Monday, January 1, 2018

ஓய்வில்லா ஓட்டத்தில் ஒரு விடுமுறை ....!

ஒன்றையுமே விடாமல் முறைவைத்து குறைவைக்காமல் வருடம் முழுவதும் பணிசெய்து கிடந்து களைத்து போனவர்களுக்கு விடுமுறை எப்போதுமே வரப்பிரசாதம் தான்.
எப்படி முறைவைத்து இலக்குகளை எட்டி வெற்றிக்கனி பறிக்க ஓடியாடி உடல்வருத்தி உழைக்கிறோமோ அதுபோலவே உடலுக்கும் உள்ளத்திற்கும் முறைவைத்து ஒய்வு கொடுக்க வேண்டும்.
இது மிகமிக அவசியமான கடைபிடிக்க வேண்டிய காரியம். தேவையான ஓய்வை நாமாக எடுத்து களைப்பை உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் நீக்காவிடின் இயற்கையின் விதிமுறைப்படி கட்டாய விடுமுறை எடுக்க வைத்துவிடும்.
அது எப்படி ?
இயற்கையுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி உடலுக்கு ஒய்வு அவசியம். அந்த ஓய்வை நாமாக நயமாக எடுக்காவிடின் அதுவாக அசாதாரணமாக பிணியாக வந்து கட்டாய ஒய்வு எடுக்க வைத்துவிடும்.
ஒய்வு என்பது ஒன்றுமே செய்யாமல் நாள்முழுக்க சும்மாவே இருப்பதல்ல. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்யும் பொருளீட்டலுக்கான செயல்களை விடுத்து, விடுப்பெடுத்து மனம் உவக்கும் மகிழ்ச்சி தரும் ஆனால் பொருளாதார பலனில்லாத செயலை செய்து உடலையும் உள்ளத்தையும் களிப்படைய செய்வதாகும்.

உதாரணமாக தூண்டிலிட்டு நீர்நிலைக் கரையிலமர்ந்து மீன் பிடித்தல். மனதை ஒருமுகப்படுத்தும், மனதில் நின்று அலைக்கழிக்கும் எண்ணங்களை தூரவிலக்கும், மனசலனங்களை சீர்படுத்தும்.
உகாண்டாவில் விக்டோரியா ஏரிக்கரையில் மணிக்கணக்கில் மீன் பிடித்தல் எனது விருப்பமான பொழுதுபோக்கு பழக்கவழக்கமாகும். வாரத்தில் ஒருமுறை செய்வதால் கிடைத்த சுகமான பலனை அனுபவித்து சொல்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான நல்ல பொழுதுபோக்கு பழக்கங்கள் இருக்கலாம் அதை அனுபவிக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மீதமுள்ள நேரமெல்லாம் சுறுசுறுப்பாகவும் மனஅமைதியுடனும் இருக்கலாம்.
வருட இறுதியில் கூடுதல் பணிகளை செவ்வனே செய்துமுடித்த திருப்தியில் வருடாந்திர தொடர்விடுமுறையை அனுபவவித்து உடலையும் உள்ளத்தையும் புடம் போட்டுக்கொண்டிருக்கிறேன். வரும் வருடங்களை நலமாக கொண்டுசெல்வதற்காக.
Seasons Greetings to All The Friends !

ராஜா வாவுபிள்ளை
Seasons Greetings to All The Friends http://nidurseasons.blogspot.in/2017/10/blog-post_48.html
மனிதர்களின் காலமிது ....!*
by ராஜா வாவுபிள்ளை — with ராஜா வாவுபிள்ளை.

No comments: