Tuesday, October 1, 2013

நாயகம் ஒரு காவியம்


மனிதர்களில்
இவர் ஒரு
மாதிரி..
அழகிய முன் மாதிரி!

*

உலக அதிசயங்களில்
இது ஓர்
ஒப்பற்ற அதிசயம்-

காலடியில் மகுடங்கள்
காத்துக் கிடந்தன...
இவரோ ஓர்
ஏழையாகவே
இறுதிவரை வாழ்ந்தார்!

உலக அதிசயங்களில்
இது ஓர் ஒப்பற்ற அதிசயம்!

*
எல்லாரும்
வாயிற கதவுகளைத்
தட்டிக்கொண்டிருந்தார்கள்
இறுதி நபியாய்
எழுந்தருளிய இவர்தான்
தாழிட்ட மனக்கதவைத்
தட்டினார்.

*

அகதியாய் இதயங்கள்
அலைந்துக்கொண்டிருந்தபோது
இவருடைய
தோள்களே மானுடத்தைத்
தூக்கிக்கொண்டன.

கை கொடுத்த இவருடைய
கை'-
தொழுகை!

*

எழுதப் படிக்கத்
தெரியாதவர்தான்..
இவர்தான்
பூமியின் புத்தகம்!

*

சிம்மாசனங்களில் இவர்
வீற்றிருந்ததில்லை...
அண்ணலார்
அமர்ந்திருந்த இடமெல்லாம்
அரியணையானது!

*

கிரீடங்களை இவர்
சூட்டிக் கொண்டதில்லை...
பெருமானார்
தலையில் தரித்ததெல்லாம்
'மணிமகுடம்' என்றே
மகத்துவம் பெற்றது!

*

மக்கத்து மண்ணை இவர்
போர் தொடுத்து வென்றார்
அகில உலகத்தையும்
போர் தொடுக்காமலே
வெற்றி பெற்றார்!

*

கவலைகளால் இதயம்
கனக்கும் வேளையில்-
பெருமானாரின்
நினைவுக்குளத்தில்
இதயக் கவலைகள்
எடை இழந்து போகும்!

*

நடைபயிலும் கால்கள்
எங்கேனும்
நாட்காட்டி ஆனதுண்டோ?
மக்காவிலிருந்து மதீனாவுக்கு
இவர் நடந்தார் -
ஹிஜ்ரீ என்னும்
ஆண்டுக் கணக்கு
ஆரம்பமானது!

*

இவர்
இறைவனின் துறைமுகம்!
இங்கேதான் திருமறை
இறக்குமதியானது!

இவர் -
இறைவனின் துறைமுகம்...
இங்கிருதுதான்
திருமறை
எல்லா நாடுகளுக்கும்
ஏற்றுமதியானது!


*< கவிஞர் மு. மேத்தா






தகவல் தந்தவர் Mohamed Salahudeen>

 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்மாதிரி. வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரி!

Muhammad (SAW) Peace be Upon his Soul
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.

 إِنَّ اللَّهَ وَمَلَـئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِىِّ يأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments: