Monday, October 14, 2013

இஹ்ராம் என்றோர் இலக்கணம்

முதல் ஆலயம் நீ!
முதல்வனின் ஆலயம் நீ!
கஅபாவே - உன்னைக்காண
கண்ணுக்குள்  ஓர் ஆவல்
கனன்றுகொண்டேயிருக்கிறது.


அருள் நிரம்பிய உன்
அழைப்புக்குச் செவியேற்போர்
அதிருஷ்ட சாலிகள்
ஆன்ம தேகத்தில் திரண்ட
பாவ அழுக்குகளை
'ஜம் ஜம் நீரால் கழுவி
மூமின் என்று முத்திரை பெறுகிறார்கள்

கழுவப்பட்ட அழுக்குகளுக்கு
கதிரொளியே பகரமாகிறது!

ஹஜ்ஜுக்கடமையே....!
இறக்கிவைக்க, இறக்கி வைக்க
எல்லாச் சுமைகளையும்  நீ
ஏற்றுக்கொள்வதால் தானோ
இந்த மனிதர்கள்
உலகின் எல்லா இடங்களிலும்
பாவங்களைப் பொறுக்குகிறார்கள்?

கருவறை தொடங்கி
கல்லறை வரை
காலடித் தொடரும் ஷைத்தான்
உன்னிடத்தில் வரும்போது
கற்தூணாகி விடுகின்றான்
ஆனாலும் தப்ப முடியாமல்
கல்லெறிந்து கொல்லப்படுகிறான்.

ஏ! மனிதா..!
இறை அளித்த வாழ்வுநெறியை
வெட்டியும் தைத்தும் உடுத்துவதால்
நீதான் கிழிந்துபோகிறாய்.
வெட்டாமல் தைக்காமல்
அப்படியே அணிந்துக்கொள்.
இஹ்ராம் போலோர் இலக்கணம்
இதமாய் உணர்த்துகின்றாய்.


அரசர்களாய் வந்தவர்கள்
அதிகாரிகளாய் வந்தவர்கள்
'தான்' கரைந்து தெரிந்துகொள்கிறார்கள்
விரிந்த பிரபஞ்சத்தின் அதிபதியைப்
புரிந்துகொள்கிறார்கள்
அதனால்

பாலகனாகித் திரும்புகிறார்கள்
'அர்ப்பணிப்புகள் யாவும் அல்லாஹ்வுக்கே'

இறைத்தோழர் இபுறாஹிம்
உணர்த்திய வழியில்
இறுதியில் ஒரு குர்பானீ !
மனோஇச்சையை அறுத்து.

'வந்து விட்டேன்..... இதோ வந்துவிட்டேன்...!
---
தியாகத் திருநாளின் இனிய நல்வாழ்த்துகள்

- H.FAKHRUDEEN (இப்னு ஹம்துன்)
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
நன்றி : http://www.satyamargam.com/

No comments: