Saturday, September 22, 2018

அறிய வேண்டிய அரிய மனிதர்கள்.... 59. #கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்


Colachel Azheem
           கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்









குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலத்திற்கும் ஈத்தாமொழிக்கும் இடையே வெற்றிலை கொடிகள் விவசாயம் செய்த கொடிக்கால் கிராமத்தை பெயரோடு சுமப்பவர்..

பத்மநாபபுரம் அருகில் வாழவிளை பகுதியைச் சேர்ந்த சுப்பையாவுக்கும் கொடிக்கால் பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மாளுக்கும் மகனாக 1937 ம் ஆண்டு பிறந்தவரின் இயற்பெயர் செல்லப்பா...


பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சமூகப்பணியில், அரசியல் களத்தில், குமரிமாவட்ட விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்றவர் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 1975 ல் குமரிமாவட்ட செயலாளர் பதவிவரை வகித்தவர்.
தெற்கெல்லை போராட்டத்தில் கலந்து 1954 ல் திருவனந்தபுரம் சிறையில் இருந்த காலத்தில் இலக்கியத்திலும் வாசிப்பிலும் ஏற்பட்ட ஆர்வம் 64 ஆண்டுகளாக தொடர்வது பிரமிக்கவைக்கும் சாதனை..

1966 ல் ராஜாக்கமங்கலம் ஊராட்சிமன்ற கவுன்சிலராகவும், தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பதவி வரை வகித்தவர் குமரிமாவட்ட, தமிழக மற்றும் அகிலஇந்திய அளவிலான பல்வேறு கட்சிகளின் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ள முடிந்தது..
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மரகதம் சந்திரசேகர், இளைய பெருமாள் போன்றவர்களுடன் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை சந்தித்து உரையாடியவர்.

தமிழக அரசியலின் இரு துருவங்களான எம் ஜி ஆர் மற்றும் கலைஞருடன் நெருங்கிய தொடர்பு இருந்து போதும் தனக்கென எதுவும் கேட்டு பெறாத பொதுநலவாதி..
சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக தங்கிய எம் எல் ஏ அந்தஸ்து இல்லாத ஒரே நபர்.. பின்னர் எம்ஜிஆர் ஆட்சியில் ஆதி திராவிடர் குழ உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டவர்..

கலைஞர் கருணாநிதியின் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த வெகுசிலரில் ஒருவரான கொடிக்கால் அவர்கள் பல வருடங்கள் தொடர்ந்து மாலை வேளைகளில் சந்தித்து உரையாடியதை பெருமையாக நினைக்கிறார்..தெற்கெல்லை போராட்டத்தில் கலந்துகொண்டதை கவுரவிக்க 1975 ல் கலைஞர் "தியாகச்செம்மல்" விருதுடன் தாமிரப்பட்டயம் வழங்கி கவுரவித்தது மறக்கமுடியாத நிகழ்வு..
1984 ம் ஆண்டு கலைஞர் தன் கைப்பட எழுதிய கடிதத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

கம்யூனிஸ்ட் சிந்தனைவாதியாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடுக்காக போராட்டம் நடத்தி பலமுறை சிறைசென்று பொதுத்தளத்தில் இயங்கியவரின் வாழ்க்கையில் அடியாருடன் ஏற்பட்ட நட்பு இஸ்லாமிய மார்க்கம் குறித்த தேடலை அதிகரித்தது...

1987 ம் ஆண்டு கொடிக்கால் செல்லப்பா என்ற பெயரில் "புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி" என்று இவர் வெளியிட்ட புத்தகம் தேசிய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
குறுகிய காலத்திலேயே இந்தி, ஆங்கிலம், கன்னடம், பெங்காலி, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பெயர்கப்பட்டு தாஃவா களத்தில் இந்த புத்தகம் அளப்பரிய பங்காற்றியது...

தொடர்ந்து தமிழகத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் லட்சக்கணக்கானவர்களிடம் சத்திய மார்க்கத்தை எடுத்துரைத்தவர் 1989 ம் ஆண்டு ஷேக் அப்துல்லாவாக தன்னை பகிரங்கமாக அறிவித்து கடந்த 30 ஆண்டுகளாக ஓய்வின்றி களப்பணியாற்றி வருகிறார்..

ஆரம்பத்தில் புதுமைத்தாய் பத்திரிகை வெளியிட்டவர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய பின்னர் "உங்கள் தூதுவன்" என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்..
1994 ம் ஆண்டில் உங்கள் தூதுவன் இதழில் "ஒரு ஆலிம் எழுத்தாளர் ஆகிறார்" என்ற தலைப்பில் மவுலவி அ.முகமது கான் பாகவி எழுதிய கட்டுரை தொடர் தமிழக ஆலிம்களிடையே மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகி 15 மாதங்களில் நிறுத்தப்பட்டது வரலாற்று உண்மை..

தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் ஜமாஅத்களையும் ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக இயங்கிட காங்கிரஸ் பிரமுகர் ஜே.எம்.ஆரூண் துவங்கிய தமிழக முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் அமைப்பின் துணைதலைவர் பதவி வகித்த ஷேக் அப்துல்லா அவர்கள் ஆரூண் அவர்கள் நடத்திய ஜமாஅத் முரசு வார இதழுக்கும் பங்களிப்பு செய்தவர்...

தனது அரசியல் மற்றும் அதிகாரிகளுடனான தொடர்புகள் மூலம் பெட் பொறியியல் கல்லூரி, மெட் பொறியியல் கல்லூரி மற்றும் யூனிவர்சல் பொறியியல் கல்லூரிகளின் உருவாக்கங்களில் உதவியவர்...

கணபதிபுரம் அன்னவிநாயகா கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்ததற்கு பிரதிபலனாக புதிதாக ஒரு கோடிரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு "Kodikkal Sheik Abdullah Block" என்று பெயர் சூட்டி கவுரவித்துள்ளனர்..

இவரது வாழ்க்கை வரலாறு தாங்கிய "நட்பின் ஆலைகள்" என்ற புத்தகமும், ஆளூர் ஷானவாஸ் எழுதிய "ஒரு போராளியின் பயணம்" என்ற புத்தகமும், சகோதரர் பாஸல் அலி முயற்சியில் வெளியான "தமிழக ஊடகவியலாளர் பார்வையில் கொடிக்கால்" என்ற புத்தகமும்,
திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் சகோதரர் அலிகான் முயற்சியில் தயாரான "கொடிக்கால் வரலாறு" ஆவணப்படமும் மிகப்பெரிய வரலாற்று சான்றுகள்...
கூடவே சகோதரர் Ali Khan அவர்கள் கொடிக்கால் ஷேக் அப்துல்லா வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை தொகுத்து சிற்றேடாகவும் வெளியிட்டுள்ளார்

தற்போது 81 வயதான நிலையிலும் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைதி இல்லம் என்ற கட்டிடம் கட்டி பல்வேறு சமூகத்தினர் மத்தியில் இணக்கம் ஏற்படும் விதமாக உரையாடல்கள், சந்திப்புகள் நிகழ்த்தி வரும் பெரியவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களின் அனுபவத்தை, சமூக அக்கறையை கடந்த காலங்களில் குமரிமாவட்ட முஸ்லிம் சமூகம் பயன்படுத்த தவறிவிட்டது என்பது மட்டுமே உண்மை...

Colachel Azheem

No comments: