ரூமி என்கிற பிரபஞ்சப் பொதுச்சொத்து..!!
நிஷா மன்சூர்
"நான்
பார்ப்பதில்லை என்பதை விட்டுவிட்டு
நான் பார்க்கிறேன் என்பதாக மாறிவிடு.
நான் அறியமாட்டேன் என்பதை விட்டுவிட்டு
நான் அறிவேன் என்பதாக மாறிவிடு"
-மஸ்னவி
ஷெரீஃப் 6ம் பாகம் ( 143-23325)
சென்னை
ஃபஹீமிய்யா டிரஸ்ட் மூலமாக சமீபத்தில்
மெளலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களது
மஸ்னவி
ஷெரீஃபின் ஆறாம் பாக வெளியீட்டு
விழா நிகழ்வு நேர்த்தியாக, மிகச்சிறப்பாக
நடைபெற்றது.
ஆறு பாகங்களையும் ஒரு தேர்ந்த தவம்போல
மொழிபெயர்ப்பு செய்த நரியம்பட்டு சலாம்
அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட எவ்வித
மரியாதையையும் பாராட்டுகளையும் தலையில் தாங்கிக் கொள்ளாமல்
ஏன், ஏற்புரையோ அனுபவ உரையையோகூட நிகழ்த்தாமல்
ஒரு துறவியைப்போல மேடையின் மூலையில் அமர்ந்திருந்தார்.
ஒரு கனமான ஆக்கத்தை வெளியிடும்போது
அதனை வாசிக்காமல் உரை நிகழ்த்துவது பார்வையாளர்களை
ஒருபோதும் வாசிக்கத் தூண்டாது. மேலும் படைப்பின் ஆகிருதியையோ
ஆழ நீளங்களையோ கோடிட்டுக் காட்டவும் செய்யாது. அதிலும் மேடைப் பேச்சின்
ஜாலங்கள் தேர்ந்தவர் எவரேனும் மேடையேறினாலோ ஒட்டுமொத்த நிகழ்வும் திசைமாறும் அபாயமும் நிகழக்கூடும். எனினும் இந்நிகழ்வில் உரையாற்றியோர்
பெரும்பாலும் ரூமி மெளலானாவின் வீச்சையும்
வீர்யத்தையும் உணர்ந்து வெளிப்படுத்த முயன்றது போற்றத்தக்கது.
வாசிப்பு
அருகிவிட்ட தமிழ் இஸ்லாமிய சூழலில்
தம் ஊனை உருக்கி வார்த்து
இதுபோன்ற மொழியாக்கங்களைக் கொண்டு வருபவர்கள் காலாகாலத்துக்கும்
பாராட்டப்பட வேண்டியவர்கள். நிச்சயமாக இந்த மஸ்னவி மொழிபெயர்ப்புகள்
காலப் பெட்டகமாக மிளிரக்கூடியவை.
1.ரூமியின்
வீச்சும் வீர்யமும்
கடந்த பத்து வருடங்களாக, முன்னெப்போதும்
இல்லாத வகையில் மெளலானா ரூமியின்
படைப்புகள் உலகளாவிய அளவில் பெருமளவில் வாசிக்கவும்
உள்வாங்கவும் விவாதிக்கவும் பட்டுக்கொண்டிருக்கின்றன. நீண்ட நெடுங்காலமாக பார்ஸி
மூலமாக உர்து மொழியிலும் தமிழிலும்
மொழிபெயர்ப்பு நூற்கள் வந்துகொண்டிருந்த போதிலும்
அவை வாசிப்பின் தலைவாயிலை அண்மிக்காத முஸ்லிம்களின் தனிச்சொத்தாகவே வெற்றுச் சுமையாக அலமாரிகளில் வீற்றிருந்து
வீணாகி விட்டன. இஸ்லாமிய வாசிப்பு
என்பது மிக மிக அருகிவிட்ட
கடந்த ஐம்பதாண்டுகளில் இஸ்லாமிய அறிஞர்கள் மூலமாக மொழியாக்கம் செய்யப்பட்ட
நூற்களை காசு கொடுத்து வாங்கிய
சமூகம் அதன் மூலமாக மறுமையின்
நன்மையை நாடியதே அன்றி அந்நூற்களை
வாசித்து பயன்பெற மெனக்கெடவில்லை.
இன்றளவும்
மஸ்னவி ஷெரீஃபை பள்ளிவாசல்களுக்கும் இஸ்லாமிய
நூலகங்களுக்கும் காசுகொடுத்து வாங்கி வக்பு செய்ய
முன்வரும் கனவான்கள் தமக்கும் ஒரு பிரதி வாங்கி
வாசிப்போம் என்று நினைப்பதில்லை. வக்பு
செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மை
மட்டுமே நம் ஆத்மாவை ஈடேற்றும்
என்பதுதான் எவ்வளவு கொடூரமான நம்பிக்கை..?
பள்ளிகளிலும் நூலகங்களிலுமாவது அவை வாசிக்கப் படுகின்றதா
என்று பார்த்தால் அதுவும் மிகச் சொற்பமே.
ஆக, சூடான பிரியாணியின் கடுஞ்சுவை,
நாவிலும் சிந்தனையிலும் ஊடுருவிப் பாய்ந்ததால் வாசிப்பின் சுவையுணர முடியாத அளவுக்கு நாவின்
சுவை மொட்டுகள் மரத்துப்போன இஸ்லாமிய சமுகத்தில் பண்டைய தமிழ் இலக்கிய
நூற்களும் பீரப்பா பாடல்களும்,குணங்குடி
மஸ்தான் அப்பா பாடல்களும்,சீறாப்புராணச்
செய்யுள்களும்,இன்னும் அரபுத்தமிழ் இலக்கியங்களும்
கிஸ்ஸாக்களும் கஞ்சனிடம் மிகுந்து வழியும் செல்வம்போலச் செல்லரித்துக்
கிடக்கின்றன.அவற்றை மீட்டெடுத்து பொதுச்சமூகத்தில்
உலவ விட்டாலாவது அந்தப் பொக்கிஷங்கள் சமூகத்திற்கு
உதவுபவையாக அமையும்.
2.தமிழ்
மொழிபெயர்ப்புகளின் பக்த மனோநிலை அணுகல்களும்
ரூமியை இஸ்லாமிய நீக்கம் செய்யப்படுதலும்
பாரசீக
மொழியில் சொற்கட்டுகளுடனும் தாள லயத்துடனும் ரூமியால்
எழுதப்பட்ட இக்கவிதைகளை பாரசீகம் அறிந்த ஒருவர் வாசிக்கும்போது
அம்மொழியின் வனத்தில்/வனப்பில் முற்றிலுமாகத் தொலைந்துபோக நேரிடும். அதனால்தான் பாரசீக நேரடி மொழிபெயர்ப்புகள்
ஒருவிதமான பக்தமனோநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன.
இந்நிலையில்
மெளலானாவின் படைப்புகள் ஆதி பாரசீக கவிமொழியின்
கட்டுமானத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நிதர்சனம் மிகுந்த சொற்செதுக்கல்களாகத் தீட்டப்பட்டு
ஆங்கிலத்தில் ராபர்ட் ப்ளை,ஜொனத்தன்
ஸ்டார்,கபீர் ஹேல்மின்ஸ்கி தம்பதியினர்,
நாடெர் கலீலி,இப்ராஹிம் கமர்ட்,ஜான் மொய்ன்,நெவிட்
எர்ஜின் ஆகிய பலராலும் மொழியாக்கம்
செய்யப்பட்டது.
அவற்றில்
கோல்மன் பார்க்ஸ் மிக மிக முக்கியமானவர்.
(ரூமியின்
படைப்புகளை மொழிபெயர்க்கத் தூண்டப்பட்ட சரித்திரத்தை கோல்மன் பார்க்ஸ் சுவையாக
விவரிக்கிறார். அது இன்னொரு தனிக்
கட்டுரையாக விரியும். ) அந்த மொழியாக்கப் பிரதிகள்
ஒட்டுமொத்த உலகிலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. மேற்குலகம் லத்தீன் அமெரிக்க நாடுகள்
உட்பட்ட உலகின் மூலை முடுக்குகளில்
எல்லாம் ரூமியின் ஒவ்வொரு வரிகளும் கொண்டாட்டத்திற்கு
உரியவையாக பொலிவடைந்து பரவின.
ஆனால் இஸ்லாமிய ஞானத் திரட்டுகளாக, மஃரிபா
எனப்படும் மறைபொருளின் விளக்கமாக பொருள் விரியும் மெளலானா
ரூமியின் வரிகளை,வெறும் கவித்துவப்
பிரதிகளாக முன்வைக்கும் ஆங்கில மொழியாக்கம் "ரூமியை
இஸ்லாமிய நீக்கம்" செய்யும் முயற்சியாக முன்னெடுக்கப் படுகிறது என்கிற குற்றச்சாட்டையும் நாம்
கவனிக்க வேண்டியுள்ளது.
ரூமியை
ஈரமிகுந்த ஒரு கவிஞராக அணுகுவதற்கும்
ஒரு இஸ்லாமிய சூபிச மரபின் பின்னணியிலிருந்து
ஞானகுருவாக அணுகுவதற்கும் இடையே ஆழமும் நீளமும்
மிகுந்த ஓர் நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த நதி இரு கரையோர
வாசிகளுக்கும் இருவேறு உலகத்தைத் தரிசிக்கத்
தருகிறது. ஒரு பெயர்ச்சொல் வினைச்சொல்லாவதற்கும்
சரித்திரமாவதற்கும் அல்லது வெறும் பெயராக
எஞ்சிவிடுவதற்கும் இடையே புரிதல் எனும்
ரசவாதம் தேவையாயிருக்கிறது.
உதாரணமாக
"தரையைப்
பெருக்குகிறாய் நீ"என்கிற கவிதையில்
"வசந்த
காலத்தில் ஒரு மனிதன்
பழத்தோட்டம்
ஒன்றில்
நுழைவதைப்போல
அழகுதேவதை
ஆன்மாவினுள்
நுழையும்.
அதைப்போலவே
என்னுள்
வருவாயாக.
ஜோசப்பின்
கண்களில் ஒளியேற்றி
யோகோப்பின்
துக்கத்தைப் போக்குவாயாக"
என்கிற
வரிகள், கோல்மன் பார்க்சின் ஆங்கிலம்
வழி தமிழில் என்.சத்தியமூர்த்தியால்
மொழியாக்கம் செய்யப்பட்டவை. இஸ்லாமியத் தேர்ச்சியும் யூசுப் நபி,யாகூப்
நபி ஆகியோரின் சரித்திரப் பின்புலமும் தெரிந்தவர்கள் இவ்வரிகளை அணுகும் போது விரிந்து
பிரவாகமெடுக்கும் அனுபவத்தை அவற்றை அறியாதவர்கள் பெறவியலாது.
ஆனால் அவர்கள் வேறுவிதமான இன்னொரு
அனுபவத்தை உணரவியலும். அந்த அனுபவத் தீற்றல்களே
இந்த அளவு கொண்டாடப்பட வைக்கிறதெனில்
ரூமியின் வரிகள் எந்த அளவுக்கு
வீரியமும் ஆழமும் கொண்டவை என்பதை
நாம் உணர்ந்துகொள்ள இயலும்.
பொதுவாக
சாமானிய பக்தர்களால் போற்றப்படும் எந்தப் புனித ஆத்மாக்களும்
புனிதப் பிரதிகளும் அவர்களது பிரார்த்தனையின் அங்கங்களாக இருக்கிறார்களே அன்றி வாழ்வின் அர்த்தமாகவோ
வீடுபேறாகவோ மலர்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் உலக
ஆசாபாசங்களிலிருந்து விட்டு விடுதலையாகி நிற்கும்
சூபிகளிடம் வந்து மீண்டும் மீண்டும்
உலகத்தை யாசித்து நிற்கும் பாமர பக்தர்களை ஞானிகள்
மிகுந்த அயர்ச்சியோடே அணுகுகிறார்கள்.
3.சத்தியத்தைத்
தேடும் பயணத்தில் மெளலானா ரூமியின் வரிகள்.
"அரைகுறை
மனதிற்கு
அகண்டவெளி
அகப்படாது.
பேரருளை
நோக்கிப்
பயணிக்கத்
தீர்மானித்த நீ,
சிறுமை
படர்ந்த விடுதிகளில்
நெடுங்காலம்
இளைப்பாறி
விடுவது ஏன்"
-என்கிறார்கள்
மெளலானா ரூமி.(தாகங்கொண்ட மீனொன்று-என்.சத்திய மூர்த்தி
மொழிபெயர்ப்பு)
சத்தியத்தைத்
தேடும் பயணத்தின் வழித்துணையாக இறையருளிய மெளலானாவின் படைப்புகளை, அவற்றின் ஆதித் தேடலை மெய்ப்பிக்கும்
வண்ணம் வாசிப்பினூடே பயணிப்பது இறைஞான தரிசனத்தை சாத்தியப்படுத்தும்.
ரூமி மெளலானாவின் மெளலவிய்யா தரீகாவில் "ஸமா"எனும் ஞான நடனம்
உண்டு. அவற்றை நிகழ்த்துபவர்கள் சுழலும்
தர்வேஷ்கள் என்று அழைக்கப்படுவர்.ஒரு
கரத்தை விண்ணை நோக்கி உயர்த்தியும்
இன்னொரு கரத்தை மண்ணை நோக்கித்
தாழ்த்தியும் சுழன்று சுழன்று நடனமாடுவது
"ஸமா"வின் வெளிப்புற நிகழ்வு.
அந்தரங்கத்திலோ சர்வ படைப்புகளும் அண்ட
சராசரமும் சதா சுழன்று கொண்டே
இறைவனைத் துதிப்பதை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சத்தின் துகள்களில்
தானும் ஒரு துகளாகக் கரையவும்,தன்னுடைய சுயத்தை பிரபஞ்சத்தின் துகள்களில்
கண்டடைவதுமான ஏகத்துவத்தில் கரைந்துருகும் பயிற்சியாக இந்நடனம் விரிவடைகிறது.
மேலும்
ரூமி மெளலானா ஆங்காங்கே குறிப்பிடும்
'மது' லோகாதாய மதுவல்ல. மாறாக
இறைஞான மதுவாகும். இந்த சூட்சும மதுவை
அருந்துபவர் இறைஞானத்தில் மூழ்கி முத்தெடுப்பவராவார்.
அதேபோல
காதலி என்று குறிப்பிடப்படுவது பெண்ணுமல்ல.
இறைவனையே தமது காதலியாக உருவகித்து
கவிமொழியில் நர்த்தனிப்பதுதான் ரூமி மெளலானாவின் பாணி.இதற்கு அத்தாட்சியாகவே,
" இறைக்
காதலைத் தவிர
ஏனைய எல்லாக் காதல்களும்
துயரம்தான்"
என்கிற
இந்த வரிகள் காணக்கிடைக்கின்றன.
அதேபோல
நடனம்,மது என்கிற சொற்பிரயோகங்கள்
நம் வழமையின் வேரூன்றிய மனதைத் துணுக்குறச் செய்யுமெனில்
இந்த கவி வரிகள் மூலம்
நம்மை இயல்புக்குக் கொணர்ந்து வருகிறார் மெளலானா,
"தொழுகையில்
தரையைத்
தொடுகின்ற
போது
உன்னை அன்றி
என் இலக்கு
வேறெதுவும்
இல்லை
தோட்டங்கள்
பூக்கள் பறவைகள்
ஆனந்த நடனம் என்று
நான் பேசுபவை எல்லாம்
சாக்கு
போக்குகள் மட்டுமே."
இதுதான்
மஸ்னவியின் சாரம்.
ரட்சகனின்
லிகா எனும் சந்திப்பையே இலக்காகக்
கொண்ட ரூமி மெளலானாவின் படைப்புகள்
நம் அந்தரங்கத்தைச் சுத்திகரித்து ஆத்மஞானப் பாதையில் பீடுநடை போட வழிகாட்டி
நிற்கின்றன.
ரூமி மெளலானாவின் ஆத்மஞானக் கவிதைகளையும் அவற்றை அர்ப்பணிப்போடு இரவுபகல் பாராமல் ஆத்மார்த்தமாகத் தமிழில் மொழியாக்கம் செய்த நரியம்பட்டு சலாம் அவர்களையும் லாப நோக்கமின்றி ஈடுபாட்டுடன் பதிப்பித்த ஃபஹீமிய்யா டிரஸ்டின் உழைப்பையும் மதிக்க வேண்டுமெனில் தமிழ்கூறும் நல்லுலகம் தன் வாசிப்புத் திறனைத் தூர்த்தெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment