Wednesday, January 9, 2019

நேசத்திற்கு உயிரூட்டும் 'முக்கியத்துவம்'



"நேசத்தின் மதிப்பறியாத
புறக்கணிப்பின் முட்களைச்சூடிய நீ
கோபத்தின் ஏக்கமுணராத
கவனமின்மையின் காகிதக் கப்பலில்
இன்னும் எத்தனை காலம்
பயணிக்கத் துணிவாய் ?" என்று கேட்டார்
கவிஞர் நிஷா மன்சூர்

நேசத்திற்கு உயிரூட்டும் 'முக்கியத்துவம்' குறித்த என் பதிவுகளைத் திரும்பிப் பார்த்தேன். கவனத்திற்குறிய சேதிகள் உள்ளன...
..
"நேசமென்பது
முக்கியத்துவம் வாய்ந்தது!" என்பது அரபுப் பழமொழி.

ஆனால் நேசம் பிழைக்க வேண்டுமானால் நேசிப்பவருக்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியம்.

"நான்கு அம்சங்களால் மற்றவர் உள்ளங்களை சம்பாதிக்கலாம்:

1) மணமான பேச்சு

2) அழகிய முக்கியத்துவம்

3) உண்மையான சேர்ந்திருத்தல்

4) அழகிய நடைமுறை


‏الحُبّ بغير اهتمام كلام فارغ.
இதனையே,
"முக்கியத்துவம் தராத
நேசமென்பது
வெறும் வார்த்தை தான்." என்று விளக்குகிறார் கவிஞர் ஃபவாஸ் லஅபூன்.

"நேசமென்பது,
முக்கியத்துவம் வழங்குவது,
கேட்பது,
நம்புவது." என்றும் விரிகிறது.

"நேசம் இரு கால்களின் மீதே நீடித்திருக்கும்...

1) முக்கியத்துவம்
2) மதிப்பளித்தல்

இரண்டில் ஒன்றை இழந்தாலும் நொண்டியடிக்கத் தொடங்கிவிடும்." என்கிறது ஓர் எச்சரிக்கை மணி.

وَاَلْقَيْتُ عَلَيْكَ مَحَـبَّةً مِّنِّىْ
"உம் மீது அன்பைப் பொழிந்தேன்."
(அல்குர்ஆன் : 20:39) என்று மூஸா (அலை) அவர்களை நோக்கி அல்லாஹ் கூறினான்.

நேசத்தில் மிக மகத்தானது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவது.

அல்லாஹ் உன்னை நேசித்து விட்டால்...

உன்னை மகிழ்விப்பான்
உனக்கு உதவுவான்
உன் பிரார்த்தனைக்கு பதிலளிப்பான்
உன் மனக்கவலை நீக்குவான்
உன் துக்கம் போக்குவான்
மக்கள் உள்ளங்களில் உன் மீதான நேசத்தை ஏற்படுத்துவான்.
..
‏أُحب من يحبني،
ولكن أعشق من يهتم بي..

"என்னை நேசிப்பவரை
நான் நேசிக்கிறேன்,
ஆனால்
எனக்கு முக்கியத்துவம் கொடுப்பவரை
காதலிக்கிறேன்.." என்கிறார் நிஸார் கப்பானி.

"பெண்..
அவள் பெரியவளாக மாட்டாள்
முதுமையும் அடைய மாட்டாள்,
அவள் எப்போதும் குழந்தை,
அவள் சிரித்தவண்ணமிருக்க
நீ முக்கியத்துவம் தரவேண்டும்."

"ஆணொரு காகிதத்தாள்!
அதில் "மரியாதையை ஆசைப் படுகிறேன்"என்று எழுதப் பட்டுள்ளது.

பெண்ணொரு காகிதத்தாள்!
அதில் "நான் முக்கியத்துவம் கொடுப்பதை ஆசைப் படுகிறேன்"என்று எழுதப் பட்டுள்ளது.

எனவே பெண்ணே! ஆணுக்கு மரியாதை கொடு! அவன் உனக்கு முக்கியத்துவம் கொடுப்பான்.

ஆணே! பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடு! அவள் உனக்கு
மரியாதை கொடுப்பாள்."

‏الإهتمام يولد فوق العشق عشقاً آخر ،
أما الإهمال يولد فوق العشق معشوقاً آخر !
أنيس منصور
"முக்கியத்துவம் தருதல்
காதலுக்கு மேல் காதலை
உருவாக்கும்.
முக்கியத்துவம் வழங்காமை
காதலுக்கு மேல்
மற்றொரு காதலனை
உருவாக்கி விடும்." என்று மிரட்டுகிறார் கவிஞர் அனீஸ் மன்சூர்.
..

நேசம், பேச்சை முக்கியமாய் கருதுகிறது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை.

"உன்னிடம் அதிகம் பேசி என்மூலம் உனக்கு சலிப்பு ஏற்படுவதையும்

பேசாமல் மௌனமாயிருந்து
என் மனதில் உனக்கு முக்கியத்துவம் இல்லையென
நீ எண்ணுவதையும்." என்று பதறுகிறான் ஒரு எளிய நேசன்.
..

முக்கியத்துவத்திற்கு மற்றொரு முகம் இருக்கிறது. அதனையே கலீல் ஜிப்ரான்,

‏ﻻ تكن مهتما كثيرا…فبعض القلوب ﻻ تشعر.
"மிகவும்
முக்கியத்துவம்
கொடுப்பவராகி விடாதீர்கள்;
சில உள்ளங்கள்
அதை உணராது." என்று கூறுகிறார்.

"சில சமயங்களில்
மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது
உன் கண்ணியத்தை
இல்லாமல் ஆக்கிவிடும்."

"உனக்கு வலியை ஏற்படுத்தும் ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் தராதே...
உன் குறைந்த முக்கியத்துவத்தால்
அந்த வலிகள் செத்துப்போகும்படி
விட்டுவிடு!"
..

நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் தான்... எதற்குத் தெரியுமா?

ஷைக் அபூஹாமிது கஸ்ஸாலி கூறுவதைக் கேளுங்கள்:

‏عجبًا لمن يهتم " بوجهه " الذي هو محل نظر الخلق، ولا يهتم بقلبه الذي هو محل نظر الخالق سبحانه .."
أبوحامد الغزالي
"என்னே ஆச்சரியம்!
படைப்பினங்கள் பார்க்குமிடமான முகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்

படைத்தவன் பார்க்குமிடமான உள்ளத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை."

அவ்வாறே,
"பிள்ளைகளுக்காக
பணம் சம்பாதிப்பதற்கு
கொடுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்;

பிள்ளைகளோடு இருப்பதற்கு முக்கியத்துவம் வழங்குவது அவசியம் அல்லவா?

#முஸ்தஃபா_காசிமி

#கீழைத்தேய_உலா-

Musthafa Qasimi

No comments: