Sunday, April 13, 2014

மொழி வெவ்வேறு மதத்தவரை ஒன்றிணைக்கும் !

முன்னொரு காலத்தில் புதுக்கோட்டை நகரில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட ஆங்கிலோ இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் வசித்து வந்தன. இப்போது யாரும் இல்லை. அந்த சமூகக் குடும்பங்களில் ஒருவர் திருமதி.இமாகுலேட். கணவனை இழந்த சுமார் 50 வயதான, பிள்ளைகள் இல்லாத அவர் தனக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் வீடு மற்றும் செல்லப் பிராணிகளோடு வசித்து வந்தார்.

ஒருமுறை மின்விசிறி வாங்க திரு.இஸ்மாயில் என்ற 30 வயது இளைஞரின் எலக்ட்ரிகல் கடைக்கு வந்த அவர் பிற்பாடு அவன் என் பிள்ளை என்று பலரிடமும் பகிரங்கமாக அறிவிக்கும் அளவிற்கு அவனுக்குத் தாயாகவே ஆகிப்போனார். தினமும் மாலை அவம் கடையில்தான் இருப்பார்! என்ன காரணம்? மொழி!!

அது எப்படி மொழி வெவ்வேறு மதத்தவரை ஒன்றிணைக்கும்? ஒரே மதத்தைச் சேர்ந்த பாக்கிஸ்தானியரும், பங்களாதேஷ்காரர்களும் உருது, வங்காள மொழியால் பிரியும்போது ஒரு மொழி பாசம் ஒருவரைச் சேர்க்காதா என்ன?

அன்றைக்கும் சரி.. இந்த இடுகையை இடும் இந்த நொடிவரை சரி.. புதுக்கோட்டை நகரில் பிரிட்டீஷ் உச்சரிப்பில் ஆங்கிலம் பேசத் தெரிந்த ஒரே நபர் அந்த இஸ்மாயில்! புதுக்கோட்டைவாசிக்கு எப்படி பிரிட்டீஷ் ஆங்கிலம் வந்தது? அது ஒரு பெரிய கதை.. அந்த இஸ்மாயிலுக்கு 7 வயதாக இருக்கும்போது அவர் அப்பா இறந்துபோனார். அவர் அப்பாவின் ஆப்த நண்பரும் இலங்கையில் உள்ள நுவரெலியாவில் பெரும் தொழிலதிபராக இருந்தவருமான திரு.முகமது காசிம் விசயம் கேள்விப்பட்டு இந்தியா வந்து தந்தையை இழந்து நின்ற அநாதைச் சிறுவன் இஸ்மாயிலை தன்னோடு இலங்கைக்கு அழைத்துச் சென்று அங்கு ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட ஹோலிடிரினிட்டி பள்ளி & கல்லூரியில் படிக்கவைத்து தன் மகளையும் பிற்பாடு கட்டிவைத்தார்.
திருமணம் முடித்த இஸ்மாயில் சொந்த ஊரான புதுகைக்குத் திரும்பி அங்கேயே எலக்ட்ரிகல் கடையும் துவங்கி வாழத்துங்கிவிட்டார்.

நிற்க, திருமதி.இமாகுலேட்டின் உடல்நிலை சட்டென்று சரியத் துவங்க தனது மகனாக எண்ணும் இஸ்மாயிலிடம் எனக்குப் பிறகு இந்த இடத்தை உனக்குத் தர எண்ணி உயில் எழுத நினைக்கிறேன் என்றார். அதற்கு இஸ்மாயில் "இறைவன் புண்ணியத்தில் எனது அப்பா விட்டுச் சென்ற சொத்துக்களும், நன்றாக சம்பாரிக்கும் தொழிலும் எனக்கு இருப்பதால் உங்கள் சொத்து எனக்கு வேண்டாம். வேறு ஏதேனும் நல்ல காரியத்துக்கு அதை எழுதுங்கள் அம்மா" என்கிறார். அவர் சொன்னதன் உண்மையை அறிந்த அவர் அந்த இடத்தை சர்சிற்கு எழுதி வைக்கிறார். இன்றைக்கு அந்த இடத்தில் மெட்ரிக் பள்ளி இருக்கிறது. தனது தாய்மொழியான ஆங்கிலம் பேசத் தெரிந்த ஒருவனுக்கு அந்த இடத்தை எழுத நினைத்தார். இன்றைக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் அவரது மொழியை அந்த இடத்தில் தினமும் பேசிக்கொண்டு இருக்கிறனர்!!! அடடே... ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேனே! அந்த முகமது இஸ்மாயில் வேறு யாரும் இல்லை.. என் பெயருக்கு முன்னால் இன்ஷியலாக இருப்பவர் 

                                                                      M.m. Abdulla

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails