Tuesday, March 12, 2013

நானும் ஆஃப்ரிக்காவும்

விரிந்து படர்ந்து கிடக்கும் விக்டோரியா ஐலேண்ட் செல்லும் பாதை எழிலாகவும் வனத்துடனும் காணப்பட்டது. விக்டோரியா ஐலேண்ட் பாலம் உலகிலயே நீண்ட பாலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. நான் மட்டும் தனியாக சென்றதால் (‘தல’ என்னுடன் வரவில்லை) “மொபோ” வேண்டாம் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வை மட்டுமே நம்பியவனாக  நன்கறிந்த வாகன ஓட்டியுடன் சென்றேன்.

அவரோ ரொம்ப(வே) நல்லவர் , இண்டியாவை காணவேண்டும் என்பது அவரின் வாழ்நாள் அவாவாம். அதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருப்பதாய் கூறினார். எத்தனை பேரிடம் இந்த பிட்டையே போட்டுக் காட்டிக்கொண்டு இருக்கின்றார் என்பது தெரியவில்லை.

லெக்கி பெனிசுலாவை நோக்கி பறக்கும் எங்கள் பயணம்…

வழியெங்கும் பச்சைப்பசேல்
ஐலேண்டில் உள்ள மூன்று முக்கிய கட்டிடங்கள்.

போகும் வழிகளெல்லாம் கால்முளைத்த வீடுகள் கடலில் இருப்பதைக் கண்டு என்னோடு வந்த (வாகன)ஓட்டியிடம் கேட்டேன். அவர் “இவைகளெல்லாம் மீனவர்களின் வீடுகள் இந்த கடலே அவர்களுக்கு எல்லாமே, ஆதலால் அதன் மீதே தம் இருப்பிடங்களை அமைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்கள்” என்றார். வக்கனையாக சமைத்து சாப்பிட மற்றவர்களுக்கு மீனை வாரி கொடுக்கும் இவர்கள் வாழ்வு அந்தரத்தில் தொங்குவது கண்டு பரிதாபமாக இருந்தது.

கால்முளைத்த வீடுகள் ஐபோன் பிக்சர்தான் தெளிவா இருக்கா ?

ஒரு வழியாக லெக்கி இலவச மண்டலத்தை அட அதாங்க ஃபீரிஜோன் (free zone) சென்றடைந்தாகிவிட்டது. அங்குமிங்குமான அலைச்சல்களுக்கு பின்னர் ஒரு நிறுவனத்தை கண்டு அது ரொம்பவும் பெரிதாக தெரிந்ததால் அங்கு சென்றோம்.

சந்திப்பின்போது,மெனேஜர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட ஒருவர் “உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்களிடம் சில மில்லியன் டாலர் பணம் உள்ளது நீங்கள் சப்ளை செய்யும் பொருட்களுக்கு பேமண்ட ஆக அதனை நாங்க உங்க அக்கவுண்டுக்கு மாற்றிவிடுகின்றோம்” என்றார். நானும் சந்தோஷமாக ஆஹா! ஒரு திமிங்கலத்தை அல்லவா பிடித்துவிட்டோம் என்று ஒரு செகண்ட சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார் “அதற்கு முன் நீங்கள் 4 கண்டெய்னர் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் அது எங்கள் போர்ட்டை அடைந்தவுடன் நாங்கள் பணத்தை அனுப்பி விடுக்கின்றோம்” என்றார்.

ஆஹா ஹாட்மெயில் அக்கவுண்ட் நான் 1999-ல் தொடங்கினதிலிருந்து வந்து கொண்டிருக்கும் மில்லியன் டாலர், செத்துப் போய்ட்டார் என்று படித்து படித்து மனதில் பதிந்திருந்த அந்த பிம்பங்கள் உண்மை தோற்றங்களாக நம் முன்னிருப்பதைக் கண்டு ஆடிப்போய்விட்டேன். சமாளித்துக் கொண்டு நானும் அவரிடம் “துபாய் திரும்பியதும் எங்கள் நிதி ஆலோசர்களிடம் அப்ரூவல் வாங்கிவிட்டு உங்ளைத் தொடர்புக் கொள்கின்றேன்” என்று அவர்களின் வீட்டு வாயிலோடு சொன்னதை மறந்துவிட்டு ‘ஜூட்’ விட்டேன். பெரிய டீமையே அவர் வைத்துக் கொண்டு இதே தொழிலாகத்தான் திரிகிறார் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்திப்பிற்கு பிறகு காதில் கடித்தார்கள்.

இன்னும் சில மார்க்கெட்டுகளைப் பார்க்க வேண்டி உள்ளேயிருக்கும் சில ஏரியாக்களை வட்ட மடித்தோம். வறுமையின் கொடுமையையும், வாடிய முகங்களையும் காண சகிக்காமல் வண்டியை லாகோஸை நோக்கி திருப்பச் சொன்னேன்.
லெக்கியின் லக்கி மார்க்கெட்
பெரும்பாலான மக்களின் காலை உணவு விடுதி இதான்

லாகோஸ் வந்தடைந்ததும் ஒரு சில முன் அனுமதி பெற்ற சந்திப்புக்களை ஹோட்டலிலேயே முடித்துவிட்டு கொஞ்சம் இணக்கமாக நம்முடன் தொழில் செய்ய விரும்பியவர்களின் தகவல்களைத் திரட்டிக்கொண்டு ஹோட்டலை சுமார் 5 மணி நேரத்திற்கு முன்னரே காலி செய்து விட்டு ஏர்ப்போட்டில் போய் அமர்ந்துவிடலாம். இந்த ஹோட்டலுக்கு ஏர்ப்போர்ட் எவ்வளவோ மேல் என் தல கூறியதால், அனைத்தையும் பேக் செய்துவிட்டு ஆயத்தமானோம்.

நைஜீரிய காட்டுத்தேன் நல்லது என்பதால் ஒரு கிலோ வாங்கி என் ஹேண்ட லக்கேஜில் வைத்துக் கொண்டேன். ‘தல’ ஒரு 100 நைரா பணத்தை போர்டிங் கவுண்டரில் கொடுத்து எக்ஸிட் பக்கத்தில் சீட் வாங்கிவிட்டார்.
கிளம்புமுன் ஹோட்டலின் சன்னலிலிருந்து எடுத்தது
முர்த்தலா முகம்மது ஏர்ப்போர்ட்டில் புறப்படுமுன் நான், மிஸ்டர் போட்டோ ஜெனிக்க்கு தேவையான அடையாளம் ஏதும் உண்டா ?:)

சுங்க சோதனையில் சுரண்டி எடுத்து விட்டார்கள். எங்க வாப்பா பெயர் உடைய ஒரு செக்யூரிட்டி ஆபிஸர் “வாவ்” உன் வாப்பா பெயரும் என் பெயரும் சேம் சொல்லிவிட்டு ஆர் யூ முஸ்லிம்?? என்னிடம் கேட்டார் “ யெஸ்” என்றடவுடன் மாஷா அல்லாஹ்! என்று  மகிழ்ச்சியுடன் அவர் குத்திய ஸ்டாம்பில் எல்லாம் கேட்டிலேயும் கேள்விகள் எதுவும் இல்லாமல் வெளியேறினேன்.

கடைசியில் போர்டிங் போகுமுன் உள்ள செக்கிங்கில் ”தேன்” அனுமதியில்லை என்றனர், ”ஏன்” என்று காது புடைத்து கொண்டு கேட்கும் பழக்கம் இல்லாததால் ”என்ன தீர்வு” என கேட்டேன். அவர்களின் சைகளை புரிந்தவனாக, பெண்னொருத்தி “நீங்க அந்த பெரிய ஆபிஸரைப் போய் பாரும்” என்றார். கம்பீரமாக கன் செக்யூரிட்டியுடன் இருந்த அவரை தயக்கத்துடன் நெருங்கினேன், அவரோ “ஹவ் ஆர் யூ ?” என்றதும் நானும் பதிலளித்துவிட்டு சொன்னேன் ‘தேனை’ப்பற்றி அதற்கும் அவர் ”ஓ எமிரேட்ஸில் அனுமதிப்பது இல்லை” என்றார்.

நான் சொன்னேன் கொண்டு செல்ல வேண்டும் “1000 நைரா கொடுத்தா நேரா விட்டுர்ரேன்” என்றார். பயணிகளின் பாதுகாப்பு இந்த பணத்தால் காம்பரமைஸ் ஆகுதா ? என்று ஆச்சரியப்பட்டு விட்டு “என்னிடம் பணம் இல்லை ஒரு பாடி ஸ்பிரே உள்ளது அதை வேண்டுமென்றால் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள்” என்றேன்.

நமட்டுச் சிரிப்பை சிந்திய அந்த பெரிய ஆஃபிஸர் அதற்கும் இறங்கி வந்து அந்த 3$ மதிப்பு உள்ள ஸ்பிரேயைப் எடுத்துக்கொண்டு ”ஹே வ சேஃப் ஜோர்னி” என்று சொன்னவுடன் அழுவதா? சிரிப்பதா? என்று தெரியாமலே விமாப் பயணிகள் காத்திருப்பு பகுதியை நோக்கி நடந்தேன்.

எமிரேட்ஸில் ஏறியதும் நம் சொந்தவீட்டிற்கு வந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு எல்லா பயணத்திலும் ஏற்படுகின்றது.

பயணத்தில் பல நன்மையான / தீமையான விசயங்கள் இருந்தாலும் பல படிப்பினைகளையும்,அனுபவங்களையும்,அல்லாஹ் நம்மை வைத்திருக்கும் உயர்வான நிலையை உணர்த்தி அவனுக்கு நன்றி மேலும் அதிகமாக செலுத்த காட்டித்தந்த நைஜீரியா பயணம் வாழ்வில் மறக்கமுடியாதது.

அல்லாஹ்வின் உதவியால் எல்லா நடைமுறைகளும் முடிந்து என்னுடைய முதல் இரண்டு கண்டெய்னர் ஆர்டர் இதனை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில் சைனாவிலிருந்து கிளம்பிற்று,முதல் பயணத்திலயே ஒரு நாட்டில் அதுவும் நைஜீரியா போன்ற நாடுகளில் மொத்த வியாபாரம் கிடைப்பது என்பது சாத்தியம் குறைவு அல்லாஹ்வின் கிருபையால் என் விசயத்தில் அது நேர்மாற்றமாக இருந்தது.

எனக்கு இருக்கின்ற இருபத்தி நாலு மணிநேரத்தில் அலுவலக வேலையும் அனுபவச் சூழலையும் கோர்த்து எழுத அவகாசம் குறைவே, பயணம் மற்றும் மற்ற வேலைச் சூழலுமே இந்த பதிவுக்கான தாமதம்.

அடுத்து எத்தியோப்பிய பயணத்தைத் தொடரலாமா !?

முகமது யாசிர்

Source : http://adirainirubar.blogspot.in/

No comments: