள் என்றில்லை வளர்ந்த நாடான இத்தாலியிலும் தோல்வி ஒரு சங்கடமாக அவமானகரமான ஒன்றாக, taboo வாக தவிர்க்க வேண்டிய topic காகவே பார்க்கப் படுகிறது. தோல்வியை இத்தாலியில் “புரூத் ஆஃப் ஹிபோரா” அதாவது உங்கள் முகத்தை தொலைக்க செய்து விடும் தவறான ஒன்று என்றே ஒதுங்குவார்கள். அதே சமயம் அமெரிக்காவில் தோல்வியை ஒரு அனுபவமாக, வெற்றியின் முதல் படியாக எடுத்துக் கொள்வார்கள்


தோல்வியை அவமானமான ஒன்றாக கருதுவதால்தான் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் புது முயற்சியை எடுக்க பலரும் தயங்குகிறார்கள். தவிர ஏதாவது சிறு தோல்வி ஏற்பட்டால் கூட ஏற்க முடியாமல் துவண்டு போகிறார்கள். தான் எதற்கும் தகுதியானவன் இல்லை என கூனிக் குறுகிப் போகிறார்கள். வெற்றி என்பது இனி எப்போதும் தனக்கு சாத்தியமில்லாத ஒன்று என நினைத்து மிரண்டு போகிறார்கள்.

உண்மையில் தோல்வி என்பது வெற்றியின் முடிவல்ல. தோல்வி என்பது அந்த முயற்சியின் முடிவு மட்டுமே. அந்த அனுபவத்தை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் நிச்சயம் அடுத்த முயற்சி உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட மிகச் சிறந்த வெற்றியைக் கொடுக்கும்.

பொதுவாக ஒரு தோல்வி வந்தவுடன் ஒருவருக்குள் எழும் எண்ணம் இத்தனை முயற்சி எடுத்தோமே இப்படியெல்லாம் சிரமப்பட்டோமே, இவ்வளவு தூரம் வந்து விட்டு கடைசியில் தோற்றுப் போய் விட்டோமே எனும் தாழ்வு மனப்பான்மையே. அதையே வேறு கோணத்தில், எத்தனை முயற்சி உங்களால் எடுக்க முடிந்திருக்கிறது எவ்வளவு தாக்கு பிடித்திருக்கிறீர்கள், எத்தனை பேர் இதற்கு பக்க பலமாக இருந்திருக்கிறார்கள் என்று சிந்திது பாருங்கள்.அது பல கதவுகளை உங்காளுக்கு திறக்க செய்யும்.

பொதுவாக, ஒரு விளைவை எதிர்பார்த்தே பல நிலைகளில் வேலைகள் செய்யப் பட்டாலும், இறுதி முடிவு நீங்கள் நினைத்த விளைவைத் தராத போது உங்கள் அத்தனை முயற்சிகளையும் அந்த முடிவை வைத்தே தோல்வியாகப் பார்க்கிறீர்கள். அதற்குப் பதிலாக அந்த முடிவை நோக்கிய, ஒவ்வொரு நிலையில் நீங்கள் செய்த முயற்சியையும் தனித் தனியாகப் பாருங்கள். உங்கள் எத்தனை முயற்சிகள் வெற்றி அடைந்திருக்கின்றன என்பது உங்களுக்கு புரியும்.

உங்கள் எல்லா முயற்சியும் தோல்வி அடையவில்லை என்பது புரியும் போது உங்களால் சாதிக்க முடியும் எனும் திடம் வரும். இப்போது எது மட்டும் வெற்றி அடையவில்லை என பிரித்துப் பார்த்து அதை சரி செய்யலாம் அல்லது அது வரை கிடைத்த அனுபவத்தை வைத்து வேறு ஒன்றில் தொடரலாம் என்கின்ற நம்பிக்கை எழும்.

உதாரணமாக நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் உங்கள் அத்தனை திறமைகளையும் அதில் போட்டு அல்லும் பகலும் உழைக்கிறீர்கள் ஆனால் ஒரு நாள் ஆட்குறைப்பு செய்யவேண்டிய சூழலில் உங்களை வேலை நீக்கம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்படி இருக்கும்?

நிச்சயமாக உங்கள் மனம் சுருண்டு போகும். வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள் என்பதை, உங்களுடைய இத்தனை நாளுக்கான result ஆக எடுத்துக் கொண்டு உங்களுடைய அத்தனை உழைப்பும் வீணாகிப் போய் விட்டதாகவும், தோற்றுப் போய்விட்டீர்கள் என்றும் உங்கள் மனம் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். வாழ்நாள் எல்லாம் உழைத்தது வீணாகிப் போய் விட்டதாகவும் இனி எப்படி மீள முடியும் என்பதாகவும் ஒரு இயலாமை உள்ளுக்குள் எழும். உங்கள் வாழ்க்கையே ஒரு தோல்வி என உங்கள் மனம் உங்களை சுழற்றிப் போடும்.

இதையே சொந்த வியாபாரமாகட்டும், உறவுகளாகட்டும், எதிலும் பொருத்திப் பாருங்கள்.

மீண்டு எழுந்து உழைத்தாலும் அது எத்தனை நாளைக்கு இருக்கக் கூடும், எதுவும் நிரந்தரமில்லை, இனி உழைத்து என்ன செய்ய என்ற கேள்வியை எழுப்பி உங்கள் மனமே உங்களை எழ விடாமல் செய்யும்.

அதே நேரம் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால், நீங்கள் எத்தனை நாட்கள் அந்த வேலையால் சந்தோஷித்திருக்கிறீர்கள், உங்கள் நேரம் எவ்வளவு பயனுள்ளதாகச் சென்றிருக்கிறது, அந்த காலகட்டத்தில் உங்கள் எத்தனை தேவைகள் பூர்த்தி ஆகி உள்ளது, உங்களுக்கு எவ்வளவு சிறந்த அனுபவங்கள் கிடைத்துள்ளது என்பது உங்களுக்கே புரியும். கடந்து சென்ற காலம் எல்லாமும் வீண் அல்ல என்பதும் உங்களுக்குப் புரியும். நீங்கள் எதிர்பாராத ஒன்று இடையில் அங்கு நடந்துள்ளது. அது வரை உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருந்தது. இந்த ஒரு தோல்விக்கு உங்கள் அத்தனை நிகழ்வுகளையும் இரையாக்கி விடாதீர்கள்.

இதில் கிடைத்த அனுபவங்கள் இனி இந்த மேடையை விட்டும் வேறு ஒரு மேடையில் தொடர நல்ல ஒரு வாய்ப்பை தரக் கூடும். ஒன்றின் முடிவு அதை விடச் சிறந்த நிகழ்வுக்கான அழைப்பிதழாக இருக்கக் கூடும். எப்படி ஒரு விமானம் பறக்கக் கூடிய ரன்வேயின் முடிவு அந்த விமானம் பறப்பதற்கான ஆரம்பநிலையாக இருக்கிறதோ அதுமாதிரி என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் எந்த சூழலிலும் தளராமல் தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள்.

உண்மையில் தோல்வியை விட தோல்வியால் வரக் கூடிய விளைவுகளைப் பற்றிய பயமும் அதை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையுமே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி ஒருவரை செயலாற்ற விடாமல் செய்கிறது. தோல்வி என்பது வெற்றியின் முடிவல்ல. தோல்வியுற்ற அந்த ஒரு முயற்சியின் முடிவு மட்டுமே.

அந்த முயற்சியின் முடிவை அதை விட சிறந்த விளைவை தரக் கூடிய அடுத்த முயற்சியின் ஆரம்பமாக நீங்கள் நினைத்தால் மாற்றி விட முடியும்.

பொதுவாக மனித மனம், ஏதேனும் ஒன்று தவறாகப் போனால் யாரோ ஒருவர் மேல் பழி போடத் தேடும். அந்த யாரோ ஒருவர் மாற வேண்டும் என நினைக்கும் போது நீங்கள் எதிர் பார்க்கும் மாற்றம் ஒரு கனவாக நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாக நின்று போய் விடுகிறது. அதனால் எந்த ஒரு தோல்விக்கும் துவண்டு போகாமல், குற்ற உணர்ச்சிக்கு ஆட்படாமல், சரியான முறையில், அடுத்த முயற்சியில் மாற்றிக் கொள்ள வேண்டும் எனும் தெளிவோடு சுயமாக அதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், உங்களால் வேண்டிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும். 

பெரும்பாலான தோல்விகள் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற தவிப்பிலேயே பெரும் பாரத்தை மனதில் ஏற்றி விட்டுச் செல்கிறது. தான் தோல்வி அடைந்து விட்டதாக தவிக்கக் கூடிய ஒருவருக்கு தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தன்னை விட திறமை அற்றவர்கள், எல்லோரும் வெற்றி பெறுவதாகவும், தான் மட்டும் எப்போதும் தோல்வி அடைவதாகவும் தோன்றும். Failure is an Event ‘தோல்வி என்பது ஒரு நிகழ்வுதான்’ அது முடிவல்ல என்பதை உள்வாங்கிக் கொண்டீர்கள் என்றால் மிக எளிதாக அந்த நிகழ்வைக் கடந்து வந்து விடுவீர்கள்.

உலகில் யாருக்குமே எல்லாமும் வெற்றி அடைந்து விடுவதில்லை. தோல்வி என்பது யாராலும் தவிர்க்க முடியாதது. அதை ஒவ்வொருவரும் எப்படி கையாள்கிறார்கள் என்பதிலேயே வெற்றியின் இரகசியம் இருக்கிறது. அதை புரிந்து கொள்ளும் மனதில் மகிழ்ச்சி நிலைக்கிறது.

From: Fajila Azad <fajila@hotmail.com>
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments: