Tuesday, November 21, 2017

எழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!



* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.

* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.

* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.


* மக்களை மிரட்டும் பகட்டு நடையில் பேசுவதும், எழுதுவதும் உலகெங்கும் வியாபித்திருக்கும் ஒரு பொது நோய்.

* எந்தப் பிரச்சினையையும் முழுமையாக கவனி. அந்தப் பிரச்சினையில் சிறிய சந்தேகம் ஏதாவது இருந்தாலும், அதை எழுத வேண்டாம்/பேச வேண்டாம்.

* நீங்கள் சொல்வதற்கு எதுவுமே இல்லாதபோது எதையும் சொல்லித் தொலைக்காதீர்கள். எழுதுவதற்கும்/பேசுவதற்கும் உங்களை நீங்களே நிர்ப்பந்தித்துக் கொள்ளாதீர்கள்.

* எதை எழுதினாலும் அதை குறைந்தது இரு தடவை வாசியுங்கள். தேவையற்ற ஊளைச்சதையை குறையுங்கள். ‘இரு தடவை சிந்தி’ என்று கன்பூசியஸ் இதைதான் சொல்கிறார்.

* சுற்றி வளைக்காமல் சுருக்கமாக பேசி/எழுதித் தொலை.

* உங்களுக்கு மட்டுமே புரியக்கூடிய/பழகிய அடைமொழிச் சொற்களை பொதுவில் பேசும்போதும்/எழுதும்போதும் பயன்படுத்த வேண்டாம்.

* தேய்வழக்குகள் நம் பேச்சிலிருந்தும் / எழுத்திலிருந்தும் ஒழிய வேண்டும்.

-  மேற்கண்ட கருத்துகள் என்னுடையது கிடையாது. பிப்ரவரி 8, 1942ல் ஏனான் என்கிற இடத்தில் நடைபெற்ற ஊழியர் கூட்டம் ஒன்றில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகள். தகவல் தொடர்பு குறித்து 75 ஆண்டுகளுக்கு முன்பே மாவோவுக்கு எத்தகைய துல்லியமான தெளிவு இருந்தது என்று புரிகிறது. தமிழில் ஐந்து பக்கங்களுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை, சோர்வு ஏற்படும்போதெல்லாம் எடுத்து வாசிப்பது என் வழக்கம்.

ஆனால்-

‘பகட்டு எழுத்து நடையினை எதிர்ப்போம்’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த உரை, மேற்கண்ட மாவோவின் கருத்துகள் எதையுமே பொருட்படுத்தாத / எதை செய்யக்கூடாது என்று மாவோ வலியுறுத்துகிறாரோ, அந்நடையில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.

உதாரணத்துக்கு, “அன்னிய உருப்படிவங்கள் (sterio type) ஒழிக்கப்பட வேண்டும், வெற்று அரூபமான மனப்பாங்குகள் குறைவாக இருந்திட வேண்டும், வறட்டு வாதம் அகற்றப்பட வேண்டும்” என்கிற ரேஞ்சுக்கு அந்த கட்டுரை போகிறது.

‘எளிமையாக எழுது’ என்பதையே இவ்வளவு சிக்கலாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் என்றால், அறிவார்ந்த விஷயங்களை தமிழாக்கத்தில் எப்படி சின்னாபின்னப் படுத்தி இருப்பார்கள்?

தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரை ஒன்றையே, மீண்டும் தமிழில் மொழிப்பெயர்த்துதான் நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. மற்ற மொழிகளில் எப்படியென்று தெரியவில்லை. தமிழன் எப்போதும் எழுத்துக்கும் / பேச்சுக்கும் டிசைன் டிசைனாக மேக்கப் போட்டுக்கொண்டேதான் திரிகிறான் :(
எழுதியவர் யுவகிருஷ்ணா

No comments: