Saturday, March 30, 2013

சகோதரனே

அன்புடன் புகாரி அனைவருக்கும் நன்றி. சவுதி அரேபியாவில் எடுத்த புகைப்படம் இது. இடதுபுறம் இருப்பது தம்பி ஹாலிது. வலது புறம் இருப்பது நான். நடுவில் இருப்பது வடகரை/அரங்கக்குடி அப்துல் கரீம்.

-அன்புடன் புகாரி
======================

பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே

சட்டென்று
எவரும் சொல்லும்
ஒரே வித்தியாசம்
உனக்கும் எனக்கும் என்ன

நகலெடுத்த நீ
எனக்குச்
சற்றே சிறியவன்

நேற்றைய நானாகத்தானே
இன்றைய நீ இருக்கிறாய்
இருந்தும்
இன்று நீ வேறு நான் வேறு
என்பதுதானே நிஜம்

உள்ளே குதித்தோடும்
இரத்த நதிகள் என்னவோ
ஒன்றுதான் என்றாலும்

அவற்றைக் கொப்பளிக்கும்
இதயங்கள் மட்டும்
வேறு வேறுதானே

நம்
தாயும் தந்தையும்
சொல்லித்தந்த பாடங்கள்
நமக்கு ஒன்றேதான்
என்றாலும்

நம் பயணங்கள் மட்டும்
வேறு வேறு தானே


பிரிந்தோம்

மீசைகளும் ஆசைகளும்
வளர வளர
நாம் பிரிந்தோம்சட்டைகளுக்காக வந்தச்
சண்டைகள்
சட்டுச் சட்டென்று
விட்டுப் போனாலும்

சொத்து சுகமென்று
வந்த சண்டைகள்
நம்மைச்
சும்மா இருக்கவிடவில்லையே

வெறுமனே ஓடும்போது
கரைகளைக் காயப் படுத்தாத
நம் நதிகள்
கோபம் என்றதும்
நாடு காடு என்றா பார்த்தன

உனக்கும் எனக்கும்
வீரம் விளைவித்தது
எந்தப் பாலோ
அந்தப் பால்தானா
நமக்குள்
விரோதத்தையும்
விளைவித்தது

நாம் பிரிந்தோம்

இந்த இடைவெளியில்
எனக்கும் உனக்கும்
எத்தனையோ உறவுகள்
புதுப் புது பந்தங்கள்
இரத்தக் கிளைகள்

எல்லாமும் ஆகின

இன்றோ
நானென் சாய்வு நாற்காலியின்
தனிமை மடியில்
மனதைத்
தொங்கப் போட்டுக்கொண்டு
மல்லாந்து கிடக்கிறேன்

*

பருகியதில் பருகியவனே
தொட்டில் முதல் தோழனே
இரத்தப் பிரதியே

நீ எங்கே

நீர் நிறைந்த
என் விழிகளுடன்
இன்று நான்
உன்னைத் தேடுகிறேன்.
- அன்புடன் புகாரி
 Source : http://anbudanbuhari.blogspot.

3 comments:

mohamedali jinnah said...

உடன்பிறவா அன்பு தம்பியே அருமையாக உன்னால் மட்டும் இப்படி எப்படி கவிதை எழுத முடிகின்றது! கண்டதையும் ,நினைத்ததையும் அருவியாய் கொட்டி மற்றவரையும் மகிழச் செய்கின்றாயே! அந்த திறமையை உனக்கு கொடுத்த இறைவனை நினைத்து நன்றி சொல்லி நீ தொழுது வருவதனை இறைவனும் அறிவான். இருப்பினும் ஒன்று என்னால் அறிய முடிகின்றது எச்சில் பால் குடித்த தம்பியானாலும் உடன் பிறவா தம்பியானாலும் உன்னோடு இணையாக ஓடி வரமுடியாது . இறைவன் தான் விரும்பியவர்களுக்குதுத் தான் அதனை தந்தருள்வான்.அவன் கொடுப்பதும் ,எடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் நன்மையாகத்தான் இருக்க முடியும்.
தொப்புள் கொடி பாசத்தினை நினைவினை நிறுத்தி கவிதை வடிக்கின்றாய் . அதனை உன்னால் நீ நினைத்தாலும் நிறுத்த முடியாது . குருதியொடு கலந்த கலவை உறவு. குருதி ஓடும்வரை உறவும் ஒட்டிக் கொண்டே ஓடும் . நீ ஓடிக்கொண்டே இரு அதனை கண்டு ஆசை அடங்காமல் உன்னைக் கண்டு மனம் மகிழ உன் பின்னே நானும் ஒடிவருவேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னே அன்பு வரிகள்...

விரைவில் மனங்கள் ஒன்று கூடும்...

வாழ்த்துக்கள் ஐயா...

mohamedali jinnah said...

திண்டுக்கல் தனபாலன் வந்தால் எனக்கு திண்டுக்கல் ஹல்வா சாப்பிட்ட சுவை வருகின்றது ,நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு