அரபகத்திலிருந்து சமீபத்தில் நான் கொண்டு வந்திருந்த பேரீச்சம்பழங்களில் சிலவற்றை எனது மனைவி என் அருகில் அமர்ந்திருந்த மூன்று வயது மகள் தஸ்னீமிற்கு இன்று காலையில் கொடுத்தார்.
அவைகளை வாங்கி சாப்பிட்ட பின் விதைகளை கையில் எடுத்துக்கொண்டு சென்ற மகளிடம் சொன்னேன்.."அம்மா விதைகளை கொண்டுபோய் குப்பைக்கூடையில் போடுங்கள்; கீழே போட்டுவிடாதீர்கள்" என்று.
அதற்கு மகள் திரும்ப என்னிடம் கேட்ட பதில் கேள்வி "ஏன் அத்தா குப்பைக்கூடையில் போட வேண்டும்...? நம் வீட்டு கொல்லையில் போட்டால் முளைக்குமே...? என்று.
மகள் பேசிய வார்த்தை கேட்டு நான் சற்று வியந்து நிற்கையில் என் மனைவி சொன்னது! ... எந்த பழத்தை கொடுத்து சாப்பிட சொன்னாலும் அதை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை எங்கேயும் வீசி விடாமல் கொண்டுபோய் நம் வீட்டு வீட்டுத்தோட்டத்தில் உள்ள பூந்தொட்டியில் போடுவது மகளுடைய குணம் என்றார்.
"விதை" என்றால் அதை மண்ணில் விதைக்க வேண்டும்! அப்படி செய்தால் அது பலன் தரும் என்கிற அந்த உயர்ந்த அழகான எண்ணத்தை என் பிஞ்சு மகளுக்குள் விதையாய் விதைத்த படைப்பாளிகளிலேயே மிகச்சிறந்த அந்த படைப்பாளி ஒருவனுக்கே ஆயிரம் நன்றிகள்...💕
Samsul Hameed Saleem Mohamed


No comments:
Post a Comment