Friday, January 4, 2019

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது,

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது.

வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன்.

குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே...   


முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுதப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே...

அதில் ஒரு வசனம்,

தீர்ப்பு நாளின் அதிபதி --- Qur'an 1:3

என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்...

முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா...

அதன் இரண்டாது வசனம்,

இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். --- Qur'an 2:2

என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள். 

படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது.

ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? என்ற கேள்விதான் அது... 

என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.   

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.          --- Qur'an 2:30         

இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு.

வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியாயமானது...இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன்.

அதே வசனத்தின் இறுதியில்,

அவன் " நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான் --- Qur'an 2:30.

என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா?

இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன். 

நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மென்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.       

என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனிப்பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன.

குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை.

பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர்.

Mohamed Yusuf
Islam in Tami
https://m.youtube.com/watch?v=3H_C0BMyGCA

No comments: