Wednesday, April 15, 2015

நீயா...இல்லை நானா.... !/ Raheemullah Mohamed Vavar

நீயா...இல்லை நானா.... !
குழந்தையை சுமக்கும் பாரத்தையும், அதை இறக்கி வைக்கும் நேரத்தின் வேதனையையும் சொல்ல வந்திருக்கிறேன், மாதம் விடாமல் தொரத்தும் அவஸ்தைகளில் உண்டாகும் மன அழுத்தத்தை வலிக்கும் வரிகளில் சொல்லி வார்த்தைகளில் அழுது ஆறுதல் கொள்ள அமர்ந்திருக்கிறேன், போற்றப்பட வேண்டிய பெண்மை, தூற்றப்படும் கொடுமையை எடுத்துச் சொல்லி, காட்டப்பட வேண்டிய கருணையை ஆண்களிடைருந்து வலுக்கட்டாயமாக தட்டிப் பறித்து விடத்தான் வந்திருக்கிறேன் - என்பன போன்ற அதி அத்தியாவசியமான காரணங்களைச் சொல்லி அதனால் கவிதை எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டேன் என்பது போன்று ஆதங்கப்பட்டு சொல்ல வரும் மங்கயரைப் பார்த்து, அலி அண்ணன் ( Mohamed Ali ) குறிப்பிட்டதைப் போல், நம் நேரத்தை அவசியமில்லாமல் தொலைத்து விட்டோமே என்கிற ஆதங்கம்தான் பார்க்கிற நமக்கு ஏற்பட்டது.
இப்படி பெண்கள் பக்கம் என்றால், ஆண்கள் பக்கம் அதைவிட மோசம். என்ன கதையெல்லாமோ அளந்து, கடைசியில், அசைந்தாடிய ஒரு பெண்ணின் கைகளைச் சொல்லும் ஒருவர், அந்த அசைவின் நளினங்களையும் அசைவதில் தெரியும் உணர்வுகளையும் ஆஹாஹா, எப்படியாக சொல்லி வைத்திருக்கிறார் கவிஞர் என்று உச்சு கொட்டுவதை பார்க்கும் போது, அச்சென்று தும்மல் வந்து, ஏண்டா சாமி, எழுதின தலையெழுத்தை இதையெல்லாம் பார்த்து தொலைக்கவும் வேண்டியா சேர்த்து எழுதி விட்டாய் என்றுதான் நம்மையே நாம் வருத்தப்பட வேண்டி இருந்தது.
மொத்தத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் நீ- எல்லாம் என்னாய்யா மனுஷன், நாங்கள்ளாம் உன்னை நம்பி வந்தோம் பாரு, அதச் சொல்லணுமய்யா- என்கிற விதத்தில், வாய்யா, போய்யா என்றே அமைந்திருந்தது.

அதுவெல்லாம் சரி, இங்கே இது என்ன?
வார்த்தை மணக்குதே
மலர்ந்தது உன் பூவிதழா
தேகம் சிலிர்க்குதே
தொட்டதுன் பனிவிரலா
மனம் அள்ளுதே
ஆடிடும் கடலலையா நீ
மோகம் துள்ளுதே
முகமன் சொல்லவே
மேகம் விலகிய
மலை முகடா ?
இன்று காலையில்
நடந்த சாலையில்
உனை கடந்து
நான் சென்றேன்
என்றா சொன்னாய்
நிஜமதுவென்றால்
ஏழு கடலையும்
இமைப் பொழுதில் கடக்கும்
அற்புத வரமெனக்கு
அலாவுதீன் விளக்குபோல்
இனிய பூதமே
வா என்பேன் !
அன்று
அருகில் நீயிருக்க
ஆர்வமாய்
நான் சொன்னது
ஆசையாய் பலித்தது
பெண்ணென்று சொல்ல
பெண்ணில்லை நீ
சாமுத்திரிகா இலட்சணங்கள்
இலட்சணமாய் கொண்ட
சமுத்திரப் பெண்ணே நீயென்று !
இன்று
பூத்து வரும்
சந்தோஷக் குமுழிகள்
ஆர்ப்பரிக்கும் உன்
நீலக் கண்களிரண்டால்
அழைக்கிறதே
முத்துக் குளிக்க வாவென்று
கடலின் ஆழம் காட்டியவளே
மலையின் உயரம் காட்டுவாயா !!
(எங்களுக்கும் இத்துனூண்டு தெரியுமுலா )
இதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அலி அண்ணன் Mohamed Ali
குறிப்பிட்டது போல், முகநூலில் கவிபாடும் ‘அபூசூர்வுல்லா, இத்லாம்கவி’ போன்ற சிறந்த கவிஞர்கள் சிலரை தேர்ந்தெடுத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்தால், இதற்காகவே ஒரு பெரிய கூட்டம், செட்யூல் வாசித்து, தேதிகளை மனதில் நிறுத்தி, பங்கு பெறுவோர் எண்ணிக்கையில் புதிய சாதனை ஏற்படுத்தும் என்பது சந்தேகம் கடந்த நம்பிக்கை


 Raheemullah Mohamed Vavar

No comments: