Monday, October 9, 2017

எழுதியது கடிதம் அல்ல ....!

கைப்பட கடிதம் எழுதும் பழக்கம் தற்காலத்தில் வழக்கு குறைந்து வருகிறது. இது மிகவும் வருத்தத்துக்குரியது.
தொண்ணூறுகளில் வரை பிறந்தவர்கள் மாதம் ஒருக்கடிதம் யாருக்காவது எழுதுவது இயல்பாய் இருந்தது. உறவின் தொடர்புகளை இறுகக்கட்டி வைத்திருந்தது.
மின்னஞ்சலும் குறுஞ்செய்தியும் முன்னேற்றம்தான் விரைவுதான் ஆனாலும் கடிதத்தொடர்பில் இருந்த ஆத்மார்த்தம் இருக்கவில்லையே என்று எண்ணுகிறேன்.

எண்பதுகளின் தொடக்கத்தில் நான் உகாண்டா வந்த புதிதில் தகவல் தொடர்பு என்பது தபாலும் தந்தியும்தான். டெலஸ் வசதி இருந்தாலும் அது பெரும்பாலும் வர்த்தக மற்றும் பன்னாட்டு வங்கி பரிவர்தனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டது. தந்தியும்கூட தபால்பெட்டி இலக்கத்தில்தான் வந்து சேரும்.
அப்படியானால் கடிதம் ? அவ்வப்போது வந்து சேரும்போது படித்து செய்தியை அறிந்துகொள்ள வேண்டியதுதான்.
நான் உகாண்டா வந்த புதிதில் தினமும் மாலையில் வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் முதல்வேலை அன்றய தியதியிட்டு எங்கள் வாப்பாவுக்கு கடிதம் எழுதுவதுதான். இவ்வாறாக திங்கள் முதல் சனிக்கிழமைவரை எனக்கு சுவாரசியமாக இருந்ததை எல்லாம் விலாவாரியாக எழுதி விடுமுறை தினமான ஞாயிறன்று தலைமை தபால்நிலயத்திற்கு சென்று அனுப்பிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்போது கிடைக்கும் மனப்பாரத்தை இறக்கிவைத்த ஆத்மாத்த திருப்தி எப்போதும் கிடைக்கப்போவதில்லை.
ஏனென்றால் எழுதியது கடிதம் அல்ல உள்ளம்.
அப்போதைய கடிதஎழுத்துதான் முகநூலில் இப்போது எழுதுதற்கு பயிற்சிக் களமாக அமைத்தது என்றால் அது மிகையாகாது.
எங்கள் வாப்பாவும் அதுபோலவே வாரம் தவறாமல் எனது தபால் போய்க்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் குடும்ப மற்றும் நாட்டு நடப்புகளை எழுதி அனுப்பிவிடுவார்கள்.
அப்போதெல்லாம் இந்தியாவிலிருந்து கடிதம் உகாண்டா வந்துசேர ஓரிரு மாதங்களாகிவிடும்.
வாப்பா வாராவாரம் எழுதிய கடிதங்கள் அவர்கள் இறப்புக்கு பின்னரும் காலதாமதமாக வந்துகொண்டே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல, வாப்பா இறந்த செய்தியை தந்தியில் அனுப்பி இருந்தார்கள் அது என்கையில் நான் அப்போது வேலை பார்த்து வந்த மாசாக்கா எனும் ஊரில், கிடைக்கும்போது நாற்பது நாட்கள் கடந்துபோய் விட்டிருந்தது.
உலக தபால் தினமான இன்று கடிதம் எழுதும் நல்லபழக்கத்தை நட்புகளுக்கு நினைவுகூறுவதில் திருப்த்தி கொள்கிறேன்.
உகாண்டா நினைவுகள் ....!
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை

No comments: