Monday, November 6, 2017

"தூக்கமே வர்ரதில்லைங்க"

"உறக்கத்தை எதிர்கொள்ளும் போது திருடன் கூட வெட்கப்படுகிறான்.
உறக்கம் சாதாரணக்கலை அல்ல.
அதை நிகழ்த்துவதற்கு பகலெல்லாம் விழித்திருக்க வேண்டும்.
உறக்கம் ஒரு கனத்த சுவரின் ஊடாகவும் தொற்றக்கூடியது."
நீட்ஷேயின் மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது ஆழ்ந்த சிந்தனை நம்மை ஆட்கொள்கிறது. சகல வசதிகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மிகைத்திருக்கும் இந்நவீன காலத்தில் பெரும்பாலான நடுத்தர வயதினரும் சில இளம் பிராயத்தினரும்கூட "தூக்கமே வர்ரதில்லைங்க" என்று பெரும் சோகத்துடனும் சிவந்த கண்களுடனும் அலைபாயும் பதட்டத்துடனும் ஒரு இரங்கல் நிகழ்வின் மலர்க்கொத்தை சமர்ப்பிப்பதுபோல தனது சுயத்தைச் சமர்ப்பிக்கிறார்கள்.
பகலில் முழு விழிப்புணர்வுடன் செயலாற்றுபவர்களை தூக்கம் ஒரு பூ மலர்வதைப்போல இலகுவாக அரவணைத்துக் கொள்கிறது. பகலில் திக்கற்று அலைபாய்பவர்களையும் ஆற்றாமையுடனும் குற்றச்சாட்டுகளுடனும் சக மனிதர்களைக் கையாளத் தெரியாமல் தவிப்பவர்களையும் பொருந்தாத உறவுகளுடன் வாழ நேர்ந்துவிட்ட வாழ்க்கையை அளவுகடந்த சகிப்புத்தன்மையுடன் அனுசரித்துச் செல்பவர்களையும் இரவின் தனிமை ஒரு ஆட்கொல்லி மிருகத்தைப்போல வதைக்கிறது.

மனம்,கொதிநிலையடங்கி அமைதியுறாமல் உடலின் கட்டுமானங்கள் ஓய்வை யாசிக்கும் அதிகாலை நேரம் வேறுவழியின்றி உறக்கத்தின்பால் ஒண்டிக்கொள்கிறது. ஆழ்துயிலின் நிம்மதியை ஒருநாளும் அனுபவிக்காமல் சொற்ப உறக்கத்துடன் எழுபவர்கள் மீண்டும் பெருமலைப்புடன் பகல்பொழுதை எதிர்கொள்கிறார்கள்.எதிர்படும் நலிந்தவர்களையெல்லாம் கடித்துக் குதறுகிறார்கள். நிறைவுறா ஆசைகளுடன் அலைந்து திரியும் ஆவிகளைப்போல அமானுஷ்ய மனிதர்களாக வாழ்ந்து தொலைக்கிறார்கள்.

நிஷா மன்சூர்

No comments: