Monday, April 21, 2014

நான் நானாக இருக்க முடியாத எல்லா இடங்களையும் நான் வெறுக்கிறேன்.

தோழிகள் சபிதா சபி, தமிழ்நதி இருவரின் ’வீடு’பற்றிய பதிவை படித்ததும் எனக்கும் எழுத வேண்டுமெனத் தோன்றியது.

எத்தனையோ ஊர்களில், எத்தனையோ வீடுகளில் இதுவரை வாழ்ந்திருக்கிறேன். ஆனால் கடந்த கால சம்பவங்களை யோசிக்கும்போது எந்த சம்பவத்தையும் என்னால் வீட்டுடன் தொடர்புபடுத்த முடிந்ததே இல்லை. பால்யத்தின் முதல் வீட்டை நினைவுபடுத்தினால் வீட்டின் முன் நிற்கும் வளைந்த தென்னை மரம் தான் நினைவிற்கு வரும். அப்புறமான எல்லா வீடுகளையும் அருகில் வாழ்ந்த மனிதர்களின் நினைவுகளோடு தான் தொடர்புபடுத்த முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை வீடு என்பது ஒவ்வொரு இடுக்கிலும் அதிகாரத்தையும், கட்டளைகளையும் நிரப்பி வைத்துள்ளது. எல்லா இடங்களையும் விட வீடுகளில் தான் அதிக முகமூடிகளை நாம் அணிய வேண்டியுள்ளது. நான் நானாக இருக்க முடியாத எல்லா இடங்களையும் நான் வெறுக்கிறேன். அதில் முதன்மையான இடத்தை வீட்டிற்கு தருவேன்.

வீட்டை விட்டு கிளம்பி செருப்பை கால்களில் அணியும் ஒவ்வொரு முறையும் மனதளவில் நான் பறக்கத் தொடங்குகிறேன். அது பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கடற்கரைக்கு போவதானாலும் சரி.. திட்டமிடப்படாத ஒரு நெடுந்தூரப் பயணமானாலும் சரி. வீட்டை விடுத்து தள்ளியிருக்கும் பொழுதுகளில் வீடு ஒரு நிமிடம் கூட என் நினைவில் வருவதே இல்லை. பயணங்களில் வீட்டை சுமக்கும் மனிதர்கள் எனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

வீட்டை விட்டு புறப்பட்ட பயணத்தை போல் வீடு திரும்பும் பயணம் ஒருபோதும் சுவாரஸ்யமாய் இருப்பதில்லை. அன்றாட வாழ்க்கை போராட்டத்தில் இருந்து தப்பித்தல் என்பது இதற்கு பொருள் அல்ல. மேலே சொன்னது போல் நம்மை நாமாக இருக்கவிடாத ஒரு கூட்டிற்கு திரும்புவது குறித்த அச்சமே காரணம். வீட்டை கூடு என்று சொல்வதே தவறு என்று தோன்றுகிறது. எந்தப் பறவையும் கூட்டை சுமப்பதில்லை. பறவைக்கு அது அவ்வப்போது தங்குவதற்கானது மட்டுமே. எல்லையற்ற வானத்தின் எந்த மூலையிலும் தனக்கான கூட்டை கட்டிக் கொள்ளும் சுதந்திரம் அந்தப் பறவைக்கு இருக்கிறது.

மின்னுவும் என்னைப் போன்ற மனநிலையிலே இருப்பது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். சென்னையின் அடுக்குமாடி வணிக வளாகங்கள் என்னைப் போலவே அவளுக்கும் விருப்பமானதல்ல.. அதில் இருக்கும் விளையாட்டு தளத்தில் கொண்டுபோய் விட்டாலும் பத்தாவது நிமிடமே அந்நியமாக உணரத் தொடங்குகிறாள். ஏனெனில் அவளும் என்னைப் போலவே கட்டிடங்களை வெறுக்கிறாள். கடலும், மலையும், காடும், மனிதர்களும் அவளுக்கு விருப்பமானவை. கண்களில் ஆர்வம் மின்ன, புதிய எதிர்பார்ப்புகளோடு தன் குட்டிச் செருப்புகளை மாட்டிக் கொண்டு ஒவ்வொரு முறையும் என்னோடு கிளம்புகிறாள்.

அவநம்பிக்கையும், வன்மமும் நிறைந்து கிடக்கும் இந்த வாழ்வியல் சூழலில்.. எல்லையற்று விரிந்து கிடக்கும் இந்த உலகின் முன்பு, இயற்கையின் முன்பு எங்களை தொலைப்பதன் மூலமே நாங்கள் எங்களுக்கான நம்பிக்கைகளை நாங்கள் மீட்டெடுக்கிறோம்.. வீட்டுக்குள் ஒருவித பதட்டத்தோடும், எந்த நள்ளிரவிலும் சாலைகளில், ஆள் அரவமற்ற பாதைகளில் கூட ஒருவித அமைதியோடும் மனம் இருப்பதை நானே ஆச்சர்யத்தோடு கவனித்திருக்கிறேன்.. வீட்டுக்குள் ஒருமணி நேரம் கூட என்னால் தனியாக உட்கார முடிந்ததில்லை. பதறிப்போய் வெளியே கிளம்புகிறேன். தனியாக இருக்க நேரும் பொழுதுகளில் புத்தகங்களுக்குள், திரைப்பட டிவிடிகளுக்குள் என்னை புதைத்துக் கொள்கிறேன்.

அடக்குமுறையின் எல்லா பரிமாணங்களையும் அனுபவித்தவர்களுக்கே பறத்தலின் ஆனந்தம் புரியும். அவர்கள் தங்கள் சிறகுகளை ஒருபோதும் தொலைக்க விரும்புவதில்லை. வீடுகள் எப்போதும் சிறகுகளை வெட்டும் கத்திகளை கூர்தீட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த உண்மை உணரத் தொடங்கிய ஒருநாளில் தான் வீடுகளை வெறுக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.

செடிகளும், மரங்களும்,நிரம்பிய ஒரு தோட்டத்தில் ஒரு குட்டி வீடு பற்றிய கனவொன்று எனக்கும் உண்டு. அந்த அழகான வீட்டிற்குள் உட்கார்ந்து வாசித்துக் கொண்டே, படம் பார்த்துக் கொண்டே, தனக்கு பிடித்த வாழ்க்கையை எவர் இடையூறும் இன்றி அனுபவிக்கும் ஒரு பெண்ணின் சித்திரம் மனதுக்குள் அடிக்கடி வந்து போகிறது. அது நான் தான் என சொல்லவும் வேண்டுமா? ஆனால் அந்த வீடும் கூட நான் எப்போதும் தங்குவதற்கானதல்ல.. எல்லா பயணங்களின் முடிவிலும் நான் சென்று இளைப்பாறும் ஒரு கூடாக மட்டுமே அது இருக்க வேண்டும்..
  
பிரியா தம்பி Priya Thambi

No comments: