அறிவே சக்தி. அறிவைப் பகிர்ந்து கொள்வது மகத்தான சக்தி.
டேவிட் நெல்சன்
'பொருளைத் திருடலாம் அறிவைத் திருட முடியுமோ! அதனால் அறிவை வளர்த்துக் கொள்' என்று சொல்வதனைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அறிவும் எழுத்து வடிவில் வந்து விட்டால் திருட்டுப் போய்விடுகின்றது என்பதால் 'காப்பிரெய்ட்' செய்யும் காலம் வந்து விட்டது. வியாபாரம் 'உலகமயம்' என்ற மாயம் வந்த காலத்தில் வாழும் நிலை.
அறிவு இறைவன் கொடுத்த அருள்களில் ஒன்று. அதனை ஒருவர் சொன்ன கருத்தையோ அல்லது எழுதியவைகளையோ தான் சொன்னதாக அல்லது தான் எழுதியதாக சொல்வது தவறு.அதனையே நாம் அவர்கள் சொன்னவைகளை அல்லது எழுதியவைகளை அவர்கள் பெயரிலேயே பயன் படுத்துவது தவறாக அல்லது திருட்டாக எண்ணக் கூடாது, அவர் அதனை செய்யக் கூடாது என்று தடை விதித்து சொன்னால் தவிர. இருப்பினும் அறிவு அவரை விட்டு உலகத்திற்கு வந்த பிறகு அவ்விதம் தடை போடுவது சிறப்பாக இருக்காது .அறிவு அனைவரிடமும் சென்றடைய வேண்டும். திருவள்ளுவர் கம்பர் , சித்தர் பாடல்கள் இன்னும் பல தமிழ் காவியங்கள் எழுதியவராலும் அல்லது அதனை உலகத்திற்கு கண்டு பிடித்து தந்தவர்களும் அவர்கள் அவைகளை இவ்விதம் தடைவிதித்து இருந்தால் எப்படி நிலைமை இருக்கும் என்பதனை சிந்தித்துப் பாருங்கள். இன்று எல்லாமே தொழில் மயமாக மாறிவிட்டதால் சிந்தனையின் வெளிப்பாட்டின் வழியே வந்த எழுத்துகளும் வியாபாரமாக மாறிவிட்டது . முடிந்தவரை இவைகள் 'காப்பிரெய்ட்' இல்லாமல் இருப்பது சிறப்பாகும்.
"உங்களின் உயர்ந்தவர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர்"
விஞ்ஞான வளர்ச்சியின் முடிவு, மனித குலத்தின் அழிவு !
தமிழ்கிறுக்கன்.
நான் இங்கே எழுதிய கட்டுரை எனது ஆசிரியர்கள் கற்றுத் தந்த அறிவினால் வந்த
திருட்டோ! இரண்டு மேற்கோள்களும் இதில் வந்துள்ள படங்களும் அதனைச்
சார்ந்தவையோ! இறைவா அப்படியானால் மன்னிப்பாயாக!.
Please click here to read :No Copyright in Islam
----------------------------------------------------------------------------------
எழுத்துகளுக்கோ கருத்துகளுக்கோ காப்புரிமை கொண்டாடாதீர்!
இஸ்லாம் மட்டுமே இறைவனுடைய மார்க்கம்: ''நிச்சயமாக (தீனுல்)
இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்''.
(3:19)
ஆகவே இஸ்லாத்திலுள்ள எந்த விஷயத்தைப்பற்றியும்
குறிப்பாக குர்ஆன் மற்றும் ஹதீஸிலுள்ள வசனங்களையோ கருத்துகளையோ பயன்படுத்தி
கட்டுரையோ பிற ஆக்கங்களையோ உருவாக்கி இது எனக்கு மட்டும் சொந்தமானது என்று எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதற்கான உரிமை உலகிலுள்ள எவருக்கும் கிடையாது. அப்படி எவரேனும் கருதுவாரானால் அவர்
ஒன்று அப்பட்டமான சுயநலவாதியாக இருக்க வேண்டும் அல்லது அறியாமையில்
மூழ்கியிருப்பவராக இருக்க வேண்டும், கற்றறிந்த அறிஞராக இருந்தாலும் சரியே!
தீனை (மார்க்கத்தை) எடுத்துச் சொல்லும் எவரும் அதற்கான கூலியாக பணத்தை மட்டுமல்ல புகழை எதிர்பார்ப்பதும் இஸ்லாத்தில்
தடுக்கப்பட்டதே! ஏனெனில் தீனுக்காக உழைக்கும்போது அதற்கான கூலியை
அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்ப்பதுதான் ஒரு உண்மையான முஸ்லிமுக்கு அழகு.
உதாரணமாக ஒரு முஸ்லிம் இஸ்லாமிய மார்க்கம் குறித்த செய்திகளை வாய் மொழியாக
(சொற்பொழிவாக) வெளியிடும்போது அவர்– தனது பேச்சுக்கு உரிமை கொண்டாடுவதை
காணமுடியாது.
ஒரு மார்க்க சொற்பொழிவாளர் பேசியதை இன்னொருவர் வேறு
இடத்தில் பேசும்போது அப்படியே எடுத்துப் பேசுவதை எவரும் தடைசெய்யும்
நடைமுறை உலகில் எங்குமில்லை. அவ்வாறு இருக்கும்போது அதே
பேச்சு, எழுத்து வடிவில் வரும்போது இந்த கட்டுரையோ - இந்த ஆக்கமோ எனக்கு
மட்டும் சொந்தமானது என்று எவரேனும் சொன்னால்; இறைவன் வழங்கிய ‘இல்மு’
என்னும் அருட்கெடையை இவ்வுலக ஆதாயத்துக்காக அவர் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று தான் பொருள்.
கட்டுரையோ செய்தியோ ஒருவர் பெயரில் வெளியாகிறது எனில்
அதில் தவறு இருந்தால் அந்த எழுத்தாளரிடம் சுட்டிக்காட்டுவதற்கு அது வசதியாக
இருக்கும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில் ‘நிய்யத்’ வைத்து
கட்டுரையாசிரியர் தனது பெயரை வெளியிடுவதுதான் உயர்ந்த பண்பாடாக இருக்க முடியும். அதைவிடுத்து தான் எழுதிய கட்டுரைக்கு தான் மட்டுமே உரிமையாளர் என்று கருதுவது சரியானதாகாது. ஏனெனில் மார்க்கக் கட்டுரைகள் எழுதும் எவரும் அல்லாஹ்வின் திருவசனத்தையோ அல்லது அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகளையோ, செய்தியையோ கலக்காமல் எழுதவோ, சொற்பொழிவாற்றவோ முடியாது.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் மவ்லானா, ஜகரிய்யாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ‘அமல்களின் சிறப்பு’ எனும்
நூலை எடுத்துக் கொண்டோமானால் அது பிரபலமானதற்கு காரணம் மவ்லானா அவர்களின்
கருத்துக்கள் என்பதைவிட அதில் எடுத்தாளப்பட்டுள்ள இறைவசனங்களும்,
இறைத்தூதர் முஹம்மதுர்ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
வார்த்தைகளே என்பதை படிப்பவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். மவ்லான
அவர்களை குறை காண வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. தனது ஆக்கங்கள்
அனைத்தையும் சமுதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் அனுமதி
அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது நூலில் எடுத்தாளப்பட்டுள்ள திருவசனங்களை தவிர்த்துவிட்டு
அந்நூலைப் பார்த்தால் அதில் உள்ள விளக்கங்கள் சாதாரணமானவையே என்று கூட
சொல்லலாம். (இதை படிக்கும் அவர்களின் அபிமானிகளுக்கு கோபம் வரலாம், ஆனால்)
உன்னிப்பாக அதை படிப்பவர்களுக்கு அதை விட சிறப்பான விளக்கங்களை இன்றைக்கு
வாழ்ந்து கொண்டிருக்கும் ஏராளமான அறிஞர்களால் கொடுக்க முடியும் என்பதை
மறுக்க முடியாது.
ஒருவர் ஒரு மார்க்கக் கட்டுரையை எவ்வளவுதான் சிறப்பாக
எழுதி இருந்தாலும் அதில் இடம்பெற்றிருக்கும் இறைவசனமும் இறைத்தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லும் சில இடங்களில்
இடம்பெற்றிருந்தாலும்கூட அந்த கட்டுரையை அழுத்தமாக தாங்கி நிற்பதே அந்த
திருவசனங்களாகத்தான் இருக்கும் என்பதை படிப்பவர்கள் மிக எளிதாக புரிந்து
கொள்ள முடியும். அதுதான் மனிதனுடைய எழுத்துக்கும் இறைவனின்
திருவசனங்களுக்கும் உள்ள வேறுபாடு.
யாஸீன் ஸூராவில் ‘இன்னும், எங்கள் கடமை (இறைவனின்
தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை’ (என்றும்
கூறினார்). (36:17) என்று இறைவன் கூறுகின்றான். இறைவனின் செய்தியை
எடுத்துச்சொல்வது மட்டுமே நபியின் வேலை என்பதை அல்லாஹ்வே சுட்டிக்காண்பித்த
பின்னர் அதன் விளைவுகளைப் பற்றியோ இலாப நஷ்டங்களைப் பற்றியோ எண்ணுவதற்கு
எவருக்கு உரிமை இருக்க முடியும்?!
இதில் மிகப்பெரிய வினோதம் என்னவெனில் ''குர்ஆனை ஓதி கூலி பெறுவது இறைவனால் தடைசெய்யப்பட்டுள்ளது'' என்பதை
அழுத்தமாக எடுத்துச் சொன்னவர்களே இன்று இறைவன் வழங்கிய ‘இல்மை(அறிவை)க்
கொண்டு’ சொற்பொழிவின் மூலமோ, கட்டுரை எழுதுவதின் மூலமோ C.D., D.V.D..
போன்றவைகளில் பதிவு செய்து விற்று அதில் வரும் லாபத்தை - கூலியை (பணமாகவோ,
புகழாகவோ) பெற நினைப்பது, எதிர்பார்ப்பது எவ்வாறு சரியான செயலாக இருக்க
முடியும்?
தீன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எழுத்து வடிவில்
இருந்தாலும் சரி சி.டி. அல்லது டி.வி.டி. வடிவில் இருந்தாலும் சரி, அதை
எவரேனும் ஒரு முறை விலை கொடுத்து வாங்கியபின் அதனை தன் சுற்றத்தார்களும்
கேட்கவேண்டும் என்று விருப்பப்படும்போது அதனை எத்தனை முறை வேண்டுமானாலும்
பதிவு (Copy) எடுக்கலாம் என்பதே ஷரீஅத்தின் சட்டம். (கீழே உள்ள ஆங்கிலக்
விளக்கத்தைக் காண்க). ஆனால் அதனை விற்பனை செய்து இலாபம் அடைவது மட்டுமே
தவறு - கூடாது.
நமது நாட்டிலுள்ள ஒரு சிலர்;
இதுபோன்று C.D., D.V.D..க்களை பதிவு செய்வது, கட்டுரைகளை மற்றவர்களும்
படித்துப் பயனடைய வேண்டும் எனும் நோக்கில் எடுத்து பிரசரிப்பது தவறு என்று
தங்கள் சுய ஆதாயத்துக்காக ஃபத்வா கொடுக்கக்கூட துணிவதைக் காணும்போது
அவர்களின் தீன் சேவையில் சுயநலத்தின் சாயல்தான் தெரிகிறது.
தன் மூலம் வெளியாகும் எந்தவொரு தீன் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, தீனை நிலைநாட்டுவதற்கு அல்லாஹ் நம்மை ஒரு கருவியாக ஆக்கினானே என்று
அகமகிழ்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி கூற வேண்டுமேயொழிய எனது
கருத்துக்கு நான் தான் உரிமையாளன் என்று எந்த ஒரு இக்லாஸான, விபரமறிந்த,
உண்மையான முஸ்லிமும் சொல்லத்துணிய மாட்டார்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் ‘எங்களது பத்திரிகைதான் நம்பர் ஒன்’ என்று
சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதை காண முடிகிறது. இவையெல்லாம் அவர்களது
அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு முஃமினும் தீனுக்காக உழைக்க
வேண்டியது கடமையாக இருக்கும் அதே வேளையில் அதற்கான கூலியை அல்லாஹ்விடம்
மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். இந்த உலகில் கிடைக்கின்ற பணம், புகழ்
இவையணைத்தும் மறுமையில் நமக்குக் கிடைக்கக்கூடிய நற்கூலியை இழக்கும்படி
செய்துவிடலாம். ‘மறுமைக்கு முன்பாக இவ்வுலக வாழ்வு அற்பமானது’ என்று இறைவன்
ஸூரத்துத் தவ்பாவில் கூறுவதை நினைவில் கொள்வோம். இவ்வுலகில் செய்கின்ற
நற்காரியங்களுக்கு மறுமையில் இறைவன் வழங்க இருக்கும் மகத்தான கூலியை இழக்க
எவருக்கேனும் மனம் வருமா? சிந்திப்போம் சீர்பெறுவோம்.
சுவனவாசிகளில் பெரும்பலானோர் இவ்வுலகில் வாழுகின்ற காலத்தில்
மிகவும் சாதாரணமானவர்களக, மற்றவர்களால் பெரும்பாலும் அறியப்படாதவர்களாக
(முக்கியத்துவம் அற்றவர்களாக)வே இருப்பார்கள் எனும் கருத்தை எடுத்தியம்பிய
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகள் நமது நமது
காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். அவ்வாறு இருந்தால்தான் இவ்வுலகின்
வீணான புகழுக்கும் செல்வத்துக்கும் மயங்காதவர்களாக நம்மை நெறிப்படுத்த
முடியும். இல்லையெனில் திருமறை குறிப்பிடும் மாயக்காரனான ஷைத்தானின்
வலையில் வசமாக சிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்பதை
நினைவில் கொள்வோம்.
பொதுவாக எவரும் தன்னையோ தன்னைச்சார்ந்தவர்களையோ
நாங்கள்தான் நம்பர் ஒன் என்றோ நாங்களே சாதனையாளர்கள் என்றோ, நாங்களே
உயர்ந்தவர்கள் என்றோ கனவிலும் எண்ணாதீர்கள். ஏனெனில் ‘மேலே செல்பவரை கீழே இழுத்து விடுவது அல்லாஹ்வின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது’ எனும்
கருத்துள்ள நபிமொழி ஒன்று உண்டு. ஆகவே எந்த முஃமினும் தன்னை மற்றவர்களைவிட
உயர்வாக எண்ண வேண்டாம். ஒவ்வொருவருடைய உண்மையான எண்ணத்தையும்
அந்தரங்கத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! அவன் மட்டுமே அனைத்தையும்
அறிந்தவன். அவன் மட்டுமே என்றைக்கும்
எப்போதும் ‘நம்பர் ஒன்’னுக்கும் உயர்வான அந்தஸ்துக்கும் நிலையான,
நிரந்தரமான உரிமையாளன். அவனுக்கு முன்பாக நாமெல்லோரும் அடிமைகள் எனும்
எண்ணம்தான் நம்மிடம் மிகைத்திருக்க வேண்டும்.
காரணம்,
நமக்கு வேதத்தைக் கற்றுக்கொடுத்து, நம்மைத்
தூய்மைப்படுத்துவதற்காக (ஸூரா ஆல இம்ரான்) - ஏக இறைவனால் அகிலத்தின்
அருட்கொடையாக அனுப்பி வைக்கப்பட்ட இறைத்தூதர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் தன்னை அல்லாஹ்வின் அடிமை என்று சொல்வதில்தான்
பெருமையடைந்தார்கள். அவர்களைப் பின்பற்றக்கூடிய, பின்பற்றவேண்டிய நாமும்
நம்மை அந்த ஏக இறைவனின் அடிமையிலும் அடிமையாகக் கருதி மூச்சிருக்கும் வரை
புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டு ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விடாமல்
இறைவனின் கனிவான பார்வை நம்மீது விழுமாறு இறையச்சத்துடன் இறையாதரவுடன்
வாழ்வோம்.
அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
கட்டுரை ஆக்கம்: எம்.ஏ. முஹம்மது அலீ,
http://www.nidur.info
2 comments:
மனிதன் பிறக்கும்போது அவனுக்கு எந்த சிந்தனையும் இல்லை. அவன் வளர வளர அவன் கற்றுக்கொண்டவைதான் அவனுடைய மூளையில் பதிவாகி இருக்கின்றன. அந்த அறிவைக் கொண்டு அவன் தன்னுடைய சொந்த முயற்சியால் ஏதேனும் கண்டு பிடிக்கக்கூடும்.
அவை யாவும் அடுத்தவர் சொல்லிக் கொடுத்த கருத்துகளின் விளைவே ஆகும். ஆகவே யாரும் எந்தக் கருத்துக்கும் தான்தான் காரணம் என்று முழு உரிமை கொண்டாடுவது சரியல்ல என்பது என் கருத்து.
தங்கள் கருத்து அருமை டாக்டர் அவர்களே. மிக்க நன்றி .உங்கள் கருத்தும் எனது கருத்துடன் ஒத்துப் போகின்றது .உங்கள் விமர்சனையை நான் மிகவும் மதிப்பவன் அடுத்து உங்கள் கட்டுரையை நான் தொடர்ந்து படிப்பவன் .அன்புடன் நன்றி
Post a Comment