நீரை விசிறியாக்கி நீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது போல் மகிழ்வு கிடைக்கும். எத்தனை அற்புதம் இயற்கையோடு விளையாடுவதில். சிறு வயது விஞ்ஜானிகள் நமக்குள் இருக்க நாம் திகைத்து பார்ப்பதோடு இருந்து விடுகின்றோம். விளையாட்டிலும் எத்தனை அறிய புதிய கண்டுபிடிப்புகள்! குழந்தைகளின் அறிவின் வளர்ச்சி விளையாட்டாகவே குழந்தைகள் பருவத்தில் ஆரம்பித்து விடுகின்றன. நாம்தான் அவர்களை உற்சாகப் படுத்தாமல் 'என்னடா இந்த வீண் விளையாட்டு' என்றும் 'விளையாடாதே ஜுரம்(காய்ச்சல்) வந்துவிடும்' இன்னும் பலவித தடைகள் விதித்து அவர்களின் அறிவை வளர்க்க விடாமல் தடை விதித்து விடுகின்றோம்.
விளையாட்டு உடல்நலத்திற்கும் அறிவின் வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றது. விளயாடும்போது சில காயங்கள் ஏற்படுவது இயல்பு. பயம் காட்டியே வளர்ந்த குழந்தை தன் வாழ்நாளின் பெரும் பகுதி பயத்திலேயே வாழ்நாளை ஓட்டும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. சின்ன, சின்ன விபத்து ஏற்படும்போது இயல்பாகவே அது தனக்கு பெரிய ஆபத்து வராமல் பாதுகாத்துக் கொள்ளும் மற்றும் தனது திறமையையும் வளர்த்துக் கொள்கின்றது. விடுங்கள்.. அது இயற்கையின் அருமையினை அறிந்து தன அறிவினை வளர்த்துக் கொள்ளட்டும். பாதுகாப்பு வளையம் போடாமல் நீங்கள் பாதுகாவலனாக இருங்கள்
எதில் என்ன இறைவன் மறைத்து வைத்துள்ளானோ! முயன்றால் பயன்தர இறைவனது அருளும் கிட்டும். இயற்கையை கண்டு ரசிப்பதோடு இல்லாமல் அதனை நம் வயப்படுத்திக்கொள்வதே இறைவனது நாட்டமும். இயற்கை நம்முடன் விளையாடும்பொழுது நாமும் அதனுடன் விளையாடி மகிழ்வோம்.
"ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா" என்பது பாரதியின் கூற்று.
1 comment:
பெற்றோர்களுக்கு நல்லதொரு அறிவுரை.
Post a Comment