Saturday, October 8, 2011

மாலன்

மாலன்:

இரண்டு வருடங்களுக்கு முன்பாக, புதியதாக தொடங்கப்படவிருக்கும் ஒரு பத்திரிகைக்கு ஆட்கள் தேவையென்று மாலன் தன்னுடைய வலைப்பூவில் கேட்டிருந்தார். விண்ணப்பித்திருந்தேன். தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைத்தார்.

தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் இருந்த அந்த அலுவலகத்துக்கு நேரில் சென்றிருந்தேன். பத்திரிகை உரிமையாளரோடு, மாலன், ரமேஷ்பிரபா இருவரும் நேர்முகம் நடத்தினார்கள். பத்திரிகையில் வேலையை தொடங்கி, பிற்பாடு விளம்பர நிறுவனங்களுக்கு போய்விட்டவன். மீண்டும் பத்திரிகைத்துறையில் பணியாற்ற ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன்.

உரிமையாளர் திடீரென ஒரு கேள்வி கேட்டார். “உங்களுடைய லட்சியம் என்ன?”

லட்சியம் மாதிரியான எந்த சமாச்சாரமும் இல்லாத எனக்கு அக்கேள்வியை எப்படி எதிர்கொள்வதென்று தெரியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் கேள்வி கேட்கப்பட்டால், திணறாமல் உடனடியாக ஏதாவது பதிலை சொல்லியாக வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னேன். “ப்ரியா கல்யாணராமன் ஆகவேண்டும் என்பதுதான் என் லட்சியம்”

ப்ரியா கல்யாணராமனை உரிமையாளருக்கு பரிச்சயமில்லை போல. “புரியலியே?” என்றார்.

எனக்கும் புரியவில்லை. உள்மனசுக்குள் இருந்தது, நான் அறியாமலேயே வார்த்தையாக வெளிப்பட்டுவிட்டது. அந்த லட்சியத்தை எப்படி விளக்கிச் சொல்வது என்பதை புரியாமல் திணறினேன்.

மாலன் எனக்காக சமாளித்தார். “ப்ரியா கல்யாணராமன் குமுதம் பத்திரிகையோட ஆசிரியர். அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆகவேண்டும் என்பது இவரோட லட்சியம்”

அட. இதுவும் நல்லாருக்கே. இப்படியே வைத்துக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டேன்.

உண்மையில் அந்த கேள்விக்கான என்னுடைய விடை, இந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கான நேர்முகத் தேர்வில் irrelevant ஆன விஷயம். நியாயமாகப் பார்க்கப் போனால், அவர்கள் என்னை உடனடியாக தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் திட்டமிட்டிருந்த இதழ், இன்று வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கும் ‘புதிய தலைமுறை’. உள்ளடக்க ரீதியில் குமுதத்துக்கு நேரெதிரானது. ஆனால், என் லட்சியம் (?) அப்படியிருந்தும், என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள்.

இப்படித்தான் புதிய தலைமுறையின் முதல் ஊழியனாக நான் பணிக்குச் சேர்ந்தேன். காரணம் மாலன். தமிழில் சுமாராக எழுதத் தெரிந்தால் போதும். எப்படியும் ‘மோல்ட்’ செய்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இம்மாதிரியான உள்ளடக்கம் கொண்ட பத்திரிகைக்கு ஏற்ப ‘மோல்ட்’ ஆகமுடியுமென்ற நம்பிக்கை எனக்குத்தான் அப்போது இல்லை.

கடந்த முப்பது வருடங்களாக என்னைப்போல நூற்றுக் கணக்கானோரை அவர் ‘மோல்ட்’ செய்திருக்கிறார். இதை தன்னுடைய பணி தொடர்பான கடமை என்று நினைக்காமல், ஒரு இயக்கமாகவே செய்துவருகிறார். ஏனெனில் அவருக்கு இந்த உலகில் மிகவும் பிடித்தமான விஷயம் துறுதுறுவென்றிருக்கும் இளைஞர்கள்.

ஒவ்வொரு இளைஞனும் ஒரு unique என்று நினைப்பார். எனவே ஒவ்வொருவரின் கருத்தும் அவருக்கு முக்கியம். அக்கருத்து அவருக்கு உவப்பானதாகவோ, அறிவுப் பூர்வமானதாகவோ எல்லாம் இருந்தாக வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் ‘கருத்து’ இருந்தாக வேண்டும் என்பது அவருடைய எதிர்ப்பார்ப்பு.

1981ல் சாவி குழுமத்தின் ‘திசைகள்’ பத்திரிகைக்கு ஆசிரியராக மாலன் பொறுப்பேற்றபோது, என்னுடைய இப்போதைய வயதைவிட இரண்டு, மூன்று வயது அவருக்கு குறைவுதான். மிகக்குறைவான இதழ்கள்தான் வெளிவந்தன. வணிகரீதியாகவும் பெரிய வெற்றி கண்டதாக தெரியவில்லை. ஆனாலும் இன்றுவரை தமிழ் பத்திரிகையுலகில் ‘திசைகள்’ ஒரு சாதனை.

பத்திரிகையாளர்கள் என்றாலே வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெற்றிலை குதப்பிய வாய், நரை விழுந்த பழுத்த அனுபவம், பவுண்டன் பேனாவை எழுதத் திறந்தாலே அட்வைஸ் மழை போன்ற பழமையான சம்பிரதாயங்களை தயவு தாட்சணியமின்றி உடைத்தெறிந்தது திசைகள். இளைஞர்கள்தான் இனி தமிழ்ப் பத்திரிகைகளின் எதிர்காலம் என்கிற நிலையை உருவாக்கியது. திசைகளின் ஆசிரியரும் இளைஞர். பணியாற்றிய குழுவினர் மொத்தமும் இளைஞர்கள். இந்த இளையபடை தமிழ் பத்திரிகைகளுக்கான உள்ளடக்கம், வடிவம் என்று எல்லாவற்றையுமே மாற்றிப் போட்டது. திசைகளில் பணியாற்றிய இளைஞர் கூட்டம் பிற்பாடு எல்லாத் திசைகளுக்கும் பயணித்து, அவரவர் தேர்ந்தெடுத்த துறைகளில் திறனளவில் உச்சம் தொட்டார்கள். சுதாங்கன், ரமேஷ்பிரபா, அரஸ், சாருப்ரபா சுந்தர், மணா, ஏ.எஸ்.பன்னீர்செல்வம், மருது, பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குனர் வஸந்த் என்று ஏராளமானவர்கள் திசைகளில் துளிர்த்தவர்கள்.

மாலன் தன்னிடம் பணியாற்றுபவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் அளவில்லாதது. ஒரு கருத்தை அவர் சொல்லியவுடனேயே, அதற்கு எதிர்வினையாக மறுப்பையாவது தன்னுடைய குழுவினரிடமிருந்து எதிர்ப்பார்ப்பார். அவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்த மாட்டார். உரையாடலில் மிகுந்த விருப்பம் கொண்டவர். எந்த ஒரு விவாதத்துக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கும். அவருடைய கோணத்தை தெளிவாக சொல்லிவிட்டு, மற்றவர்களின் கோணம் என்னவென்பதை அறிய அவருக்கு ஆவல் அதிகம். ஒரு கட்டுரை எழுதி, அச்சாகி விட்டால் அதோடு முடிந்தது என்று நினைக்காமல், வாசகர்கள் அக்கட்டுரை குறித்து என்னமாதிரியாக எதிர்வினைகிறார்கள் என்று இன்றளவும் ஆவலோடு வாசகர் கடிதங்களுக்கு காத்திருக்கும் ஆசிரியர் அவர். குறிப்பாக இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவார்.

பத்திரிகையாளன், சமூக ஆர்வலன், இலக்கியவாதியென்று அவருக்கு பலமுகங்கள் இருந்தாலும், அவரது ப்ரியாரிட்டி ‘பத்திரிகை’தான். நீண்டகால பத்திரிகை வாழ்வில் அவர் பெற்ற புகழைவிட பன்மடங்குப் புகழை மிகக்குறுகிய காலத்திலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெற்றிருக்கிறார். ஆனாலும் அச்சுப் பத்திரிகை மீதான அவருடைய மோகம் அளவில்லாதது.

இன்று எங்கள் ஆசிரியர் மாலனுக்கு பிறந்தநாள். நீண்ட நாட்களாக அவருக்கென்று ஒரு பிரத்யேக இணையத்தளத்தை உருவாக்கி வந்தார். இன்றுமுதல் அது பயன்பாட்டுக்கு வருகிறது. இணையத்தள முகவரி : http://maalan.co.in

காலையில் இருந்து ஒரு மணி நேரமாக இந்த இணையத்தளத்தை மேய்ந்ததில் ஒன்று புரிந்தது. தமிழில் எந்த ஒரு ஆளுமையின் இணையத் தளமும் இவ்வளவு விரிவான தரவுகளையும், தகவல்களையும் (அதிரடி எளிமை வடிவத்தில்) கொண்டதில்லை. இவ்வகையிலும் கூட மாலன் ஒரு முன்னோடிதான்.

Source : http://www.luckylookonline.com/2011/10/blog-post_08.html