Tuesday, December 6, 2011

இணையமும், எழுத்தாளர்களும்!

உயிர்மை : பிரபல தமிழ் எழுத்தாளர்கள் இணைய தளங்களில் எழுத வரும்போது அவர்கள் தங்கள் புதிய வாசகப் பரப்பை எதிர்கொள்ளும் விதம் குறித்து என்ன கருகிறீர்கள்?

யுவகிருஷ்ணா : 
எழுத்தாளர் சுஜாதா ‘அம்பலம்’ இணையத் தளத்தில், வாசகர்களோடு ‘சாட்டிங்’ மூலம் உரையாடத் தொடங்கியதை ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாக கருதலாம். பொதுவாக வெகுஜன வாசகர்களிடம் சுஜாதாவுக்கு ஒரு இமேஜ் உண்டு. வாசகர்களிடம் அவர் சகஜமாகப் பழக மாட்டார், மனம் விட்டு பேசமாட்டார் என்பார்கள். ‘ஒரு நல்ல வாசகன், எழுத்தாளனை சந்திக்க விரும்பமாட்டார்’ என்பது சுஜாதாவின் பிரபலமான சொல்லாடலும் கூட.

சுஜாதா சினிமாவிலும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த காலம். அவ்வளவு நேர நெருக்கடியான காலக்கட்டத்திலும், வாரந்தோறும் சனிக்கிழமை மிகச்சரியாக பத்து மணிக்கு ‘அம்பலம் சாட்டிங்’குக்கு வந்துவிடுவார். நம்மோடு உரையாடுவது சுஜாதாதானா என்றுகூட பல வாசகர்களும் நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவ்வளவு இயல்பான உரையாடல்கள் அவை. தேவன் வானுலகில் இருந்து கீழிறங்கி வந்து, மனிதர்களோடு தோளோடு தோள் உரசி பழகுவது மாதிரியான உன்னத உணர்வினை சுஜாதாவின் வாசகர்களுக்கு அம்பலம் வழங்கியது.தொடக்கத்தில் தன்னை வாசித்தவர்களை, ஆராதித்தவர்களையே எதிர்கொண்டதால் சுஜாதாவுக்கும் இந்த உரையாடல் சுளுவாகவே இருந்தது. ஆண்டாள் முதல் ஐசக் அசிமோ வரை எதை கேட்டாலும் அட்சயப் பாத்திரமாக அள்ள, அள்ள பேசிக்கொண்டிருந்தார். வாசிப்புப் பழக்கத்தை முதன்முறையாக இணையத்தில் தொடங்கியவர்களும், பெரிய எழுத்தாளரோடு பேசுகிறோம் என்கிற உணர்வில் கலந்துக்கொள்ளத் தொடங்கினார்கள். இந்த உரையாடல் அளித்த உற்சாக உணர்வால் சுஜாதாவை தேடித்தேடி வாசித்தார்கள்.


ஆயினும் இணையம் வெறும் இலக்கிய/வெகுஜன வாசகர்கள் நிரம்பியது மட்டுமல்ல. இணையத்தில் பங்குபெறுபவர்களில் கணிசமானோர் அரசியல் சிந்தனை கொண்டவர்களாகவும் அல்லது அவ்வாறு இருப்பதாகவும் நம்பிக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் நிறைய பேர் தமிழ்த்தேசிய சிந்தனை கொண்டவர்களும் கூட. இது போதாதா? சுஜாதாவின் அம்பலம் உரையாடல்களுக்குள் இவர்கள் நுழைந்தபோது வெடித்தது கலகம். ‘சுஜாதாவின் அரசியல் நிலைப்பாடு என்ன?’ என்று கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஜாலியாக இவர்களை கையாண்டுக் கொண்டிருந்த சுஜாதா, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துப் போனார். ‘நான் அரசியல்வாதி கிடையாது. அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நான் ஏன் விடையளிக்க வேண்டும்?’ என்கிற தொனியில் எரிச்சலும் அடைந்தார்.


அம்பலம் உரையாடல்களில் சுஜாதாவுக்கு ஆரம்பத்தில் கிடைத்த மகிழ்ச்சியும், பிற்பாடு அது எரிச்சலாக மாறிய அனுபவமும், இணையத்தில் எழுதவரும் எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஏற்படுவதுதான். ஒரு பானை சோற்றுக்கு ஒரே ஒரு சுஜாதா பதம். சமீபத்தில் இங்கே வந்த விமலாதித்த மாமல்லன்வரை இப்போக்குக்கு ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம். இதற்காக இணையத்தில் இயங்குபவர்களை எரிச்சலோடு எழுத்தாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதாக, ஒட்டுமொத்தமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.


இங்கே உருவாகும் புதிய வாசகப் பரப்பு எதையுமே புனிதப்படுத்துவதில்லை. பிரபலங்களுக்கு இங்கே இடமில்லை. தமிழில் நான்கு பத்திகளை தொடர்ச்சியாக வலைப்பதிவிலோ, ஃபேஸ்புக்கிலோ எழுதத் தெரிந்த யாருமே, தன்னை படைப்பாளியாக கருதிக் கொள்ளும் போக்கு தமிழ் இணையத்துக்கு உண்டு. இணையத்தின் இந்த அபத்தத் தன்மையை மிகச்சரியாகப் புரிந்துக்கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். எனவேதான் அவருடைய நீண்டக்கால இணைய அனுபவம் சச்சரவுகளின்றி நேர்க்கோட்டில் பயணிக்கிறது.


இணையத்துக்கு வரும் எழுத்தாளர்கள் தங்களுக்கு வாசகர் வட்டங்களை உருவாக்குவதிலும், ஃபேஸ்புக்கில் ‘லைக்’குகள் வாங்குவதில் செலுத்தும் ஆர்வத்தைக் காட்டிலும், தீவிரமான சில புதிய வாசகர்களை தங்களுக்கு உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இணையத்துக்கு அவர்கள் வந்ததன் நோக்கமும் நிறைவேறும்.

(நன்றி : உயிர்மை நூறாவது இதழ்)

1 comment:

NIZAMUDEEN said...

சுவையான பதிவு.

LinkWithin

Related Posts with Thumbnails