Tuesday, October 18, 2011

புதிய தலைமுறையில் நான் - by நாகூர் ரூமி

புதிய தலைமுறையில் நான்

நான் பழைய தலைமுறையைச் சேர்ந்தவனாகிவிட்டாலும் புதிய தலைமுறையோடு எனக்கொரு நட்பு ஏற்பட்டுவிட்டது என்னவோ உண்மைதான். ஆமாம். பா.ராகவனின் எழுத்தில் அல்லது தலைமையில் வாராவாரம் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி சானலில் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. (விரைவில் என்.டி.டிவி போன்ற தகுதி வாய்ந்த செய்தி ஒளிபரப்பு மீடியாவாக வருமென்று நம்ப வைக்கும் அளவுக்கு நன்றாகவே இருக்கிறது புதிய தலைமுறை).

சென்ற செவ்வாயன்று கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறுக்காக இயக்குனர் / தயாரிப்பாளர் விக்ரம், ஆங்கர் ஹரி ஆகியோருடன் புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒரு குழு ஆம்பூருக்கு வருகை புரிந்தது. ஆம்பூர் பிரியாணி பற்றியும் இஸ்லாமிய கலாச்சாரம் பற்றியும் ஒரு வீடியோ பதிவு செய்வதற்காக. நான் அவர்களுக்கு உதவினேன்.

ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி ஆம்பூர் கடைகளில் கிடைக்காது. திருமணம் போன்ற வைபவங்களில் ஆம்பூரில் உள்ள ’பக்காத்தி’ (நாகூரில் பண்டாரி) எனப்படும் நளபாகர்களால் தயாரிக்கப்படும் பிரியாணிதான் ஆம்பூர் பிரியாணி. அப்படி ஒரு பக்காத்தி ஒருவரை ஏற்பாடு செய்யக் கேட்டேன். ஆனால் பக்காத்திகள் ஞாயிறுவரை ‘பிஸி’யாக இருந்ததால் அவர்கள் யாரையும் வைத்து ப்ரோக்ராம் எடுக்க முடியவில்லை.

எனவே ஆம்பூர் கடைகளில் கிடைக்கும் பிரியாணிகளிலேயே சிறந்ததாக உள்ள ஸ்டார் பிரியாணி முனீர் அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்தேன். அவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். டிவி குழு வரும் வரையில் அடுப்பைக் கூட – என்  வேண்டுகோளின்படி – பற்ற வைக்காமல் இருந்தார். காலை பத்து மணி நெருக்கத்தில் குழு வந்து சேர்ந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வீடியோவும் பேட்டியும் எடுக்கப்பட்டது.(ஸ்டார் பிரியாணி முனீரின் சகோதரர் என் மாணவர்).

பின்பு பள்ளிவாசல்களைப் பற்றி கொஞ்சம் எடுக்கலாம் என்றார்கள். உடனே சின்ன மசூதி ஞாபகம் வந்தது. தமிழ் நாட்டில் உள்ள மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிவாசல்களுக்குள்ள ஒரு சிறப்பு அதற்கு உள்ளது. அது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது 1968ல்.

பள்ளி வாசலுக்குள் நுழையுமுன் கீழ்க்கண்ட ஹதீஸ் பொறிக்கப்பட்டிருக்கும்:

மன் பனாலில்லாஹி மஸ்ஜிதன் பனல்லாஹு லஹு பைதுன் ஃபில் ஜன்னா

இந்த நபிமொழிக்கான அர்த்தம்:

எவர் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலை இந்த உலகில் கட்டுகிறாரோ, அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுப்பான்

என்பதாகும்.

இந்த நபிமொழியின் சிறப்பு இந்த மஸ்ஜிதைப் பொறுத்தவரை இரண்டு வகையானது. ஒன்று மஸ்ஜித் கட்டுவதன் முக்கியத்துவத்தை இந்த நபிமொழி கூறுகிறது. இன்னொன்று, இந்த நபிமொழியில் உள்ள எழுத்துக்களுக்கான எண்களை அப்ஜத் கணக்குப்படி கூட்டினால் அந்த பள்ளிவாசலைக் கட்டிய ஹிஜ்ரி ஆண்டான 1387 வரும்!

இதைப் போல பேர்ணாம்பட்டில் இரண்டு பள்ளிவாசல்களிலும், வாணியம்பாடியில் ஒரு பள்ளிவாசலிலும், வேலுர் பெரிய பள்ளிவாசலிலும் க்ரோனோக்ராம் முறையில் மசூதி கட்டப்பட்ட ஆண்டுகள் மறைவாக சொல்லப்பட்ட பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதைப் பற்றி நான் சொல்ல அதையும் வீடியோ எடுத்துக் கொண்டார்கள். அதை இங்கே பார்க்கலாம். (விரைவில் பிரியாணி பற்றியதையும், மக்கன் பேடா என்ற உருண்டை குலாப்ஜான் பற்றிய வீடியோ தொகுப்பையும் ’கட்’ பண்ணி உள்ளிட்ட பிறகு கூறுகிறேன்):
Source : http://nagoorumi.wordpress.com

1 comment:

jiff0777 said...

நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..