Monday, July 12, 2021

96.ஓதுவீர் !

 Sabeer Ahmed



96.ஓதுவீர் !

(மூலம்: அல் குர்ஆன் /சூரா: 96 அல் அலக்)

ஓதுவீர்...

ஏடெடுத்துப் படித்ததில்லை- நீர்

எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும்

உலகங்களைப் படைத்தவன்

ஒருவனாக ஆள்பவன்

ஓரிறையின் பெயரால்...

ஓதுவீர் !

உதிரத்தில் திரண்டெடுத்த

திரவத்தி லிருந்தே

மனிதனைப் படைத்தான் !

ஓதுவீர்...

ஒப்பற்றக் கொடையாளி

உம் இறைவன் ஆவான் !

அவனே கற்பித்தான்

எழுதுகோல் எடுத்து

எண்ணங்களை எழுத!

அறிவில் மிகைத்த

ஆண்டவன் அவன்தான்

மனிதனின் மூளை

அறியாதவற்றை

அறிந்துகொள்ளக் கற்பித்தான் !

கற்றுக்கொண்ட பிறகு

பெற்றுக்கொண்ட அறிவால்

சிறந்து விளங்காமல்

வரம்பு மீறுகின்றான் - நாக்கில்

நரம்பில்லா மனிதன் !

தன்னிறைவு பெற்றதாய்

தலைக் கனம் கொண்டு

ஆண்டவன் அருள்

வேண்டாம் என்கின்றான்

இம்மையை வாழ்ந்து

இறப்பெய்த பின்னரும்

மறுமைக்கு உமக்கு

மீளுதல் அவனிடமே !

ஆண்டவனின் அடியார்

அருளாளனை வணங்க...

அறிவிழந்த மனிதன்

தறிகெட்டுத்

தடுப்பதைக் கண்டீரன்றோ?

அத்தகு அடியார்

பெற்றது நேர்வழி...

படைத்தவன் சக்தியில்

பயபக்தி கொண்டு

தாமும் தொழுது

தரணியையும் ஏவுகையில்...

நல்லடியாரைப் பொய்யராக்கி

நல்லுள்ளம் புறக்கணித்து

நேர்கொண்டு பாராமல் -தன்

முகம் திருப்பிக் கொண்டதைக்

கண்டீரா பெருமானே!

பகுத்தறிவைப் புதைத்துவிட்டு

பண்பற்ற செயல் செய்த

பாவி அவன் செயலைப்

படைத்தவன் பார்ப்பது

புரியாதா அவனுக்கு?

அவ்வாறல்ல,

புரிந்தே செய்யும் அநதப்

பாவச் செயல்விட்டும்

தெரிந்தே தவறிழைக்கும்

தறிகெட்டக் குணம் விட்டும்

பொய்யும் புரட்டும் விட்டும்

விலகிக் கொள்ளாவிடில்

முன்னெற்றி ரோமங்களை

மொத்தமாய்ப் பிடித்திழுப்போம்!

அவனைச் சார்ந்தோரை

அவன் அழைக்கட்டும்;

நரகக் காவலர்களை

நாம் அழைப்போம் !

வீணன் அவன்

வேண்டுவதுபோல் - அவனுக்கு

வழிபடாதீர்;

வானங்களின் இறையோன்

விதித்தது மாறாமல்

நெற்றி நிலம்பட

நிறைமனதாய் தொழுவீர்

நிகரற்ற வல்லோனை!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

http://www.satyamargam.com/.../poetry/al-quran-chapter-96/


No comments: