Monday, April 9, 2018

எது திட்டமிடல்...?

எது திட்டமிடல்...?

திட்டமிடல் என்பது நல்லதை நாடியோ அல்லது கெட்டதை நாடியோ இருக்கலாம்...! ஆனால் அதற்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுத்து அதை நிறைவேற்றுவது என்பதிலேயே இருக்கிறது நாம் வகுத்த திட்டத்தின் வெற்றி.

காலத்தால் அழியாத கருத்துக்களை நமக்கு விட்டுச்சென்ற
ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் திட்டமிடல் பற்றி தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் சொல்லிவிட்டு போன கருத்து இது...👇

ஒரு மருத்துவரை காண அவரது நண்பர் வருகிறார். வீட்டுவாசலில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, வீட்டுனுள்ளே சென்றுவிட்டு திரும்ப வந்து பார்க்கையில் வாசலில் நிறுத்திவிட்டு போன தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை! உடனே சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.


அதற்கு அடுத்த நாள் காலை அந்த வீட்டிலுள்ள மருத்துவர் வெளியில் வந்து பார்த்தபோது தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை காண்கிறார். எங்கிருந்து காணாமல் போனதோ அதே இடத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

கூடவே அதில் ஒரு கவர் இருப்பதை கண்டு பிரித்து பார்க்கிறார் மருத்துவர். அதில் "ஐயா... நான் திருடனல்ல.. எனது மிகமிக அவசர தேவைக்காக உங்களுடைய இந்த வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டேன். சொல்லாமல் எடுத்துச் சென்றதற்காக என்னை மன்னிக்கவும்! அதோடு எனது குடும்பத்தினருடன் காண வேண்டி இன்று ரிலீஸான ஒரு படத்திற்கு டிக்கட் வாங்கி வைத்திருந்தேன்! அதை இப்போது உங்களுக்கு தருகிறேன் நான் செய்த இந்த காரியத்திற்கு பிராயிச்சதமாக! அதனால் உங்கள் குடும்பத்தினருடன் சென்று திரைப்படத்தை கண்டு வாருங்கள்" என்று எழுதியிருந்தது.

மருத்துவருக்கு ஒரே மகிழ்ச்சி குடும்பத்தினரை கூட்டிக் கொண்டு திரைப்படம் பார்க்கப்போனார்! சென்றுவிட்டு வந்து பார்த்தால் வீட்டில் ஒரு சாமான்கள் இல்லை எல்லாம் திருடப்பட்டிருந்தது...😔
அதைக்கண்டு மருத்துவர் பேரதிர்ச்சியடைந்தார்.

"திட்டமிடல் என்பது திருட்டிற்கும் அவசியம்"... என்று முடித்திருப்பார் தென்கச்சி ஐயா மிக நகைச்சுவையாக!

இதைப்படித்ததும் எனக்கு ஞாபகம் வந்தது நம் அரசியல்வாதிகள் மட்டுமே! காரணம் தன்னை தேர்ந்தெடுத்த குடிமக்களுக்கு நல்லதை நிறைவேற்ற எந்த சரியான திட்டமும் திட்டமிடலும் அவர்களிடம் இல்லை! ஆனால் தனக்காகவும் தான் பெற்ற மக்களுக்காகவும் திட்டமிட்டு கொள்ளையடிக்க நல்ல பல திட்டங்கள் அவர்களிடம் என்றுமே உண்டு!

ஒருவகையில் அந்த திருடன் வைத்திருந்த டிக்கட்டை கண்டு சினிமாவிற்கு சென்ற மருத்துவரைப்போலவே நம் மக்களில் பலரும் இப்போது!

ஆம்.... ஓட்டுக்கு.......

மீதி உங்களுக்கே தெரியும் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை..........! 🙏


Samsul Hameed Saleem Mohamed

No comments: