Sunday, April 22, 2018

ராஜினாமா கடிதம் என் சட்டைப் பையிலேயே...

அவர் என் மாணவப் பருவத் தோழர். மார்க்க பக்தி மிக்கவர். பலமுறை உம்ராவும் ஹஜ்ஜும் செய்தவர்.பல மொழி அறிந்தவர். பல நாடு கண்டவர்.

மூன்று தலைமுறையாக சமுதாய சேவை செய்யும் கண்ணியமான, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பிறர் நலம் நாடும் பிறவிப் பண்பாளர். வளைகுடா நாடுகளில் பணியாற்றிய காலத்தில் எந்த வேறுபாடும் பாராமல் சிறியதோ பெரியதோ பலருக்கும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தந்த புண்ணியவான்.

பணிக்காலம் முடிந்து ஊர்திரும்பிய சிறிது காலத்தில் மக்கள் பள்ளிவாசல் தலைவர் பொறுப்பை ஏற்கக் கோருவதாகச் சொன்னார். அல்ஹம்துலில்லாஹ் ஏற்றுக் கொண்டு மேலும் நல்லது செய்யுங்கள் என்றேன்.அவ்வப்போது எங்கள் பள்ளிவாசல் நடப்புகளைக் கேட்பார்.சிலவற்றை நடைமுறைப் படுத்திவிட்டுச் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.

எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருப்பதாகவே நினைத்தேன்.

அண்மையில் வழக்கம்போல் தொலைபேசியில் பேசினார்.குரலில் மகிழ்ச்சி இல்லை. ஏன் என்றேன்.அவர் தலைவர் பொறுப்பை நிறைவேற்றுதில் செயற்கையாகச் சந்திக்கும் சிரமங்களை விவரித்தார்.பெரிய அரசியலாக இருக்கிறது என்றார்.அதை விவரிக்கவும் செய்தார்.

சரி, நாமதான் யோசனை வள்ளலாயிற்றே, ஏதாவது சொல்லி ஆறுதல் அளிப்போம் என்று எண்ணி இதற்கெல்லாம் என்ன அல்லது யார் காரணம் என்று கேட்டேன்.
எல்லாவற்றையும் விவரித்தவர் "சிலரைக் கையில் போட்டுக் கொண்டு ஹஜரத் கொடுக்கும் குடைச்சல்தான் அண்ணே" என்றவர் என்ன செய்யலாம் என்றும் கேட்டார்.
ராஜினாமா செய்துவிடுங்கள் என்றேன்.என்ன இப்படி சொல்றீங்க? என் இடத்தில் நீங்க இருந்தால் என்ன செய்வீங்க என்றார். நானும் ராஜினாமாதான் செய்வேன் என்றேன். ஏன் என்றார். விளக்கமெல்லாம் பிறகு; முடிந்தவரை ஆலிம்களோடு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது நல்லது என்றேன்.

பதவி பொறுப்பு என்றாலே பல பிரச்சனைகள் ஆழ்கடல் நீரோட்டம் போல் இருக்கும். அதை எல்லாராலும் பொறுத்துப் போக முடியாது. அதனால்தான் பேரறிஞர் அண்ணா, என் ராஜினாமா கடிதம் என் சட்டைப் பையிலேயே ஆயத்தமாக இருக்கிறது என்று கூறிய சம்பவத்தை விளக்கினேன்.

அதுவும் சரிதான் என்றார் அவர்.

Yembal Thajammul Mohammad

No comments: