Tuesday, April 22, 2014

Yuva Krishna குறித்து இப்படியொரு ஸ்டேட்டஸ்

 Yuva Krishna குறித்து இப்படியொரு ஸ்டேட்டஸ் போட ஒரே காரணம், இன்று ஏப்ரல் 22 என்பதுதான்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவரை அறிவேன். நெருக்கமாகவும். அதனாலேயே சில 'உண்மைகளை' போட்டு உடைக்க வேண்டியிருக்கிறது.

முகநூல் நிலைத்தகவல் வழியாக தன்னை ஆணாதிக்கவாதியாகவும், ஜொள்ளராகவும் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தும் யுவகிருஷ்ணா, உண்மையில் இதற்கு நேர் எதிரானவர்.

பெண்களை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்க மாட்டார். சொல்லப் போனால் அவர்களுடன் பேசவே தயங்குவார். முடிந்தவரை அதை தவிர்க்கத்தான் முயற்சிப்பார். முடியாதபட்சத்தில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உரையாடலை வளர்க்க மாட்டார்.

போலவே 'ங்க' இல்லாமல் யாரையும் அழைத்ததில்லை.

மட்டுமல்ல, எந்தப் பெண் குறித்தும் தனிப்பட்ட உரையாடலிலும், முதுகுக்கு பின்னாலும் தரக்குறைவாக பேசியதில்லை. அவதூறுகளை அள்ளி வீசியதில்லை. இது நடிகைகளுக்கும் பொருந்தும்.

வீட்டில் இருந்து எப்போது தொலைபேசி வந்தாலும் அதை தவிர்க்க மாட்டார். மனைவியை தவிர வேறு எந்தப் பெண்ணையும் '...ம்மா' என்று அழைக்க மாட்டார்.

தீவிர ஒழுக்கவாதி.

குடும்பத்தினரை - குறிப்பாக வாழ்க்கை இணையை - எந்தக் கட்டத்திலும் விட்டுக்கொடுத்ததில்லை.

எல்லோருமே ஏதோ ஒரு கட்டத்தில் உடைந்து போய் நெருக்கமானவர்களிடம் சில அந்தரங்கமான விஷயங்களை சொல்லி புலம்புவோம்.

யுவகிருஷ்ணா அப்படி உடைந்த நிலையில் கூட குடும்பத்தினரை விட்டுக் கொடுத்ததில்லை.

இதையெல்லாம் இப்போது எதற்கு சொல்ல வேண்டும்?

இன்று தன் பத்தாவது திருமணநாளை அவர் கொண்டாடுகிறார்.

இந்திய சமூகத்தில் / குடும்ப அமைப்பில் வளரும் ஆண், கண்டிப்பாக ஆணாதிக்கவாதியாகத்தான் இருப்பான் / வளர்வான். பெண்களை அவமதிப்பது அவனைப் பொருத்தவரை இயல்பான விஷயம். இப்படித்தான் அவனது சுயம், கட்டமைக்கப்படுகிறது.

ஆனால், அதை களைந்து தன்னை மாற்றிக் கொள்வதுதான் ஒவ்வொரு ஆணும் செய்ய வேண்டிய விஷயம்.

அதைத்தான் தனக்கு தெரிந்த வகையில் செய்திருக்கிறார் யுவ கிருஷ்ணா.

இப்படி அவர் மாறவும், வாழவும் சர்வநிச்சயமாக அவரது வாழ்க்கை இணைதான் காரணம்.

பரஸ்பரம் இருவரும் தாங்கள் அறிந்த சுதந்திரத்தை மற்றவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். ஒருவரது தனிப்பட்ட ஸ்பேஸில் மற்றவர் நுழைவதில்லை. அதே நேரம், தங்கள் இருவருக்கு என்று இருக்கும் ஸ்பேஸில் மற்றவர் நுழைய அனுமதித்ததில்லை.

யுவகிருஷ்ணாவின் நிலைத்தகவலை வாசிக்கும்போது இதை உணர முடிகிறது.

இதே அன்புடனும், தோழமையுடனும், நான்கு சுவற்றுக்குள் சண்டையிட்டும் -

இருவரும் இறுதிவரை வாழவும், பயணப்படவும் வாழ்த்துகள்...

                                  கே. என். சிவராமன்
Yuva Krishna
 முதல் நூறு நாள் பல்லை கடிச்சி சமாளிச்சிக்கோ. எந்த சண்டை சச்சரவும் இல்லாம பாஸ் பண்ணிட்டா போதும். அதுக்கப்புறம் லைஃப் ஃபுல்லா அதேமாதிரி பீஸ்புல்லா, ஸ்மூத்தா ஓடிடும்’ அனுபவஸ்தர்கள் சிலர், மேரேஜ் இன்விடேஷனை கொடுக்கும்போது சொல்லிய அட்வைஸ் இது.

கண்ணை மூடிக்கொண்டு இதைதான் பின்பற்றினேன். கல்யாணம் செய்துக்கொள்ளப் போகும் தோழர்களுக்கும் இதைதான் வலியுறுத்துகிறேன்.

பத்து ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு சின்ன சண்டை கூட வந்ததில்லை. ரொம்ப சின்ன அளவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதுவும்கூட எங்கள் படுக்கையறையின் நாலு சுவர்களை தாண்டி வெளியே போனதில்லை. அவர் கண்ணை கசக்கிக்கொண்டு, அம்மா வீட்டுக்கு போனதில்லை. பிரச்சினையென்று எங்கள் குடும்பத்தில் யாரும் பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலைமை வந்ததில்லை.

கல்யாணத்துக்கு பிறகு இருவரும் பேசி, எங்கள் கூட்டணி ஆட்சிக்கு காமன் மினிமம் புரோகிராம் டைப்பில் ஓர் ஒப்பந்தம் செய்துக்கொண்டோம். இருவரின் விருப்பங்களும், ரசனைகளும் வேறு வேறாக இருக்கலாம். ஒருவரின் முடிவில் இன்னொருவர் தலையிடக்கூடாது.

இன்றுவரை இந்த குறைந்தபட்ச செயல்திட்டம் வெற்றிகரமாக அமலில் இருக்கிறது.

முதலிலேயே ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன். நான் அம்மா பிள்ளை. அம்மாவைப் பற்றியோ, சகோதரியைப் பற்றியோ எந்த புகார் சொன்னாலும் என் காதில் விழவே விழாது. எனவே மாமியார், நாத்தனார் பற்றி என்னிடம் எதுவும் அவர் கம்ப்ளையண்ட் செய்ததே இல்லை.

அவருக்கு மெகாசீரியல் பிடிக்கும். எனவே டிவியை தியாகம் செய்துவிட்டேன். ஐ.பி.எல். கூட அக்கம்பக்கம் வீடுகளுக்கு போய்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. போலவே, பக்திப்படங்களில் வரும் ஹீரோயின் மாதிரி அநியாயத்துக்கு பக்தி. வெள்ளிக்கிழமை பொன்னியம்மன் கோயில். ஆடி மாசம் கூழ். குலதெய்வ வழிபாடு. பிரதோஷத்துக்கு பிரதோஷம் சிவனுக்கு பாலாபிஷேகம். விரதம், லொட்டு லொசுக்கு என்று ரம்யாகிருஷ்ணன், சீதா, கே.ஆர்.விஜயா டைப். என்னுடைய சொந்தத் தேர்வான நாத்திகத்தை அவரிடம் வலியுறுத்துவதில்லை. கோயிலுக்கு அழைத்தால் கூடப்போவேன். கும்பிடச் சொல்லி அவர் வற்புறுத்த மாட்டார்.

குடும்பம் என்பது பெண்களின் ராஜ்ஜியம். இந்தியச் சூழலில் குடும்பத்தை ஆள அவர்கள்தான் விரும்புகிறார்கள். ஆண்கள் குடும்பப் பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதை வெறுக்கிறார்கள். இந்தியப் பெண்கள் குறித்த என்னுடைய புரிதல் இது. எனவே மாதாமாதம் சம்பளக் கவரை அவர்களிடம் கொடுத்துவிட்டு, எந்த முடிவாக இருந்தாலும் மாமியாரும், மருமகளும் முட்டிக்கொண்டு எடுத்துக் கொள்ளட்டும் என்று ஆரம்பத்திலிருந்தே லீசில் விட்டுவிட்டேன். ஆழ்ந்த தூக்கத்திலும் கூட ‘டீ’ போட்டு ஒருமையில் விளிக்க மாட்டேன். எனக்குத் தெரிந்த பெண்ணியம் இவ்வளவுதான்.

அவருக்கு என் மீது ஒரே ஒரு புகார்தான். நான் சேகரிக்கும் புத்தகங்கள் வீட்டின் எல்லா ஷெல்ஃபையும் அடைத்துக் கொள்கிறது. குழந்தைகளின் உடை, பொம்மைகளை வைக்க இடமில்லை. அவ்வளவுதான்.

இன்று அவர் என்னைப்பற்றி அவர்கள் வீட்டில் ஏதாவது புகார் செய்தாலும், நான் அவரைப் பற்றி எங்கள் வீட்டில் ஏதாவது புகார் செய்தாலும் பரஸ்பரம் இரு குடும்பமும் நம்பவே நம்பாது. நல்ல மாப்பிள்ளை, நல்ல மருமகள் என்று தம்பதிசமேதரராய் பெயரெடுத்திருக்கிறோம். வேறென்ன வேண்டும்?

எங்கள் திருமண ஒப்பந்தக் கூட்டணியின் பத்தாவது வருஷம் இன்று தொடக்கம். லைஃப் ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் ஓடிக்கிட்டு இருக்கிறமாதிரி செம ஸ்பீடாகவும், த்ரில்லிங்காகவும் இருக்கு.
  அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யுவகிருஷ்ணா

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

யுவ கிருஷ்ணாவின் மாறுபட்ட இன்னொரு முகத்தை அறிந்து வியந்தேன்! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!