Thursday, January 10, 2019

அவள் பறவைகள் வாழும் உடல்


அவளது மூக்கில் முளைத்திருந்த வால்வெள்ளியை
என்னசெய்வதென்று மணிக்கணக்காகப் பார்த்து நின்றான்

முக்காடிட்ட மொகலாய ஓவியம்.........
தலை தாழ்ந்து..... சரிந்து......... உட்காந்திருந்தாள்

அவள் தோள்களில் இருந்த ராஜாளி
அவன் அரவம் கேட்டதும்
முதலில் அதிர்ந்து பறந்து சென்றது

குருத்து நாடியைத் திருப்பி
உதடுகளை முதல் முத்தமிட்டபொழுது
கணக்கற்ற புறாக்கள் பயந்து
ஒரே சமயத்தில் எழும்பிப் பறந்தன
தாமதித்து....... இன்னும் இரைதேடி
இன்னோர் இடத்தில் வந்திறங்கின


எட்டிப்பார்ப்பதும்
பின்வாங்குவதும்
அவள் பார்வை...... தீக்கோழிகள்

அவள் கைவிரல்க் கிளைகளில்
கீச்சிடும் சிட்டுக்குருவிகள்.....
நீண்டுகிடந்த கால்விரல்களில்
எதிரும் புதிருமாக
மாம்பழக் குருவிகள்

கார்காலப் பச்சைக்கிளிகள்
ஊர்வலம் செய்கின்ற ஒன்று...........

சொண்டு நீண்ட மரக்கொத்திகள்
சிறகுலர்த்தும் இன்னொன்று.........

நாட்டுப்புற காப்பிலிக் கோழிகள்
ஒன்றையொன்று கோதுவதாய் மற்றொன்று.........

மைனாக்கள்
அங்குமிங்கும் தாவுகின்ற கூந்தல்

வரிசை மாறாமல்
கொக்குகளும்....... நீர்க்காகங்களும்......
கிறு கிறுத்துப் பறக்கும் மீன் கொத்தியும்......

பெயர் தெரியா வண்ணங்களுடன் அலையும்
சிறிதும் பெரிதுமான எண்ணற்ற அபூர்வப் பறவைகள்

ஒலிதெறிக்கும் காடாகவும்........
காட்டின் வெளியாகவும்......
அந்தர ஆகாயமாகவும்.........
அமரும் நிலமாகவும்.........
அவள் பறவைகள் வாழும் உடல்

முதலில் பறவைகளைப் பழகவேண்டும்
.....................................
.........................................
.................................................

தடாகத்தில் நீந்தும் தாராக்களை
ஒவ்வொன்றாகப் பிடித்து
நீர் சொட்டச் சொட்ட
புல் தரையில்விட்டபடி விளையாடுவது
அவனுக்கும்
அவளுக்கும் விருப்பமாகவிருந்தது

Anar Issath Rehana 
அனார்


https://anarsrilanka.blogspot.com/p/ennaipatri.html


No comments: