Monday, February 6, 2012

‘என்னைப்பெத்தவனே, என்னைப்பெத்தவனே!’

 ‘என்னைப்பெத்தவனே, என்னைப்பெத்தவனே!’
[ குழந்தைகள் அன்பை சொறிவதில் சலிப்படைவதே இல்லை, சோர்வடைவதே இல்லை. காரணம், அவர்கள் எதிர்ப்பின்றி நேசிக்கும் கலையில் தேர்ந்தவர்களாக உள்ளனர்.
தாம் நேசிப்பவை தம்மை நேசிக்கிறதா என்று அவை சந்தேகப்படுவதில்லை. தாமும் மற்றவைகளால் நேசிக்கப்படுவதாகவே குழந்தைகள் நம்புகின்றன. நாம் தான் இந்தக் கலையை வளர்ந்த பிறகு மறந்துவிட்டோம்.]
ஆண் - பெண் எனும் இரண்டு கழித்தல் கோடுகள், இல்லறக் கணக்கில் சமக்குறியாக இணை சேரும். பின்னர் கோடுகளின் தீண்டல்களில் கூட்டல் வரும், சரியான தப்பான பெருக்கல் வரும், இரண்டு புள்ளிக் கண்களோடு ஒற்றைக் கோடாக, வகுத்தல் குறி போலக் குழந்தை வரும், அந்த வகுத்தலுக்குப் பிறகே அந்த இணையர்க்கு ஈவும், இரக்கமும் வரும்.
கையடக்கப் பவுர்ணமி,

மின்னல் முளைத்த சின்னப் புன்னகை,
தாலாட்டின் இசைக் குறியீடு,
தென்றலால் செய்த விசிறி,
பளிங்கும், நுங்கும் சரிவிகிதத்தில் பிசைந்து செய்த உயிர்ப் பதுமை,
அன்னத்தின் தூவியில் எலும்பு,
அனிச்சம் பூவில் நரம்பு,
வெல்வெட்டுத் தங்க உடம்பு,
சந்தனத் தந்தக் கால்கள்,
பூரித்து இறங்கி வரும் புன்னகை அருவி,
ரோஜாத்தீ வாய்,
உள்ளங்கை பிஞ்சுப் பிறை விரல்,
பிளம்கனி உட்கார்ந்திருக்கும் வெனிலா ஐஸ்கிரீம் கண்கள்,
அதனைச் சப்புக்கொட்டும் உதடுகளாய் மினி இமைகள்,
சொர்க்கப் பூஞ்சிறகுகளாய் இரு செவிகள்,
பாலாடை வாய்,
தாய்ப்பால் குமிழியாய்த் ததும்பிடும் மூக்கு,
கையில் அள்ளினால் காஷ்மீரத்து வெண்பணி,
நொடியில் உயிர் கழுவும் துளிப் பூஞ்சிரி.
வறட்டுத் தரிசினை வசந்தப் பரிசாக்கும் இந்தக் குழந்தைகள் தான் எத்தனை அழகு! (-பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்)

குழந்தைகள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பார்கள். அதற்கு மூல காரணம், தன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளுடனும் அவர்கள் தடைகளற்ற ஓர் உறவை உருவாக்கிக் கொண்டிருப்பதுதான்.

பெரும்பாலும் குழந்தைகள் கையில் ஒரு பொம்மையை வைத்திருப்பார்கள். யாராவது அதை வாங்க முயற்சித்தாலோ பிடுங்கினாலோ உடனே கதற ஆரம்பித்துவிடும். காரணம், அந்தளவிற்கு முழமையாக அதை நேசித்து அத்துடன் மனது ஒன்றியிருக்கும். அந்த பொம்மைக்கு சோறு ஊட்டும். புதுப்புது உடைகளைப் போட்டுவிடும். அதனுடன் பேசும். அந்த பொம்மையும் தன்னுடன் பேசுவதாகக் கூட சொல்லும்.
நம்மைப் பொருத்தவரை அது ஒரு குழந்தைத்தனம், அவ்வளவுதான். ஆனால், அந்தக் குழந்தைத்தனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையும், அது உணர்த்தும் செய்திகளும் என்னவென்பதை நாம் புரிந்துகொள்வதில்லை.
திருமணமான புதிதில் மணிக்கணக்கில் ஒருவர் கண்களை ஒருவர் ஊடுருவிப் பார்க்கும் கணவன் மனைவி போகப்போக சண்டையிட்டுக்கொண்டு சந்தோஷமாக முகம் கொடுத்து பேசாமல் இருப்பதும் கூட நடக்கிறது. ஆனால், குழந்தையானது சாதாரண பொம்மையாக இருந்தாலும், அதனுடன் முழுமையான ஒரு சினேகிதத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. அதன்மீது பிரியத்தைக் காட்டுகிறது. எந்த சூழ்நிலையிலும் அந்த பொம்மை தன்னை நேசிக்கவில்லை என்றோ, தன்னுடைய பிரியத்தை அது புரிந்துகொள்ளவில்லை என்றோ, அதனால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றோ நினைப்பதே இல்லை!
தன் அன்பை முழுமையாக பொம்மைக்குச் செலுத்துகிறது. அதே போன்று அந்த பொம்மையிடமிருந்து அதே அன்பைப் பெற்றுக்கொள்வதாகவே உணர்கிறது.
குழந்தைகள் அன்பை சொறிவதில் சலிப்படைவதே இல்லை, சோர்வடைவதே இல்லை. காரணம், அவர்கள் எதிர்ப்பின்றி நேசிக்கும் கலையில் தேர்ந்தவர்களாக உள்ளனர். தாம் நேசிப்பவை தம்மை நேசிக்கிறதா என்று அவை சந்தேகப்படுவதில்லை. தாமும் மற்றவைகளால் நேசிக்கப்படுவதாகவே குழந்தைகள் நம்புகின்றன. நாம் தான் இந்தக் கலையை வளர்ந்த பிறகு மறந்துவிட்டோம்.
குழந்தைகளைக் கொஞ்சும்போது தாய் ‘என்னைப்பெத்தவனே, என்னைப்பெத்தவனே’ என்று கொஞ்சுகிறாள். அந்தத் தயைப்பார்த்து, ‘அம்மா! நீ தானே அந்தக் குழந்தையைப் பெற்றாய். ஆனால், அந்தக் குழந்தையை என்னைப் ‘பெத்தவனே, பெத்தவனே’ என்று கொஞ்சுகிறாயே! நீ பெற்றாயா அல்லது அந்தக் குழந்தை உன்னைப் பெற்றதா?’ என்று கேட்டேன்.
அந்த அம்மா, ‘இந்தக் குழந்தை பிறக்கும்வரை என் கணவர் வெறும் ஆண்தான். நானோ வெறும் பெண்தான்.அந்தக் குழந்தை பிறந்த பிறகுதான், அவர் தந்தை, நான் தாய் என்றாகிறேன். ஆம்! அந்த குழந்தை தான் ஒரு தந்தையையும், தாயையும் பெற்றெடுக்கிறது. அதனாலேயே, குழந்தையைத் தருகிற நாங்கள் பெறுகிறவர்கள் ஆகிறோம். ‘பெற்றோர்’ என தமிழில் வழங்குவதும் அதற்காகவே’ என்றார்.
‘பிரசவம்’ என்பது தமிழில் ‘பேறு’ என்றழைக்கப்படுவதும். அக்காலம் ‘பேறு காலம்’ என்று வழங்கப்படுவதும் ஏனென்று இப்போது புரிந்திருக்குமே!
www.nidur.info