Thursday, January 11, 2018

பற்களின் வாழ்வே முளைத்து விழுவதிலும்,....

பற்களின் வாழ்வே முளைத்து விழுவதிலும், விழுந்து முளைப்பதிலும், பின் ஒரேயடியாய் விழுவதிலும்தான் இருக்கிறது.
எனது கீழ்த்தாடை வரிசைப்பற்கள், அதுவும் முன் வரிசை, பக்கத்திற்கொன்றாக, எந்தவித முன்னறிவுப்பின்றி ஒரு நாள் ஆட ஆரம்பத்திருந்தது. அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல், ஒரு நாள் ராஜ்கிரண் மாதிரி சாப்பிடும்போது......மேலும் அதிகமாய் ஆட ஆரம்பித்தது மட்டுமின்றி தாங்கமுடியா வலியும் சேர்ந்து கொண்டது. வாழைப்பழம் கூட சரியாக தின்ன முடியவில்லை.
மனைவியிடம் சொன்னபோது வயசாயிடுச்சுல்லன்னு 'அசால்ட்'டாக சொன்னார். என் பிள்ளைகள் அதை வேண்டுமென்றே ஊர்ஜிதம் செய்தார்கள். மருமகன் மனதுக்குள் சிரித்திருப்பார் என நினைக்கிறேன்.
ஆனாலும், என் மனதும் நிலைக்கண்ணாடியில் தெரிந்த நானும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தோம். பல் மருத்துவரிடம் சென்றேன். வயது? என்றார். அறுபது தான் என்று அழுத்திச் சொன்னேன். அவரோ........சிரித்துக் கொண்டே, கவலைப்பட ஒன்றுமில்லை, விழுந்தபின் ஒவ்வொன்றாய் கட்டிக்கொள்ளலாம் என்றார்.

ஆக விழப்போவதும், விழுந்தால் முளைக்காது என்பதும் கன்ஃபர்ம்டு. கீழ்த்தாடையில் இரு பற்களின்றி சிரித்தபடி என் முகத்தை கற்பனை செய்து பார்த்தேன். அழுகை அழுகையாய் வந்தது. எவ்வளவு ஆகும் என்றேன்.
செராமிக்கில் செய்து வைப்பது நல்லது, சுமார் 25000 ஆகலாம், அதற்கு முன் ஸ்கேன்.....இத்யாதி என்றார். கற்பனையில் என்னை பல்லின்றி பார்த்த அதிர்ச்சியை விட ஃபீஸ் அதிக அதிர்ச்சியாக இல்லை. புரட்டிக் கொள்ளலாம். யோசித்து வருகிறேன் என்று சொல்லி வலிக்கு மட்டும் அவரே எழுதி, அவரே படித்து, அவரே க்ளினிக்கில் இருந்து தேடி எடுத்துக் கொடுத்த மாத்திரைகளை 285 ரூ கொடுத்து வாங்கிக் கொண்டு யோசனையுடன் வீடு வந்தேன்.
நான் பல்லிற்கு செலவு செய்ய தயாராக இருப்பேன் என்று மனைவிக்குத் தெரியும்....30 வருடத்துக்கு மேலான பந்தமல்லவா? ஆனால் 25000 எனது பல்லுக்கு அதிகமாய் பட்டிருக்க வேண்டும்.
அதன்பிறகுதான், திருச்சியில் இருக்கும் அவரது சின்னம்மாவையும் அவரது மகளையும் கலந்து ஆலோசித்தார். இருவருமே நாட்டு மருத்துவம் #சொல்வதில் வல்லவர்கள் (காலை நேர சேனல்கள், குறிப்பாய் Zee தமிழ் பெரியவர் பல ஆண்டுகளாக செய்த சேவை. பார்க்கப் பார்க்க குறிப்பெழுதிக் கொண்டு நிறைய டைரிகள் வைத்திருக்கிறார்கள். திருச்சியில் நானே பார்த்திருக்கிறேன்).
அவர்கள் ஆலோசனைப்படி, மனைவியின் கட்டாயத்தின்படி படத்தில் உள்ள பொடியை, ப்ரஷ் இன்றி (எந்த ப்ரஷின் bristles ம் காலப்போக்கில் ஈறுகளை அதிகம் பாதித்து பற்களை வலுவிழக்கச் செய்யுமாம், அவர்கள் சொன்னது.) விரலால் தேய்க்க ஆரம்பித்தேன்.
அது ஒரு அனுபவம். ஒவ்வொரு பல்லாக தேடிப்பிடித்து ஆள்காட்டி மற்றும் கட்டை விரலால் இறுகப் பிடித்து அழுத்தி தேய்க்க ஆரம்பித்தேன். என்ன......நாக்கில் பொடி படர்ந்து வெள்ளையாகி விடுகிறது. அதற்கு மென்மையான க்ளீனரை அல்லது க்ளீனரை மென்மையாக உபயோகித்தேன்.
நம்பினால் நம்புங்கள்.....ஆச்சரியம்.....
பொடி ஆரம்பித்த நாளில் இருந்தே வலி குறைய ஆரம்பித்து இப்போது வலியே இல்லை. ஆடும் பற்கள் மெல்ல மெல்ல ஆட்டத்தை நிறுத்தி வருகின்றன. இன்னும் சிறிது நாட்களில் நல்லி எலும்பு கடிக்கும் அளவிற்கு முற்றாக நிறுத்தி பலமடைந்து விடும் என நம்புகிறேன். மேலும் உப்பு, காரம், மிளகு, திப்பிலி, பட்டை, சோம்பு, கிராம்பு இருக்கும் பேஸ்ட்களை விட பற்கள் 'பளிச்'. அனைவருக்கும், வயது வித்தியாசமின்றி ஏற்றதும் கூட.
என்னை விட என் மனைவிக்கு அதிக சந்தோஷம்.....அனைத்து பற்களும் தெரிய நான் சிரிக்கும்போது அழகாய் இருப்பேனாம்...(அப்படியா......சொன்னதே இல்லை...!!!!!)
முதுமை தவிர்க்க முடியாது.....ஆனால் முதுமையின் அடையாளங்களை மறைக்கும் முயற்சியில் மனது இளமையாகவே இருக்கிறது..........
தாத்தாவானாலும் இளந்தாத்தாவாகவே இருக்க வேண்டும். அதற்கு வலுவான பற்களும் இளமையான மனதும் தேவை.
★ஒன்றை சொல்லாமல் இதை முடித்தால் நான் நன்றி இல்லாதவன் ஆவேன்.....
★நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல....
வாழ்க கடுக்காய் பொடி
பி.கு. இது சத்யம் ப்ராடக்ட்ஸுக்கான மார்கெட்டிங் அல்ல.......
 😁😁😁

Gnanasekaran Veeriahraju

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails