Saturday, February 12, 2022

என் தன்மானம் எனக்கு மிகவும் அவசியமாகப்பட்டது.

 Jazeela Banu

நான் துபாய்க்கு வந்த புதிதில், அதாவது 1997ல் ஒரு நேர்முகத்திற்குச் சென்றிருந்தபோது ஹிஜாப் (தலை முக்காடு) அணிந்து சென்றேன். 

நேர்முகம் எடுத்தவர் வேலைக்கான எல்லா உறுதியும் செய்துவிட்டு எங்கள் அலுவலகக் கொள்கையின் படி 'ஹிஜாப்' வேண்டாம் என்றார். 

அது மிகச் சிறிய மூன்று பேர் வேலைப் பார்க்கும் அலுவலகம். அந்த அலுவலகத்திற்குக் கொள்கையாம். சொன்னவரும் இஸ்லாமியர், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர் என்ற நினைவு. 

எனக்கு அந்த வேலை மிகவும் தேவையாக இருந்தது. அவரிடம் நான், "நீங்கள் இஸ்லாமியர்தானே? ஏன் ஹிஜாப் வேண்டாம் என்கிறீர்கள்" என்று கேட்டேன். அலுவலகத்திற்கு நிறையப் பேர் வருவார்கள் போவார்கள் 'மார்டன்' பெண் தான் வேண்டும் - நீ அணிந்திருப்பது 'டிரடிஷனல் வேர்' என்றார். 

வேலைக்காகப் பெண்ணா அல்லது வருபவர்கள் போவர்கள் பார்ப்பதற்கு நான் என்ன 'ஷோகேஸ் ஐட்டமா' என்று மண்டைக்குள் குடைந்தது. அவர் என் உடையில் தலையிட்டதும் எனக்குத் துப்புரவாகப் பிடிக்கவில்லை. 

வேலை அவசியம்தான் அதைவிட என் தன்மானம் எனக்கு மிகவும் அவசியமாகப்பட்டது. வேண்டாமென்று உதறிவிட்டு வந்துவிட்டேன். அவரோ விடாமல் மறுநாளும் அழைத்து அதிகம் சம்பளம் தருவதாகவும் சொல்லிப் பார்த்தார். பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது, குறிப்பாக எங்கள் உரிமைகளை.



 Jazeela Banu

No comments: