Thursday, November 7, 2019

மகான் கரீப்-எ-நவாஸ் க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்கள் சொன்னவைகளில் இருந்து கொஞ்சம்:

Nagore Rumi


மகான் கரீப்-எ-நவாஸ் க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்கள் சொன்னவைகளில் இருந்து கொஞ்சம்:

1. அல்லாஹ்வை நீங்கள் நேசிக்க வேண்டும், அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டும் என்று விரும்பினால் அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தையும் / அனைவரையும் நேசியுங்கள்.

2. மூச்சை உள்ளே இழுப்பதையும் வெளியே விடுவதையும் கவனிப்பது இறைவணக்கத்தில் ஒரு பகுதியாகும்.

3. காலையில் விழித்ததும் பெற்றோரை மரியாதையுடனும் அன்புடனும் புன்சிரிப்புடனும் பார்ப்பதும்

4. குழந்தைகளை அன்போடு கவனிப்பதும் இறைவணக்கத்தின் பகுதிகளாகும்.

5. இறந்து போவதற்கு முன்பு வாழ்ந்துவிடுங்கள். வாழ்வின் ஒவ்வொரு கணமும் இறைவன் கொடுத்த அருட்கொடையாகும். எனவே ஒவ்வொரு கணமும் இதுவே உங்கள் கடைசிக் கணம் என்பதைப்போல விழிப்புணர்வுடன் அதிலேயே இருங்கள்.


6. வாழ்வின் எல்லாக் கணங்களிலும், சந்தோஷமான கணங்களிலும்கூட, இறப்பை நினைவு கூர்ந்தவர்களாக இருங்கள்.

7. உங்கள் இறுதிப் பயணத்துக்கு வேண்டிய எல்லாவற்றையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: தூய்மையான இதயமும், நல்ல செயல்களும்.

8. பசித்தவருக்கு உணவளிப்பதனால் எண்ணிறந்த அருட்கொடைகள் அருளப்படுவீர்கள்.

9. இறந்தவருக்காக துஆ செய்வதும், கண்ணியமாக அவர்களை அடக்கம் செய்வதன் மூலம் அவர்களுக்கு மரியாதை செய்வதும் ஒரு வகையான தர்மமாகும்.

10. அறிவைவிட பெரிய செல்வமில்லை; அறியாமையைவிட பெரிய வறுமை இல்லை.

11. நாம் உறங்கும்போது எங்கிருந்து வந்தோமோ அங்கே திரும்புகிறோம். (எனவே) தூக்கமானது ஆன்மிக வளர்ச்சிக்கான மிக முக்கியமான நேரமாகும்.

(நன்றாகத் தூங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. அதையும் ஆன்மிகப் பயிற்சிக்கான களமாக மாற்றும் வழிகளை ஞானாசிரியர் மூலம் அறிந்து செயல்படுத்த வேண்டும்).

12. நாம் அனைவருமே தூய்மையான, பக்திகொண்ட இதயத்தோடுதான் பிறக்கிறோம். ஆனால் நமது பேராசைகளால் அதைக் கெடுத்துக் கொள்கிறோம்.

13. உடல் தூய்மையுடனும் (வளூவுடன்), உள்ளத்தூய்மையுடனும் உறங்கும் ஒருவருக்கு பாதுகாவலாக இறைவன் ஒரு மலக்கை நியமிக்கிறான். அவர் விழிக்கும்வரை அவருக்காக, அவர் ரட்சிக்கப்படவேண்டும் என்று இறைவனிடம் அம்மலக்கு பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார்.

14. சூரியன் உதிக்கும்போது அது அனைவருக்கும் ஒளியையும், உஷ்ணத்தையும் தருகிறது. அவர் முஸ்லிமா, ஹிந்துவா, கிறிஸ்தவரா, சீக்கியரா என்று பார்ப்பதில்லை. நீங்கள் இறைவனின் நண்பனாக இருந்தால் சூரியனைப்போல பாசம் கொண்டிருக்கவேண்டும்.

15. இறைநேசம் கொண்டவர்களிடம் மூன்று குணங்கள் இருக்கும்: அவர் நதியைப்போல தர்மம் செய்வார். சூரியனைப்போல பாசம் கொள்வார். பூமியைப் போல விருந்தோம்பல் செய்வார்.

16. இறைநேசத்தின் பாதை எப்படிப்பட்டது எனில், அதில் செல்வபர் தன்னை இழந்துவிடுவார்.

17. இறைவனைத் தவிர வேறு எவரிடமும் உதவியோ, தர்மமோ, ஆதரவோ கேட்கவேண்டாம்.

Life Lesson from Moinuddin Chisti என்ற நூலில் இருந்து..

Nagore Rumi

No comments: