Showing posts with label சக்தி. Show all posts
Showing posts with label சக்தி. Show all posts

Monday, August 13, 2012

கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா! ஒரு கருத்தோட்டம் (வீடியோ இணைப்புடன்)

எனது கற்பனை,  என்னைப் பொறுத்தவரை,  ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு! 

 நுண்ணுணர்வின் மாபெரும் சக்தி

நீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா! ஒடுக்கமா! ஒதுக்கமா! ஏமாற்றமா ! எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு இது ஒரு மின்சார தொடர்பு . மின்னலாக வந்து மறையும். மன ஓட்டத்தில் புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை செயல்படுத்துதல் நிலை வர இது தோன்றலாம்

Tuesday, February 21, 2012

அறிவைப் பகிர்ந்து கொள்வதும் திருட்டாகி விடுமோ!

அறிவே சக்தி. அறிவைப் பகிர்ந்து கொள்வது மகத்தான சக்தி.
டேவிட் நெல்சன்

'பொருளைத் திருடலாம் அறிவைத் திருட முடியுமோ!  அதனால் அறிவை வளர்த்துக் கொள்' என்று சொல்வதனைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அறிவும் எழுத்து வடிவில் வந்து விட்டால் திருட்டுப் போய்விடுகின்றது   என்பதால் 'காப்பிரெய்ட்'  செய்யும் காலம் வந்து விட்டது. வியாபாரம் 'உலகமயம்' என்ற  மாயம் வந்த காலத்தில் வாழும் நிலை. 
 அறிவு இறைவன் கொடுத்த அருள்களில் ஒன்று. அதனை ஒருவர் சொன்ன கருத்தையோ அல்லது எழுதியவைகளையோ   தான் சொன்னதாக அல்லது தான் எழுதியதாக சொல்வது தவறு.அதனையே நாம் அவர்கள் சொன்னவைகளை அல்லது எழுதியவைகளை அவர்கள் பெயரிலேயே பயன் படுத்துவது தவறாக அல்லது திருட்டாக எண்ணக் கூடாது, அவர் அதனை செய்யக் கூடாது என்று தடை விதித்து சொன்னால் தவிர. இருப்பினும் அறிவு அவரை விட்டு உலகத்திற்கு வந்த பிறகு அவ்விதம் தடை போடுவது சிறப்பாக இருக்காது .அறிவு அனைவரிடமும் சென்றடைய வேண்டும். திருவள்ளுவர் கம்பர் , சித்தர் பாடல்கள் இன்னும் பல தமிழ் காவியங்கள் எழுதியவராலும்  அல்லது அதனை உலகத்திற்கு கண்டு பிடித்து தந்தவர்களும் அவர்கள் அவைகளை இவ்விதம்  தடைவிதித்து இருந்தால் எப்படி நிலைமை இருக்கும் என்பதனை சிந்தித்துப் பாருங்கள். இன்று எல்லாமே தொழில் மயமாக மாறிவிட்டதால் சிந்தனையின் வெளிப்பாட்டின் வழியே வந்த எழுத்துகளும் வியாபாரமாக மாறிவிட்டது . முடிந்தவரை இவைகள் 'காப்பிரெய்ட்' இல்லாமல் இருப்பது சிறப்பாகும்.

"உங்களின் உயர்ந்தவர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைத்தவர்"
விஞ்ஞான வளர்ச்சியின் முடிவு, மனித குலத்தின் அழிவு !
தமிழ்கிறுக்கன்.

 நான் இங்கே எழுதிய கட்டுரை எனது ஆசிரியர்கள் கற்றுத் தந்த அறிவினால் வந்த திருட்டோ! இரண்டு மேற்கோள்களும் இதில் வந்துள்ள படங்களும் அதனைச் சார்ந்தவையோ! இறைவா அப்படியானால் மன்னிப்பாயாக!.

Please click here to read :No Copyright in Islam  

----------------------------------------------------------------------------------

Friday, January 21, 2011

மனம் மகிழுங்கள் - 32 : குறையெல்லாம் குறையல்ல

மனம் மகிழுங்கள்!
32 - குறையெல்லாம் குறையல்ல
- நூருத்தீன்
கி.மு. நான்காம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் டெமாஸ்தெனஸ் (Demosthenes) என்றொரு அரசியல்வாதி இருந்தார். அலெக்ஸாண்டரின் ஆளுமைக்கு எதிராகப் புரட்சியெல்லாம் முயன்று பார்த்தவர். இவரிடம் திறமை ஒன்று இருந்தது - ஆளை அசத்தும் பேச்சு.

சரி, அதற்கு என்ன இப்போ?

அவர் சிறுவனாய் இருந்தபோது அவரிடம் ஒரு குறை இருந்தது. திக்கித் திக்கித்தான் பேசுவார். வாக்கியங்களைத் தடையின்றி முழுமையாய்ப் பேச அவரால் முடியாது. அந்தக் காலத்தில் எந்த ENT ஸ்பெஷலிஸ்ட்டைப் போய்ப் பார்ப்பது? எனவே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வாயில் சிறு, சிறு கூழாங்கற்களை அடைத்துக் கொண்டு கிரேக்க மொழியில் ‘அணில், ஆடு, இலை’ என்று பேசிப் பழக ஆரம்பித்தார் டெமாஸ்தெனஸ். அசரவில்லை; சோர்ந்து போகவில்லை; தினந்தோறும் கடுமையான பயிற்சி. சாப்பிடும்போது மட்டும் கல் நீக்கிச் சோறு சாப்பிடுவாரோ என்னவோ, விடாத பயிற்சி. முடிவு? வாய்மேல் பலன் கிடைத்தது. இவர் ஒரு மிகச் சிறந்த சொற்பொழிவாளராக, பேச்சாளராக மாறிப்போனார். இன்றும் வரலாற்றுப் புத்தகங்களில் அந்தச் சிறப்புத் தகுதியுடனேயே குறித்து வைக்கப்பட்டுள்ளார்.

நம் எல்லோரிடமும் குறையுண்டு. அது உடல் குறையாக இருக்கலாம். மனதில் இருக்கலாம்; செயலில் இருக்கலாம்; சிந்தனையில் இருக்கலாம். ஏதோ ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்டு என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அந்தக் குறை நம் இலட்சியத்தை, குறிக்கோளை, மன மகிழ்வை எவ்விதத்திலும் தடுத்துவிடக் கூடாது; அப்படித் தடுப்பதுதான் உண்மையான குறை.

இறைச் சக்திக்கு அப்பாற்பட்டு, நம்முடைய இலக்கை நாம் அடைந்துவிடாமல் தடுக்கக்கூடிய ஒன்று இருக்குமெனில் அது ‘என்னால் முடியாது’ என்ற நம் எண்ணம் மட்டுமே! அதனால்தான் ‘என்னால் முடியும் தம்பி’ என்று நம்பிக்கையுடன் செயலாற்றுபவர்களெல்லாம் சாதிக்கிறார்கள். ‘என்னத்த செஞ்சு, என்னத்த சாதிச்சு’ என்று அலுத்துக் கொள்பவர்கள் மட்டும் ‘என்னத்த கண்ணய்யா’ ஆகிவிட வேண்டியதுதான்.

‘நான் தேர்வில் ஃபெயிலாகவே போகிறேன், நம்பிக்கையே இல்லை’ என்று ஒரு மாணவன் நினைத்தால் அவனது மனது அவனை வெற்றிக்குத் தயாராக்கப் போவதில்லை. பசை தடவி ஒட்டிய போஸ்டராக அவனது மனமெங்கும் அவநம்பிக்கை மட்டுமே பரவி ஒட்டிக்கொள்ளும். படிக்க, கற்றுக்கொள்ள என்று எந்த முயற்சியும் எடுக்கவிடாமல் அவனைச் சோர்ந்து போகச் செய்து, அவனது தீர்க்கதரிசனம் மெய்ப்படச் செய்யும்.

‘எனக்குத்தான் அப்பவே தெரியுமே’ என்று மதிப்பெண் பட்டியலைப் பார்த்து மனம் கெக்கலிக்கும்.

அதே மற்றொருவர், ‘எனக்கு என் இலட்சியம் முக்கியம். நிச்சயம் அதில் எனக்கு வெற்றி கிடைக்கும்’ என்று திடமாக நம்பிவிட்டால் அதற்காக அவரை அவரது மனது தயாராக்கிவிடும். ‘என்ன செய்யவேண்டுமானாலும் சரியே. நீண்ட நேரம் உழைக்கணுமா, கண் விழிக்கணுமா, எல்லாத்துக்கும் தயார்’ என்று கைமுறுக்கி, தொடை தட்டி நிற்பார்; சாதிப்பார்!

இவை இரண்டிலும் அதற்குரிய பலாபலன் ஒன்று உண்டு. என்ன அது?

‘நான் அம்பேல்’ என்று நினைப்பவருக்குத் தற்காலிக சுகமும் சௌகரியமும் ஏற்பட்டுவிடுகிறது. எவ்விதப் பொறுப்பையும் அவர் சுமக்கத் தேவையில்லை; ‘என்னால் முடியல இதைக் கொஞ்சம் செய்து கொடேன்’ என்று பிறரிடம் உதவி பெற்றுக்கொள்ள முடிகிறது; வெற்றிக்குத் தேவையான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, முறைப்படுத்தப்பட்ட செயல்கள் என்று எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இஷ்டத்திற்குத் திரிய முடிகிறது. சில சமயம் ‘ஐயோ பாவம்’ என்று பிறரிடம் அனுதாபமும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

இரண்டாமவர் இறுதியில் வெற்றியடைந்திருந்தாலும் அதற்காக அவர் செலவிட்டதும் தாங்கியதும் நிறைய. உழைப்பு, நேரம், பொறுப்புச் சுமை, சங்கடங்கள், தடங்கல்கள் இத்தியாதி.

ஆனால் முடிவில் யார் அதிக மன மகிழ்வுடன் இருப்பார்? அது ஊரறிந்த ரகசியம்.

நமக்கு எந்தக் குறையிருந்தாலும பிரச்சனையில்லை. ஆனால் நமக்கு நாமே எழுதிக் கழுத்தில் மாட்டிக்கொள்கிறோமே ‘நம்மாலாகாத் தன்மை’ என்ற அடையாள அட்டை – அதுதான் குறை! உண்மையிலேயே பெருங்குறை! அதன் விளைவு நம்மையே சாரும். நம் கழுத்தில் நாம் மாட்டிக்கொள்ளும் அந்த விலங்கைக் கழட்டித் தூரக் கடாசிவிட்டால் போதும். மகிழ்வான வாழ்விற்கு அதுவே நாம் செய்யும் மிகப் பெரும் உபகாரம். அதன்பிறகு நம்முடைய ஊனமோ, பலவீனமோ, எந்தக் குறையும் பெரிதாகத் தெரியாது.

இதற்கு வரலாறு நிறைய உதாரணங்களை நம் மேசையின்மேல் தூக்கி எறிகிறது. அதிலொன்றுதான் நாம் மேலே பார்த்த டெமாஸ்தெனஸ். கி.மு. நான்காம் நூற்றாண்டாவது ரொம்ப தூரம். சற்று நெருக்கத்தில் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு வருவோம்.

அமெரிக்காவில் ஒரு மனிதர் இருந்தார். ஏதாவது வியாபாரம் செய்து பிழைப்போம் என்று தம்முடைய 22ஆவது வயதில் தொழிலொன்றைத் தொடங்கினார் அவர். தோல்வியில் முடிந்தது.

வியாபாரம் சரிவரவில்லை, போகட்டும். சட்டமன்றத்திற்குப் போய் நாட்டிற்காவது உதவலாம் என்று தேர்தலில் போட்டியிட்டார்; அதிலும் தோல்வி. அது அவருடைய 23ஆவது வயது.

வயிறு பசித்தது. மீண்டும் தொழில் செய்துபார்ப்போம் என்று வியாபாரம் ஆரம்பித்தார். ம்ஹும்! மீண்டும் போண்டி. வயது 25.

அதற்கு அடுத்த ஆண்டு மனைவி இறந்து போனார். 27ஆவது வயதில் அவருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டது. மீண்டும் அரசியலுக்குப் போவது என்று முடிவெடுத்து மூன்று முறை முயன்று மூன்று முறையும் தோற்றார். அதெல்லாம் 34, 37, 39 வயதுகளில்.

46ஆவது வயதில் மீண்டும் தோல்வி. 47 ஆவது வயதில் துணை ஜனாதிபதியாகலாம் என்று முயற்சி செய்தால் அதுவும் தோல்வி. 49ஆவது வயதில் மற்றொரு தோல்வி.

படிக்கும் நமக்கே மூச்சு வாங்கலாம். மனிதர் அசருவதாய் இல்லை. இறுதியில் அவரது 52ஆவது வயதில், “கூப்பிட்டாயா?” என்று வெற்றி எட்டிப் பார்க்க அமெரிக்க ஜனாதிபதியானார் அவர். அதன்பிறகு வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்து தலைநகர் வாஷிங்டனில் பெரிய சிலையாக அமர்ந்து கொண்டார்.

ஆம்! அவர் ஆபிரஹாம் லிங்கன்!

மனதின் இலக்கை எட்ட நமது குறைகள் தடையே அல்ல.

தடையெல்லாம் “என்னால் முடியாது” எனும் எண்ணம் மட்டுமே. அதுதான் குறை.

அதை நீக்குங்கள். மனம் மகிழ்வை உணரும்.

னம் மகிழ, தொடருவோம்...

Friday, December 17, 2010

மனம் மகிழுங்கள்! - 27 : மனதில் உறுதி வேண்டும்

மனம் மகிழுங்கள்!
27 - மனதில் உறுதி வேண்டும்
- நூருத்தீன்
னதில் உள்ளதை வாய்விட்டுச் சொன்னால் தானே நமக்குத் தெரியும்; ஏதாவது உதவலாம்.”

ஏதோ ஒரு கவலை; அதை மனதிலேயே வைத்துக் கொண்டு வெளியில் கொட்டாமல் உம்மனா மூஞ்சியாய் இருக்கும் ஒருவனைப் பார்த்து அவனது நண்பர்கள் இப்படி உரைப்பதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்களே சொல்லியிருக்கலாம்; அல்லது உங்களுக்கே நடந்திருக்கலாம். என்ன செய்ய? அனைத்தையும் மனதில் போட்டுப் பூட்ட முடியாது. சில சமயம் மனதிலுள்ள சிந்தனைகளை வாய்விட்டுச் சொல்ல வேண்டியதும் அவசியமாகிறது.

மனதில் ஆக்கபூர்வமான – பாஸிட்டிவ் – எண்ணங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னர் பார்த்தோமல்லவா? அதை வலுவாக்கி உரமேற்றிக் கொள்ள உறுதிமொழி தேவைப்படுகிறது? என்ன உறுதிமொழி? ஒருவிதமான மன உறுதிமொழி. எதற்காக இது?

இந்த மன உறுதிமொழிதான் தரமான சிந்தனைகளை நாம் சிந்திக்கவும் அத்தகு சிந்தனைகளை ஆழ்மனதில் நிலைநாட்டவும் உதவுகிறது; நம்மை நாமே சிறப்பாய் உணர வைக்கிறது; சிறப்பாய்ச் செயல்பட வழிவகுக்கிறது. குழப்புகிறதோ? ஒன்றும் பிரச்சனை இல்லை. சற்றுப் பிரித்துப் போட்டுப் பார்ப்போம்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்; கடும் தலைவலி. “சீக்கிரம் வந்து தொலையாதா?” என்று நீங்கள் பேருந்திற்குக் காத்து நிற்க, தாமதமாய் வந்து சேரும் அதுவோ மக்களை அள்ளி அடைத்துக் கொண்டு வந்து நிற்கிறது. அந்நெரிசலில் முட்டிமோதி ஏறிப் பெரும் அவதியும் எரிச்சலும் தலைவலியுமாக நீங்கள் நின்று கொண்டிருக்கும் போதே ஒரு வித்தைப் புரியலாம்.

“அம்மாங் கூட்டத்தில் புகுந்து நுழைந்து, ஒற்றைக் காலில் நின்று கொண்டு பயணிப்பதே வித்தைதான். இதில் இன்னொரு வித்தையா?” என்று முறைக்காதீர்கள்.

சென்ற வாரம் வார்த்தைகளின் சக்தியைப் பற்றிப் படித்தோமில்லையா? அதையும் மனதிலுள்ள பாஸிட்டிவ் சிந்தனா சக்தியையும் ஒருங்கே உபயோகியுங்கள். அதுதான் வித்தை.

எப்படி?

“தலை அப்படி ஒன்றும் பெரிதாய் வலிக்கவில்லை; நன்றாகத்தான் இருக்கிறது; இன்னும் சற்று நேரத்தில் வலி போயே போய் விடும்.”

இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள். “என்னடா இது அழிச்சாட்டியம்? அநியாயத்திற்குப் பொய் சொல்கிறாயே!” என்று உங்களது உள்மனம் உள்ளிருந்து உங்களை அதட்டும். அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டு, நீங்கள் பாஸிட்டிவான எண்ணத்தையே சொல்லிச் சொல்லி மனதளவில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாம்.

மெதுவே, மெது மெதுவே, “ஆமாம்! நீ நல்லாத்தான் இருக்கே!” என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் வேர்விட ஆரம்பித்து விடும். வலி குறைந்து போனதை உங்களையறியாமல் நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். சற்று நேரத்தில், முழுவதுமோ அல்லது பெருமளவிலோ, அந்த வலியானது மறைந்து அல்லது குறைந்து போயிருக்கும்.

இது ஓர் உதாரணம் மட்டுமே. அதற்காகக் கையில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டால் இதை முயலக் கூடாது. டாக்டரிடம் ஓடுவதே நல்லது. அவர் அளிக்கும் பில் உங்களது வலியை மறக்கச் செய்துவிடும்!

மேற்சொன்ன உதாரணத்தைப் போல் அந்த வித்தையைப் பலவிதங்களில் நீங்கள் பிரயோகிக்கலாம் –

“உற்றார் உறவினருக்கெல்லாம் என்மேல் மட்டற்ற அன்பும் பாசமும் உண்டு; நானும் அவர்களிடம் அன்பும் பாசமுமாய் உறவாடப் போகிறேன்.”

“அட்டகாசம்! நாளுக்குநாள் என் மன மகிழ்வு அதிகரித்து வருகிறது.”

“நான் மிகவும் ஆரோக்கியமாய் இருக்கிறேன்.”

“இன்று மேட்சில் நிச்சயம் நான் செஞ்சுரி.”

“மேனேஜர் என்ன கொம்பனா? அஞ்சாமல் அசராமல் பதில் பேசப் போகிறேன்.”

“இன்று தைரியமாய் மனைவியிடம் கைச்செலவிற்குப் பணம் கேட்கப் போகிறேன்.”

பாஸிட்டிவ் எண்ணங்கள் என்பதை வார்த்தை வடிவமாக்கி இவ்விதம் மனதால் உறுதிபடக் கூறச் சொல்கிறார்கள் உளவியலாளர்கள் . இப்படியெல்லாம் மன உறுதியிட்டுவிட்டுத் தொலைக்காட்சியில் நியூஸ் பார்க்க உட்கார்ந்து விடக்கூடாது. அது சரி வராது. அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். எதற்கான முயற்சி?

மன உறுதிமொழி என்பது நீங்கள் அடையவேண்டிய விஷயத்திற்கு உங்கள் மனதைத் தயார்படுத்தும் வழியாகும். இத்தகு மன உறுதிமொழியை ஒரு தினசரிப் பழக்கமாக நீங்கள் உருவாக்கிக் கொண்டால் அது எத்தகைய எளிய உபகரணம் என்பதையும் அதன் வலிமையும் உணர்ந்து அசந்து போவீர்கள்.

“இதென்ன? சின்னப் பிள்ளைத்தனமால்லே இருக்கு? இதையெல்லாம் நான் பின்பற்றப் போவதில்லை,” என்று நீங்கள் நினைத்தால் தேவையற்ற தலைவலி உங்கள் தலையைப் படுத்திக் கொண்டுதான் இருக்கும். உங்களது மனவலிமையின் முழு வீரியம் வெளிப்படாமல், நட்டம் உங்களது!

மன உறுதிமொழியைப் பிரயோகிப்பதற்குச் சில தந்திரங்கள் சொல்லித் தருகிறார்கள் உளவியலாளர்கள். அதையும் பார்த்து விடுவோம்.

மனமானது எப்படி நாம் நினைப்பதை நோக்கியே நகரும் தன்மையுடையது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். நினைவிருக்கிறதா?

“நான் இனி என் கணவன் கேட்காமலேயே கைச்செலவுக்குப் பணம் கொடுப்பேன்; நான் இனி அவரிடம் வாக்குவாதம் செய்யப் போவதில்லை.”

“எனக்கு ஞாபக மறதி இல்லை.”

என்றெல்லாம் உங்களது மனம் உறுதி எடுத்துக் கொண்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? பதில் உங்களுக்கே தெரிந்திருக்குமே? ஆம், அதேதான். “வேண்டாம்”, “இல்லை” என்பதை நோக்கி உங்கள் மனமானது வங்காள விரிகுடாவில் உண்டான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் போல் நகரத் தொடங்கியிருக்கும்.

அந்தக் காலத்தில் மாணவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரு தண்டனை கொடுப்பார்கள் – imposition.

“நான் இனி பள்ளிக்குத் தாமதமாய் வரமாட்டேன்.”

“நான் இனி வகுப்பறையில் பேச மாட்டேன்.”

என்று நூறு முறை, இருநூறு முறை எழுதச் சொல்வார்கள்.

கைகடுக்க எழுதி எடுத்துவரும் மாணவன் என்ன செய்வான்?

க்ளைமேக்ஸில் திருந்தும் வில்லனைப் போல் திருந்தி விடுவானா?

அப்படிச் சுமுகமாய் வாழ்க்கை நகர்வதில்லை. அதே தவறை அதே மாணவன் மீண்டும் செய்வான். இங்கு பிரச்சனை தண்டனையில்லை; அந்த வாக்கியங்கள். தவறிலிருந்து அவனை விலக்குவதற்குப் பதிலாய் அவன் மீண்டும் மீண்டும் அந்தத் தவறை மேற்கொள்ளவே மேற்சொன்ன imposition வாக்கியங்கள் உதவியிருக்கும்.

எனவே,

நாம் என்ன செய்யப் போகிறோம், என்ன விழைகிறோம் என்பதைத்தான் நேரான முறையில் மன உறுதியாகக் கொள்ள வேண்டும். இது முதலாவது.

இரண்டாவது, இத்தகைய மன உறுதிப்பாட்டை வாய் விட்டுச் சொல்லியோ எழுதியோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளதைப் போல் வாய்விட்டுச் சொன்னால்தான் நமது மனமே நமக்கு உதவும். மனதளவில் வெறுமே ஒரு உறுதிப்பாட்டை நீங்கள் நினைத்தால் அதை நினைத்து முடிப்பதற்கு முன்னதாகவே, “அந்தப் புடவை டிஸைன் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியிருப்பார்கள்?”, “இன்று டின்னருக்கு சோளா பூரி சரிவருமா?” என்று மனமானது தாவி ஓடிவிடும்.

ஆனால் அதையே வாய்விட்டுச் சொல்லும் போதோ, எழுதி வைத்துக்கொள்ளும் போதோ உங்கள் புலனுணர்வுகள் இதில் ஈடுபடுகின்றன. எனவே உங்கள் மனவுறுதிப் பிரமாணம் பெரும் உறுதி பெறுகிறது.

மூன்றாவதாக மனதில் நிறுத்த வேண்டியது – கிளிப் பிள்ளை போல் மீண்டும் மீண்டும் இந்த மன உறுதிப்பாட்டைக் கூறிக் கொண்டிருக்க வேண்டும். நாம் பிறக்கும் போது நம்முடன் பிறந்தது, தொன்று தொட்டு தொடர்வது என்று நம் உள்ளும் புறமும் கலந்துவிட்ட விஷயங்களை அவ்வளவு எளிதில் நீக்குவது முடியாது. அதிலிருந்து மீள பிடிவாதமும் விடாமுயற்சியும் தேவை.

ஆக,

நல்லதை நினைப்போம்; நினைத்ததைச் சொல்வோம்; சொன்னதைச் செய்வோம்.



னம் மகிழ, தொடருவோம்...