Wednesday, October 9, 2013

வறுமை அலையை எதிர்த்து நில்லு


காலத்தின் கோலமென
காலமதை குறை கூறி
காரிரினுள் வாழ்ந்து வரும்
சோம்பேறி மனிதர்கள் வைத்த
சாம்ராஜ்யம் அழிக்கும் பெயராம்
வறுமை

இறைதந்த கரம் இருக்க
இயங்கி நடக்க கால் இருக்க
உழைப்பெனும் ஏணியை
உயரப்பிடிக்காதது ஏனோ
நீ உதிர்ந்திருப்பது
உன் குற்றம் தானோ

இயலாமை மனப்பான்மை
ஒருபோதும் கொள்ளாதே
முயலாமை உன் வாழ்வை
முடக்கிடுமே எந்நாளும்

மதிநிறைய மடமை சுமந்து
விதியென்று வேசமிட்டு
கெதியென்று முடங்கிக்கிடந்து
நீயும் மடிந்திடலாகுமோ
மனம் தனிலே
சோர்வு கொள்ளலாகுமோ

துணிவாய் துடிப்பாய் எழுந்து நில்லு
துன்பமதனை கடந்து செல்லு
கனிவாய் மலர உரைத்திட்டு
காற்றாய் நீயும் பறந்திடுவாய்
வனப்பாய் நீயும் வாழ்ந்திடவே
வறுமை நோயை ஒழித்து விடு

வெறுமை தாழ்வு நீங்கிடவே
வியப்பில் உறவுகள் போற்றிடவே
வாழ்கை எனும் நதியினிலே
வறுமை அலையை எதிர்த்து நில்லு
எழுந்து நிற்கும் வறுமையினை
எதிர்கொண்டு நீயும் வென்றுவிடு.

வீருற்று வெகுண்டெழுந்து
விண்ணதிர சாதித்து
சோதனையை சுகமாய் சுமந்து
சாதனை பல படைத்துடுவாய்
சன்னதி போற்ற வாழ்ந்திடுவாய்

அதிரை மெய்சா
நன்றி Source: http://nijampage.blogspot.ae/

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 19-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

No comments: