Wednesday, October 9, 2013

ஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே

ஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே
....உணர்ந்துதான் செயல்படுநீ - என்றும்
விழுப்பமே தந்திடும் பலன்களைப் பார்த்ததும்
...மேன்மையாய் உயர்ந்திடுநீ!


கண்களின் பார்வையைத் தாழ்த்தியே நடப்பதும்
.....கண்களின் வேலியாகும் - இஃதே
பெண்களின் உள்ளமும் உன்னிடம் மதிப்பினைப்
...பெற்றிடும் வேலையாகும்!

நாணமும் வேலியாம் மானமே காத்திட
…..நம்பினோர் நலம்பெறுவர் --அதனால்
காணலாம் நற்பயன் உள்ளமும் உடலுமே
….களிப்பினால் பலம்பெறுவர் !

 வறுமையும் வதைத்திடும் போதினில் இறையவன்
....வழிதனைப் பேணுவாய்நீ - அதற்குப்
பொறுமையாம் வேலியைப் பூட்டியே காத்திடு
....புலம்புதல் நாணுவாய்நீ!

உண்மையை வேலியாய்ப் பூட்டிட மவுனமாய்
....உதடுகள் காத்ததனால்-- என்றும்
திண்மையாய் உரம்பெறும் மனத்தினில் ஏற்படும்
...தெளிவிலா வார்த்தைகளும்!

மரபெனும் யாப்ப்பினை எழுதிட இலக்கண
.......வரம்புகள் முழுமையாகும்-- வேலியாய்
வரப்புகள் கட்டிய பாத்திகள் இடுவதால்
........வயல்களும் செழுமையாகும்!

மக்களைக் காத்திடும் வேலியாய் அரசியல்
......வளம்பெறல் மெய்தானா? -அந்த
மக்களை மறந்திட நினைப்பதும் மனத்தினில்
....மண்டிய பொய்தானா?

வேலியே பயிரையும் காப்பதாய் நினைப்பது
.. வேகமாய்ச் சுருட்டுகின்ற  - இவர்கள்
போலிகள் என்பதை உணர்ந்திடும் போதினில்
.. புரிந்திடும் திருட்டுகளும்!


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
அதிராம்பட்டினம் ( பாடசாலை),
வலைப்பூந் தோட்டம்:
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com ,

2 comments:

Kavianban KALAM, Adirampattinam said...

ஜஸாக்கல்லாஹ் கைரன்

பொருத்தமான படமும் இட்டமைக்கும், என் பாடலைப் பதிந்தமைக்கும் மிக்க நன்றி அண்ணா.

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...