Wednesday, November 8, 2017

இசை

---------
இசைமட்டும் இல்லையெனில்
என் இரண்டு காதுகளும்
வேண்டாத உறுப்புகள்தான்
வேறென்ன நான் சொல்வேன்..?
இருபுறமும் கேள்விக்குறியாய்
இடையூறாகத் தொங்கும்
இடைஞ்சல் சதைதான் !
இசை ஹலாலா? ஹராமா..?
எனக்குத் தெரியாது வாதிட
பாட்டில் வருவது மட்டுமா
பண் இசை?
ஊஹூம்…

படைத்தோனின் படைப்புகளில்
பல்வேறு ஒலிகளுமே இசைதானே..?
அருவிகளின் ஆரவாரம்
ஆடிக்காற்றின் ‘ஸ்…ஸ்..’ சப்தம்
அலைகடலின் ஆர்ப்பரிப்பு
சேவல்களின் கூவல்கள்
சில்வண்டின் ரீங்காரம்
மண்ணில்விழும் மழைச்சாரல்
நதிநீரின் சலசலப்பு
நடுஇரவில் தவளைச் சத்தம்
குயில்களின் பாட்டு
கோழிகளின் கொக்கரிப்பு..
மூங்கில் துளை குழலோசை
கவிதை இன்னும் முடியவில்லை
கணநேரம் காத்திருங்கள்..!
என் மனைவிக்கு
என்னுடைய குறட்டை சத்தம்…!

#அப்துல்கையூம்

No comments: