Tuesday, April 3, 2018

வெகுமதியா! தண்டனையா!! (கொஞ்சம் தத்துவம்

வெகுமதியா! தண்டனையா!!
(கொஞ்சம் தத்துவம்)
@By.Dr.Vaver F .Hsbibullah
வாழும் உலகில்
நாம் நித்தமும் காணும் செய்திகள்
வெகுமதியா இல்லை தண்டனையா!
நண்பர் டாக்டர் தனசிங் கேட்ட
கேள்விக்கு பதில் தருவது சற்று கடினம் தான்.

தந்தையை கொன்ற மகன்
மகனை கொன்ற தந்தை
தாயை கொன்ற மகள்
மகளை கொன்ற தாய்
மனைவியை கொன்ற கணவன்
கணவனை கொன்ற மனைவி
காதலியை கொன்ற காதலன்
காதலனை கொன்ற காதலி
நண்பனை கொன்ற உயிர் நண்பன்
இதில் யார் வெகுமதி
யார் தண்டனை!

பண மோசடிகள்....
அழிந்த தொழிலதிபர்கள்!
பதவி கொள்ளைகள்...
அழிந்த அரசியல்வாதிகள்!
புகழின் போதை...
விழுந்து மறைந்த
நாடக மேடைகள்!
பணம்,பதவி,புகழ் இவையெல்லாம்
வெகுமதியா இல்லை தண்டனையா!

பெற்றோர்களுக்கு குழந்தைகள்
குழந்தைகளுக்கு பெற்றோர்கள்
கணவருக்கு மனைவிமார்
மனைவியருக்கு கணவன்மார்
காதலர்கள் - உயிர் நண்பர்கள்
அமைவதெல்லாம்... உண்மையில்
வரமா! இல்லை தண்டனையா!

மனிதனின் வாழ்வும் வளமும்
அவனது ரத்த பந்தங்கள், உறவுகள்
கைகளில் முடியுமென்றால்...
பாவங்களில் சேர்ந்த பணம்
படுகுழியில் தள்ளுமென்றால்...
மோசடி பதவி சுகங்களே
வீழ்ச்சிகளின் நுழை வாசல் என்றால்!
விளம்பரமாகும் புகழே
வீழ்த்தி விடும் ஆயுதம் என்றால்...
இது வரமா இல்லை தண்டனையா!

ஒன்றின்றி மற்றது
அமையாது என்றால்...
ஒன்றின் கைகளிலேயே
மற்றொன்றின்
முடிவு அமையுமென்றால்...
வினை விதைத்தவன்
வினை அறுப்பான் என்பதும்
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும் என்பதும்
வெகுமதியா இல்லை தண்டனையா!

மனித ஆசைகளை
தூண்டும் எண்ணங்களே
மனித முடிவுகளை நிறைவு
செய்கின்றன.
தனக்கான
வெகுமதிகளையும் தண்டனைகளையும்
மனிதனே தீர்மானிக்கிறான்
அவனே கொள்முதல் செய்கிறான்.
எது வெகுமதி எது தண்டனை
என்று புரியாமல் தடுமாறும் மனிதன்
வெகுமதியில் ஒளிந்திருக்கும்
தண்டனையையும்,தண்டனையில்
ஒளிந்திருக்கும் வெகுமதிகளையும்
அறியாமலே தேர்வு செய்கிறான்.
ஒன்றை தொட்டே மற்றொண்டை
பெற்றுக் கொள்கிறான்.
மனித விதிகள் தடம்புரளலாம்
இறை விதிகள் என்றும் தவறுவதில்லை.
@vavar F Habibullah

No comments: