அந்த பயத்தின் வெளிப்பாடு தான் அமெரிக்காவின் உளவு வேலைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இணையத்தில் உலவும் எந்தச் செய்தியையும் திருட்டுத்தனமாக அமெரிக்காவால் படித்து விட முடியும் என சமீபத்தில் அதிர்ச்சிச் செய்தி வெளியானது. எதை வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கும் வகையில் அமெரிக்காவின் காதுகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டும் இருக்கின்றன.
தீவிரவாதத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என அவர்கள் தீவிரவாதத் தடுப்பு சட்டம் ஒன்றையும் புதிதாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள குண்டர் சட்டத்தோடு இதை ஒப்பிடலாம். யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் அள்ளிக் கொண்டு போய் ஜெயிலில் போட முடியும் என்பது இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம். யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது !
இத்தகைய பின்னணியில் தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 18 வயதான ஜஸ்டின் கார்ட்டருக்கு ஃபேஸ்புக்கில் விளையாடுவது ரொம்ப ரொம்பப் பிடித்தமான விஷயம். டீன் ஏஜ் பசங்களுக்கு அந்த ஆர்வம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை தானே. அவனும் விளையாடினான். அமெரிக்காவின் டெக்ஸாசில் இருக்கும் அவனுக்கு பார்ட்னராகக் கிடைத்த பையன் கனடாவில் இருக்கிறான். பிரபலமான லீக் லெஜட்ஸ் எனும் விளையாட்டு. விளையாட்டின் ஆர்வத்தில் கமென்ட்கள் பறந்தன.
டேய்.. நீ ஒரு கிறுக்குப் பய, மூளை ரொம்பக் கெட்டுப் போச்சு ! - எனும் கமென்டுக்குப் பதிலாக இந்தப் பையன் சிரித்துக் கொண்டே ஒரு கமென்ட் அடித்தான்.
ஆமாண்டா.. ரொம்பக் கெட்டுப் போச்சு. அப்படியே போய் பக்கத்து ஸ்கூல்ல துப்பாக்கிச் சூடு நடத்தி துடிக்கும் இதயத்தைச் சாப்பிடப் போறேன்.. ஹா....ஹா...
இந்த வாக்கியத்தை கனடாவிலிருந்த பையனின் அம்மா பார்த்திருக்கிறார், உடனே இந்தப் பையன் இருக்கும் ஏரியா காவல் நிலையத்துக்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்கிறாள். இந்தப் பொடியனின் போதாத காலம் அவனுடைய வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பள்ளிக்கூடமும் இருக்கிறது. காவல்துறையினர் வந்து அந்தப் பையனை அமெரிக்கக் குண்டர் சட்டத்தில் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்.
முதலில் இந்த நிகழ்ச்சியை சாதாரண விசாரணை பெற்றோர் நினைத்தார்கள். ஆனால் பிறகு தான் பையன் ஒரு சிக்கலான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விஷயம் தெரிய வந்தது. பெற்றோர் அதிர்ந்து போனார்கள். மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட பையன் இன்னும் சிறையிலேயே தான் வாடுகிறான். வெளிவர முடியாதபடி அவனைச் சுற்றி சதுரங்க நகர்த்தல்கள் நடக்கின்றன. ஒருவேளை அவன் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டால் 8 ஆண்டுகள் இருட்டுச் சிறைகளுக்குள் அடைபட வேண்டிய கட்டாய நிலை அவனுக்கு உருவாகும்.
அவனை வெளியே விடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டவர்கள் பெயில் தொகையை அரை மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 3 கோடி ரூபாய்கள் என நிர்ணயித்தார்கள். அத்தனை தொகையைக் கட்டி பையனை வெளியே எடுக்கக் கூடிய அளவுக்குச் செல்வம் அந்தப் பையனின் வீட்டில் இல்லை.
மிகச் சாதாரணமான ஒரு கமென்ட், அதுவும் விளையாட்டின் இடையில் சொல்லப்பட்ட ஒரு கமென்ட், அதுவும் ஸ்மைலிகள், லாஃப் அவுட் லவுட், ஜஸ்ட் கிட்டிங் போன்ற சிரிப்பு வாசகங்களோடு சொல்லப்பட்ட ஒரு கமென்ட் இத்தனை தீவிரமாய் எடுத்துக் கொள்ளப்பட்டது பலருடைய புருவங்களையும் உயர்த்த வைத்திருக்கிறது.
இது அமெரிக்க அரசாங்கத்தின் அதிகப்படியான பயத்தின் வெளிப்பாடு என்று ஒரு சாரார் குரல் கொடுக்கின்றனர். சில அமெரிக்க ராமதாஸ்கள் இதை யூதர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி என வர்ணிக்கின்றனர். காரணம் அந்தப் பையன் ஒரு யூதன். இன்னும் சிலர் இது அடிப்படைப் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிக்கும் அராஜகம் என கொதிக்கின்றனர். அந்தப் பையனை சிறையில் நிர்வாணமாய் அடைத்து வைத்து, அடித்துக் கொடுமைப்படுத்தி அவனை மன அழுத்தத்தின் உச்சத்தில் தள்ளிவிட்டதாய் அவனது தந்தை கதறி அழுது புலம்பி வருகிறார்.
அமெரிக்காவில் பேச்சுரிமை எல்லாம் பேச்சளவில் தான் என்பது சமீபகாலமாக நிரூபணமாகிக் கொண்டே இருக்கிறது. தொலைபேசிகளில் சில வார்த்தைகள் பரிமாறப்பட்டாலே உஷாராகிவிடும் காவல்துறை காரணம் கேட்காமல் கைது செய்யத் தயாராய் இருக்கிறது. சந்தேகம் இருப்பவர்கள் ஏதாவது அமெரிக்க ஏர்போர்ட்டில் நின்று "பாம்ப்" என்று சொல்லிப் பாருங்கள், ஒரு ஹாலிவுட் படம் போல நீங்கள் அள்ளிக் கொண்டு போகப்படுவீர்கள்.
அந்தப் பையன் மீதான நம்பமுடியாத அதிகார வன்முறை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதே வேளையில் இன்றைக்கு இணையம் மூலம் பகிரப்படும் செய்திகள் நம்மை எப்படியெல்லாம் பூமராங் மாதிரித் திருப்பித் தாக்கலாம் என்பதையும் நமக்கு திகிலுடன் விளக்குகிறது.
ஃ
சேவியர்
Joseph Xavier Dasaian Tbb
( வெற்றிமணி - ஆகஸ்ட் 13' ஜெர்மனி )
No comments:
Post a Comment