Tuesday, December 13, 2011

திருமணம் செய்ய மணப்பெண் தேடும் படலம் !

 பணம் ,சீர் கொடுத்தால்தான் பெண் எடுப்பேன்  என்ற  ஒரு காலம் இருந்தது  இப்பொழுது நிலைமை மாறி பெண் கிடைத்தால் போதும் என்று அலைகின்றார்கள்.  ஆடம்பரமாக திருமணம் செய்வது   எனக்குப் பிடிக்காது.  விரைவில் திருமணம் செய்தாக வேண்டும்  என்றும், எவ்வளவு காலம்தான் எப்படித்தான் பொறுமையாக இருப்பது என்று ஆண்கள் சொல்லும் காலம் வந்து விட்டது. பெண் தேடும் கல்யாண புரோக்கர்களுக்கு மதிப்பு வந்து விட்டது. திருமணத்துக்குப் பெண் பார்ப்பது இன்டர்நெட்  வரை  இதன் தொடர்பு வந்து விட்டது, பெண் கேட்க சென்றாலே 'பெண் படித்துக் கொண்டிருக்கிறாள் அதனால் இப்பொழுது திருமணம் செய்ய நாட்டமில்லை' என்ற பதில்தான்.

திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி)
   அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)
   முன்பெல்லாம் பெண் பருவத்திற்கு வந்த உடனேயே திருமணம் செய்ய முயல்வர். பதினெட்டு வயதிற்குள் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விடும். இப்பொழுது வயதை பற்றி கவலை கிடையாது. பெண் படித்தாக வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பெண்ணின் பெற்றோர் திருமண மாப்பிளை முடிவு செய்வதற்கு பெண்ணின் ஒப்புதலை முதலிலேயே கேட்டு தெரிந்துக் கொள்கின்றனர்.

 நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த இறைத்தூதர் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள். -
நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்


  உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கு திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32)
  ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் போன்ற நபித்தோழர்கள், புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா

 நபி(ஸல்) அவர்களின் செய்தியில் நபி(ஸல்) அவர்களாகவே முந்திக் ‘பெண்ணைப் பார்த்துக் கொள்ளும்’ என்கிறார்கள். பிரிதொரு நபித்தோழர் விஷயத்திலும் இதையே வலியுறுத்தி யுள்ளார்கள்.ஒரு நபித்தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஒரு மதீனத்து பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! எனக் கூறினார்கள். அபூஹூரைரா (ரலி) முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்

  பெண் பார்க்கச் செல்லும் முன் பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து பார்ப்பது வழக்கம். காலம் மாறி மாப்பிள்ளை படிப்பு குடும்பம் பற்றி விசாரிப்பு அதிகமாகி விட்டது. ஆணை விட பெண் படிப்பு அதிகமாகி விட்ட காலம். பெண் வீட்டார் வரதட்சணை தர விரும்பாத நிலை. படிக்காத குடுப்பத் தலைவன் வெளிநாடு சென்று படிக்காததால் தான் படும் சிரமம் தன பிள்ளைகளுக்கு வரக் கூடாதென்று தனது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வழி செய்து விட்டமையால் அவரது குடும்பத்தில் அனைவரும் படித்தவர்களாக மாறிவிட்டனர். பணம், வரதட்சணை முதலியவைகள் பேசுவதென்றால் பெண் கொடுப்பதனை தவிர்த்து விடுகின்றனர்.

சிலர் படித்த பெண்கள் நமக்கு சரிவராது என்று நினைப்பதுமுண்டு. நமக்கு கிடைத்தது புரட்சியல்ல. நாம் அடைந்திருப்பது மறுமலர்ச்சி. மறுமலர்ச்சியில் ஒரு சில தவறுகள் நடக்கலாம். அதற்காக அனைத்துமே தவறு என்ற முடிவுக்கு வரக்கூடாது. வீட்டில் அடைபட்டிருந்த பெண்கள்  வெளியில் வந்து படிக்க ஆரம்பித்த அருமையான மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது . படிக்கச் சென்ற ஒரு பெண் செய்த தவறினால் ஒட்டு மொத்த பெண்களுமே தவறு  செய்து விடுவார்கள் என்பது   எவ்வளவு பெரிய மடத்தனம்.

  பெண் பார்க்க கூட்டமாக படை சூழப் போவது  தற்போது கிடையாது. திருமணத்தினை முடிவு செய்த பின்பே அதனை தெரிந்தவர்களுக்கு சொல்கின்றார்கள்.

மாப்பிளை வீட்டார் திருமண செலவுகளை பெண் வீட்டார் தலையில் கட்ட நினைப்பது முடியாது . இப்பொழுது மணமகன் எத்தனை பவுனில் நகை போடுவார் என்ற கேள்வியும் தொடர்கின்றது. முன்பெல்லாம் மாப்பிள்ளை படித்த படிப்பின் பட்டங்களை திருமண பத்திரிக்கையில் ஆடம்பரமாக போடுவார்கள் இப்பொழுது பெண் அதிகம் படித்து விடுவதால் அது கிடையாது .


  மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்.(அல்குர்ஆன் 4:20)


 தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ
கல்வியை கண்ணாக்கி காட்டிய இஸ்லாத்தில்
கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!

பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,

1 comment:

sultangulam@blogspot.com said...

அல்ஹம்துலில்லாஹ் நல்ல முன்னேற்றம்தான். ஆனாலும் ஒன்றிரண்டு தறி கெட்டு போவதால் ஒரு பயம் மனதைக் கவ்விக் கொள்கிறது.
யா அல்லாஹ்! எங்கள் சமூகத்தை நேர் வழியிலேயே நிலைத்திருக்கச் செய்வாயாக!