Thursday, January 25, 2018

சீறாப்புராணம் விலாதத்துக் காண்டம் கடவுள் வாழ்த்துப் படலம்


சீறாப்புராணம் முதலாவது காண்டம் – விலாதத்துக் காண்டம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நஹ்மதுஹூ வ நுஸல்லீ அலா ரஸூலிஹில் கரீம்
1.01 கடவுள் வாழ்த்துப் படலம்
காப்பு
திருவுருவா யுணருருவா யறிவினொடு
தௌிவிடத்துஞ் சிந்தி யாத
அருவுருவா யுருவுருவா யகம்புறமுந்
தன்னியிலா வடங்கா வின்பத்
தொருவுருவா யின்மையினி லுண்மையினைத்
தோற்றுவிக்கு மொளியா யாவு
மருவுருவாய் வளர்காவன் முதலவனைப்
பணிந்துள்ளி வாழ்த்து வாமே.
கடவுள் வாழ்த்துப் படலம்
1 திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
தௌிவினுந் தௌிவதாய்ச் சிறந்த
மருவினு மருவா யணுவினுக் கணுவாய்
மதித்திடாப் பேரொளி யனைத்தும்
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
பூதலத் துறைந்த பல் லுயிரின்
கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
கருத்தனைப் பொருத்துதல் கருத்தே. 1.1.1

2 சிறந்தமெய்ப் பொருளை யழிவிலா மணியைத்
தெரிந்துமுக் காலமு முணர்ந்து
துறந்தவ ரிதயா சனத்திருந் தவனைத்
துடரின்ப துன்பமற் றவனைப்
பிறந்தபல் லியிரின் மனத்தள வுறைந்து
பிறப்பிறப் பென்றிலா தவனை
மறந்தவர் சுவர்க்கப் பதியையு மறந்து
மண்ணினின் மதிமறந் தவரே. 1.1.2
3 இருவிழி சிவந்து கனற்பொறி தெறிப்ப
வெடுத்தகைக் கதையினா லுறுக்கி
வருமவ ரெதிர்நின் றொருமொழி கேட்ப
மறுமொழி கொடுத்திட வறியேன்
தருமமும் பொறையு மறிவுமற் றறிந்துன்
றன்னையு மென்னையு மறியப்
பெருவரந் தருவா யாதிநா யகனே
பேதியாச் சோதிமா முதலே. 1.1.3
4 கடலினை மலையைக் கதிர்மதி யுடுவைக்
ககனமற் றறுஷொடு குறுசைப்
புடவியைச் சுவனப் பதியினை யமரர்
பொருந்திட மடுக்கடுக் கவையை
வடிவுறத் தனது பேரொளி யதனால்
வகுத்துவெவ் வேறென வமைத்தே
யுடலினுக் குயிரா யுயிரினுக் குடலா
யுறைந்தமெய்ப் பொருளினைப் புகல்வாம். 1.1.4
5 வேறு

அருமறை தெரிந்துநீதி நெறிமுறை நடந்துதீனிவ்
வகிலதல மெங்கு மீறவே
யொருகவிகை கொண்டுமாறு படுமவரை வென்றுநாளு
முறுபுகழ் சிறந்த வாழ்வுளோர்
திருவொளி வெனும்ஹபீபு நபிமுகம்ம தன்றுவானர்
சிரமிசை நடந்து சோர்வுறா
விருசரண நம்பினோர்கள் வரிசைக ணிறைந்தபேர்க
ளெவரினு முயர்ந்த பேர்களே. 1.1.5
6 வேறு
கவியா லுரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி
யடைவார் கலக்க மறவே
செவியார மெய்ப்பொருளை யறிவார் மனத்தினுறு
செயல்கே டகற்றி விடுவார்
புவியார மொய்த்தநெறி மறைநாலினுக்குமொரு
பொறியா யுதித்த வடிவார்
நவியார் சுவர்க்கபதி நயினார் பதத்துணையை
நடுநாவில் வைத்த வர்களே. 1.1.6
7 வேறு
ஆதிதன் கிருபை தாங்கி யகிலமீ தரசு வைகித்
தீதிலாச் சோதி போலத் தீன்பயிர் விளக்கஞ் செய்தே
மூதறி வுடைய ரான முறுசலீன் களையெந் நாளும்
போதர வுடனே போற்றிப் புந்தியின் மகிழ்ச்சி செய்வாம். 1.1.7
8 வேறு
தாரா தரத்தையே மேலே கவிக்கவே
தாடாண்மை பெற்ற நயினார்
பேரா யுதிக்கவே வானோ ருரைக்கவே
பேறாய் விளக்கு முரவோ
ராராய்வின் மிக்கபேர் நூறாயிரத்துநா
லாறாயிரத்து நபிமார்
மாராய மிக்கபேர் வாயார வைத்தபேர்
வாழ்வார் சுவர்க்க பதியே. 1.1.8
9 வேறு
புரசைக் கடக்கரிக ணிரைதட் டற்க்குபிரர்
புவியைப் படக்க டவியே
சரகுற்ற நற்பதவி வழியிற் புகுத்தியுயர்
தலைமைக்கு வைத்த பெரியோர்
பிரசத் துளித்திவலை சிதறிக் கிடக்குமிரு
பிணையற் புயத்து நயினா
ரரசுக்கு வைத்தநெறி வரிசைக்கு மிக்கதுரை
யபுபக் கரைப்புகலுவாம். 1.1.9
10 வேறு
அமரிலெதிர்த் தோர்களாவி யெமதிசையைத் தேடியோட
வடருமடற் சூர வீரவேள்
மமதைகெடச் சாதிநீதி முறைமைதனக் காகவோது
மகனைவதைத் தோரொ றாமலே
திமிரபகைப் பானுமேனி கருகிவிடப் பார்வையேவு
தெரிமறையிற் கார ணீகனா
ருமறுதிருத் தாளைநாளு மனதினினைத் தோதுவோர்தம்
முரியதவப் பேறு மீறுமே. 1.1.10
11 வேறு
விதுமாற வொளிவான வதனாதி நபிநாவில்
விளைவான திரு வேதமே
பதிவாக வொருசேக ரமதாக நிலமீது
பயிராக வுரை தூவினோர்
சதுமாம றையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்க
டமதாவி யென வாழ்வோ
ருதுமானை யொருகாலு மறவாம லிருகாலு
முளமீது நினை வாமரோ. 1.1.11
12 வேறு
படிகிடு கிடெனநாக முடிநெறு நெறெனவாரி
படுதிரை யளற தாகவே
வடவரை யசையாவான முகடுடை படவறாத
மழைமுகில் சிதறி யோடவே
யடையலர் கெடிகள்கோடி யிடிபடு படலதூளி
யலரியி னுடலின் மூழ்கவே
நடமிடு கடினவாசி மிசைவரு சமரசூர
நரர்புலி யலியை யோதுவாம். 1.1.12
13 நலிவற வுலகநீதி நெறிமுறை பெருகநாளு
நமருயி ரரிய காவலா
யொலிகட லுலகமீது தெரிதர வரியதீனு
முறுகதி ருதைய மாகவே
மலிபுக ழரசர்சீய மிர்கமத நறைகுலாவு
மறைநபி மருக ராகிவா
ழலிதிரு மதலையான வசனுசை னுபயபாத
மனுதின மனதி லோதுவாம். 1.1.13
14 வேறு
ஆலகால வாரிபோலு மாகொடூர மாகிய
காலகேள்வி தானடாத காரணீக ராளவே
தாலமீதி லாதிதூதர் சாரமேவு வாழ்வினோர்
நாலொடாறு பேர்கள்பாத நாவினாளு மோதுவாம். 1.1.14
15 வேறு
ஆத மீன்றமனு நீதி யாண்டமுறை
யாலு மோங்குபுக ழாகினோர்
தூத ராங்கடவு ணாவி லாய்ந்தமறை
தூவி நான்கு மத்க பாகினோர்
நீத வான்களுறு போத வான்கள்குரு
நேர்மை யாந்தகைமை யாகினோர்
வேத வான்களெனு நாலிமாம்கள்பத
மேலு மியாம்புகல வேணுமே. 1.1.15
16 வேறு
உரமுறு தீன்பா ரெல்லா மொளிரவே விளக்கஞ் செய்யுந்
துரமுறு மவுலி யாவாய்த் தோன்றின பேர்க்கு மேலாம்
வரமுறு முகியித் தீன்செம் மலரடி யிரண்டு மென்றன்
சிரமிசை யிருத்தி வாழ்த்திச் செந்தமிழ்ப் பனுவல் செய்வேன். 1.1.16
17 நம்மையா ளுடையான் வேத நபிதிரு வசனந் தீனோர்
சம்மதித் திடப்பா ரெல்லாந் தழைக்கவே விளக்கஞ் செய்தோ
ரிம்மையு மறுமை யும்பே றிலங்கிய சதக்கத் துல்லா
செம்மல ரடியி ரண்டுஞ் சிந்தையி லிருத்தி னேனே. 1.1.17
18 அவையடக்கம்
வேறு
திக்க னைத்தினும் பாரினுந் தீவினுஞ் செங்கோற்
புக்க நன்னெறித் திகிரிமன் னவர்கண்முன் பொருந்தக்
தக்க கூலியுஞ் செய்துண வறிகிலான் சரிபோன்
மிக்க செந்தமிழப் புலவர்மு னியான்விளம் புவதே. 1.1.18
19 படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற
வெடுத்து வீசிய சண்டமா ருதத்தினுக் கெதிரே
மிடித்து நொந்தசிற் றெறும்பொரு மூச்சுவிட் டதுபோல்
வடித்த செந்தமிழ்ப் புலவர்மு னியான்சொலு மாறே. 1.1.19
20 அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன்
படிப டித்தசெஞ் சொற்புல வோர்முனம் பகர்த
லிடியி டித்திடு மாரவா ரத்தினுக் கெதிரோர்
நொடிநொ டிப்பது போலுமொத் திருந்தென் நூலே. 1.1.20
கடவுள் வாழ்த்துப் படலம் முற்றிற்று.
source : http://tamilfriends.tamil2friends.com/

4.1 சீறாப் புராணம்
சீறாப் புராணம் = சீறாவைக் கூறும் புராணம். சீறத் என்பது சீறத்துன்னபி என்ற அரபுத் தொடரின் சுருக்கம் ஆகும். இதற்கு நபிகள் நாயகத்தின் வரலாறு என்று பொருள். சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம். புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும். திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள்.

4.1.1 ஆசிரியர்

சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார். உமறுப் புலவர் பிறந்த ஊர் கீழக்கரை என்றும், நாகலாபுரம் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு. உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார். உமறுப் புலவர் மார்க்க மேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் பெற்றார். வடநாட்டுப் புலவர் வாலை வாருதியை எட்டையபுரம் அவைக்களத்தில் தன் புலமையால் வென்றார்.

● நண்பர்கள்

உமறுப் புலவர் அக்காலத்தில் வாழ்ந்த படிக்காசுப் புலவர். நமசிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.

● ஆதரித்தவர்கள்

இவரை ஆதரித்த வள்ளல்கள் இருவர். ஒருவர் சீதக்காதி, இன்னொருவர் பரங்கிப் பேட்டை அபுல்காசிம் மரைக்காயர்.

4.1.2 காப்பிய அமைப்பு

இக்காப்பியம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை:

1)   விலாதத்துக் காண்டம்
2)   நுபுவ்வத்துக் காண்டம்
3)   ஹிஜ்ரத்துக் காண்டம்
என்பவை ஆகும்.

● விலாதத்துக் காண்டம்

சீறாப் புராணத்தின் முதல் காண்டம் விலாதத்துக் காண்டம் ஆகும். விலாதத் என்ற அரபுச் சொல்லுக்குப் பிறப்பு என்பது பொருள். இதில் நபிகள் நாயகத்தின் பிறப்பும், இளமையும், தொழில் முயற்சியும் முதலில் கூறப்படுகின்றன. பின்னர், கதீஜா நாயகியாரின் உறவு, அவர்கள் திருமணம், பாத்திமா பிறப்பு ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.

இது இருபத்து நான்கு படலங்களைக் கொண்டு உள்ளது.

● நுபுவ்வத்துக் காண்டம்

இது இரண்டாவது காண்டம். நுபுவ்வத் என்ற அரபுச் சொல்லின் பொருள் தீர்க்க தரிசனம் என்பதாகும். இது நபிகள் நாயகம் நபித்துவம் என்னும் நபிப் பட்டம் பெற்றதைப் பாடுகிறது. வானவர் தலைவர் ஓதிய திருக்குர்ஆன் வேத உரைகள் நபிகள் நாயகத்திற்கு வெளிப்படுத்தப்பெற்றதும், அதனை நபிகள் நாயகம் மக்களுக்கு எடுத்துரைத்து அறிவுரை கூறியதும் கூறப்படுகின்றன. மேலும் தீமைகள் செய்து வந்த குறைசிகள் எனும் குலத்தவரின் கொடுமைகளும் இக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளன. முஸ்லீம்களின் பொறுமையைப் பற்றியும், இசுலாம் உறுதி பெற்றது பற்றியும் இக்காண்டம் தெரிவிக்கிறது.

இதில் இருபத்தொரு படலங்கள் உள்ளன.

● ஹிஜ்ரத்துக் காண்டம்

இது மூன்றாவது காண்டம். ஹிஜ்ரத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம் பெயர்தல் என்பது பொருள்.


மக்காக் குறைசிகள், நபிகள் நாயகத்திற்குக் கொடுமைகள் பல செய்தனர். நபிகள் நாயகம் மக்காவை விட்டு, மதீனாவிற்கு வரவேண்டுமென்று அங்குள்ள மக்கள் அழைத்தனர். அந்த அழைப்பை நபிகள் நாயகம் ஏற்றார். இசுலாமிய அறநெறிகளை வளர்க்க மக்காவை விட்டு மதீனா நகர் சென்றார். அங்கு இசுலாமிய அறநெறி வளர்த்த வரலாறும் இக்காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு முடிவுபெறவில்லை. உறனிக் கூட்டத்தார் படலத்துடன் முடிகிறது. நபிகள் நாயகத்தின் ஐம்பத்தேழாவது வயதுவரை நடந்த நிகழ்ச்சிகளோடு சீறாப் புராணம் நிறைவு அடைகிறது. இது நாற்பத்தேழு படலங்களால் ஆனது.
நன்றி Source:http://webcache.googleusercontent.com

No comments: