Thursday, January 10, 2019

"உன் ஆன்மாவின் சுவர்

Musthafa Qasimi


இ டிந்து விழப்போவது கண்டு
அதைத் தூக்கி நிறுத்தி விட்டு
அதற்கான கூலி குறித்து
சிந்திக்கவும் செய்யாதவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்." என்ற ரூமி (ரஹ்) அவர்கள் கவிதை பின்வரும் இறை வசனத்தின் கருவிலிருந்து தோன்றியது:

فَوَجَدَا فِيْهَا جِدَارًا يُّرِيْدُ اَنْ يَّـنْقَضَّ فَاَقَامَهٗ‌ قَالَ لَوْ شِئْتَ لَـتَّخَذْتَ عَلَيْهِ اَجْرًا‏
"அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, (ஃகிழ்ர் ஆகிய) அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்." (அல்குர்ஆன் : 18:77)
..


காயப்படுத்தும் வார்த்தையால்

நேசத்தின் சுவர்

இடிந்து விழப் போவது கண்டு

பார்த்தும் பார்க்காதது போல் புறக்கணித்து விட்டு,

தன் மௌனத்திற்கான கூலியையும் எடுத்தும் கொள்ளாத மனிதர் மீது

அல்லாஹ்வின் கருணை உண்டாவதாக!

ஏனெனில், அது இறைத்தூதர்களின் வழிமுறை.

قَالُوْۤا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ‌ فَاَسَرَّهَا يُوْسُفُ فِىْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْ‌ قَالَ اَنْـتُمْ شَرٌّ مَّكَانًا ‌ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ‏

"(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்;"
(அல்குர்ஆன் : 12:77)
..

வாழ்க்கையில் இடிந்து அடியோடு விழும் நிலையிலிருக்கும் மேலும் எத்தனையோ சுவர்களை நிமிர்த்து வைக்க வேண்டியுள்ளது.

நம்பிக்கையின் சுவர் இடிந்து விழுகிறதா?

வாருங்கள்... அதில் இப்படி எழுதி நிமிர்த்து வைப்போம்:
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰى‏
"இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்."
(அல்குர்ஆன் : 93:5)

இதனையும் எழுதுவோம்:

رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏
“என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”
(அல்குர்ஆன் : 28:24)

இது நன்றி, புகழ்ச்சி, பிரார்த்தனை என அனைத்தும் அடங்கிய வாக்கியமாகும்;

இதன் மூலம் மூஸா (அலை) அவர்களுக்கு மனைவி, வசிப்பிடம், வேலைவாய்ப்பை அல்லாஹ் வழங்கினான் என்று இப்னு ஆஷூர் தன் விரிவுரையில் கூறியுள்ளார்.
..

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் தோழருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தி இமாம் அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது,
"இறைத்தூதர்கள், பெண் குழந்தைகளின் தந்தையர்கள்! என்று அவரிடம் தெரிவித்து விடுங்கள்!" என்றார்கள்.

பெண் குழந்தை பிறந்திருப்பதால் தன் தோழர் இடிந்து போய் விடக் கூடாதென்பதில் இமாம் அவர்களின் கவனம் நாம் பின்பற்ற வேண்டியதாகும்.
..

இறைவனை ஏன் உன் நண்பன் என்கிறாய்? என்று ஞானியிடம் கேட்டார்கள்.

ஏனெனில், இருளில் ஒளியேற்ற அவன் முயற்சிக்கிறான்.

தொலைந்தால் வழிகாட்டுகிறான்.

துக்கம் என் மீது படாவிதம் மகிழ்ச்சியின் சுவரை தூக்கி நிறுத்துகிறான்." என்றார்.
..

சர்க்கார் கிப்லா சைய்யது நிஜாமிஷாஹ் நூரி தாமத் பரக்காத்துஹு அவர்களுக்கு ஆறு பெண் பிள்ளைகள்.

ஒரு பிள்ளையின் திருமணத்திற்கு இரண்டே நாட்கள் இருந்த போது, மணமகளுக்கான நகைகள் உட்பட எதுவும் தயாராகாத சூழல் நிலவியது.

சர்க்கார் கிப்லா அவர்களின் மனைவியார் அவர்கள் கவலையோடு இது குறித்து தெரிவித்தார்கள். அப்போது சர்க்கார் கிப்லா, "திருமணத்திற்கு இன்னும் இரு இரவுகள் உள்ளன. அதில் அல்லாஹ்விடம் ஏந்துவதற்கு இரு கைகளும், அழுவதற்கு இரு கண்களும் என்னிடம் உள்ளன. கவலைப் படாதீர்கள்!" என்று கூறினார்கள்.

இடிந்து போன மனிதர்கள்,
தன்னை நிமிர்த்துவதற்கு ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தானே இன்னும் விழாதிருக்கிறார்கள்!

Musthafa Qasimi


No comments: