Monday, April 13, 2015

அன்பான அப்பா

ஏப்ரல் 24, 2014 - ஜெயகாந்தன் பிறந்தநாளையொட்டி ‘புதிய தலைமுறை’ வார இதழுக்காக, அவரது இளைய மகள் தீபா எழுதியது

ஓர் எழுத்தாளருக்கு யாரெல்லாம் அன்பர்களாக இருக்கக் கூடும்? வாசகர்கள், வளரும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், கவிஞர்கள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள்; யோசித்துப் பார்த்தால் இன்னும் ஏழெட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார்கள்.
ஜே.கே.வை நேசிப்பவர்களை இம்மாதிரி எந்தப் பட்டியலிலுமே சேர்க்க முடியாது. அவரது ஓர் எழுத்தை கூட வாசிக்காத டாக்டர், எழுத்தறிவே பெறாத ஆட்டோ ஓட்டுனர், கானா பாடகர்கள், கஞ்சா வியாபாரிகள், இன்னும் ஏராளமான விளிம்புநிலை மனிதர்கள் என்று ஒருவருக்கொருவர் எவ்வகையிலும் ஒப்பிடமுடியாதவர்கள் எல்லாருக்குமே அவரைப் பிடித்திருக்கிறது.

சமீபத்தில் அவருக்கு உடல்நலம் குன்றியபோது இதை அனுபவப் பூர்வமாகவே உணர்ந்தேன். தினமும் நாற்பது கிலோ மீட்டர் பைக் ஓட்டிவந்து அவர் கூடவே இருந்த திரு.பழனி. மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றிருந்தாலும், அங்கிருந்து சதா இவரது உடல்நலனை விசாரித்தபடியே இருந்த டாக்டர் பூங்குன்றன். பாளையத்தம்மன் கோயில் பிரசாதத்தோடு வந்து, கண்களில் நீர்மல்க நெற்றியில் விபூதி பூசிவிட்ட ஆட்டோ செல்வராஜ். இன்னும் நிறையப் பேரை சொல்லிக்கொண்டே போகலாம். மனிதர்களிடம் அவர் காட்டிய பேரன்பு எத்தனை மகத்தானது என்பதற்கு அவர் தினுசுதினுசாய் சேர்த்துவைத்திருக்கும் நண்பர்களே சாட்சி.

விதிகளுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டு ஒரு விஷயத்தை நம்மால் முழுமனதோடு நேசிக்க முடியுமா? சமூகத்தின் விதிகளை துச்சமாக மதித்தவர்களே சமூகம் மீது பெருநேசம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்து பிரமிக்கும் ஜே.கே.வேறு. என்னுடைய அப்பா ஜெயகாந்தன் வேறு என்று ஒரு காலத்தில் தீர்மானமாக எனக்கு தோன்றியிருக்கிறது. எனக்கும் அவரது மடத்தில் இடம் கிடைத்திருந்தால் ஒருவேளை இந்த எண்ணம் மாறியிருக்கலாம்.

”உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. உங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள் வழியே உலகுக்கு வந்தவர்கள்” என்கிற கலீல் ஜிப்ரானின் வரிகளை வாசிக்கும் போதெல்லாம், அப்பா இப்படித்தானே நம்மை நடத்தினார், வளர்த்தார் என்று தோன்றும். எங்களுடைய ஆசைகளுக்கு அவர் எவ்வித தடையும் விதித்ததில்லை. கனவுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் குறுக்கே நின்றதில்லை. எங்கள் மீது அவருக்கு எதிர்ப்பார்ப்பில்லாத பேரன்பு உண்டு. எத்தனை பெற்றோருக்கு இது கை கூடுகிறது?

நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது கதைகள் சொல்லுவார். வேடிக்கைப் பாடல்கள் பாடுவார். பள்ளிக்குக் கிளம்பும்போது தினமும் அவர்தான் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பார். ஷூவுக்கு லேஸ் கட்டிவிடுவார். பள்ளி முடிந்து ரிக்‌ஷா வராத நாட்களில் யாரையாவது சரியான நேரத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார். ஒருமுறை கூட பள்ளிவிட்டு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நாங்கள் காத்திருந்ததில்லை. ஒருமுறை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவரே வந்தது அழகானதொரு நினைவு.

அற்பத்தனங்களுக்கு இடங்கொடாமல், சமரசமற்ற பெருவாழ்வினை வாழ்ந்து காட்டுவதுதான் நம் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் வெகுமதியாக இருக்கமுடியுமென்று, ஒரு தாயான பின் உணர்கிறேன். எனக்கு இந்த சிந்தனை தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தவர் அப்பா.


எழுதியவர் யுவகிருஷ்ணா
நன்றி : http://www.luckylookonline.com/

No comments: