Thursday, October 13, 2011

மார்க்கத்தில் நடுநிலை பேணல்

நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதே நடுநிலையாகும். அவர்களது வழிமுறைகளை விட மேலதிகமாகச் செய்வது எல்லை மீறுவதாகும். அவர்களது வழிமுறைகளைக் கடைபிடிக்காமல் விடுவது பொடுபோக்காகும்.
தொழுகை ஒரு மிகச்சிறந்த இபாதத் என்பதால் நான் இரவு முழுக்க நின்று வணங்கப் போகிறேன். காலம் முழுக்க உறங்கப் போவதில்லை என்று ஒருவர் கூறினால் அவர் மார்க்கத்தில் எல்லை மீறியவராகவே கருதப்படுவார். அவர் சரியான பாதையை விட்டு வழி தவறியவராவார்.

இவ்வாறானதொரு சம்பவம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் நடந்தது.
மூன்று மனிதர்கள் ஒன்று சேர்ந்து தமக்கிடையில் சில முடிவுகளை எடுத்தார்கள். அவர்களுள் ஒருவர் நான் இரவு முழுக்க நின்று வணங்கப் போகிறேன், உறங்கவே மாட்டேன் என்றார். அடுத்தவர் நான் பகற்பொழுதுகளில் தொடர்ந்து நோன்பு நோற்கப் போகிறேன் என்று சொன்னார். மூன்றாவது மனிதர் நான் திருமணம் முடிக்கவே மாட்டேன் என்று கூறினார். இச்செய்தி நபியவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள், ‘இவ்வாறு சிலர் கூறியுள்ளார்கள், அறிந்து கொள்ளுங்கள்! நான் நோன்பு நோற்கிறேன், நோன்பு இல்லாமலும் இருக்கிறேன். இரவில் நின்று வணங்குகிறேன், அவ்வாறே உறங்கவும் செய்கிறேன். நான் திருமணமும் செய்கிறேன். யார் எனது வழிமுறைகளைப் புறக்கணித்து வாழ்கிறாரோ, அவர் என்னைச் சார்ந்தவரல்லர்’ என்று கூறினார்கள் (நூல் : புஹாரி)
குறிப்பிட்ட மூன்று பேரும் மார்க்கத்தில் எல்லை மீறி நபி (ஸல்) அவர்களது வழிமுறையைப் புறக்கணித்த காரணத்தினால் அவர்களில் இருந்து நபி (ஸல்) அவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். இது மார்க்கத்தில் எல்லை மீறுவதைத் தெளிவுபடுத்துவதற்கான உதாரணமாகும்.
இதன் மறுபக்கமாக மார்க்கத்தில் அலட்சியமாக நடந்து கொள்வதற்கு உதாரணமாகச் சிலர், நான் பர்ழான தொழுகைகளைத் தொழுது வருகிறேன். சுன்னத்தான தொழுகைகளைத் தொழ வேண்டிய தேவை இல்லை என்று கூறுவதைக் குறிப்பிடலாம். சில வேளைகளில் இவர்கள் பர்ழுத் தொழுகைகளிலும் பொடுபோக்காக நடந்து கொள்வர். இன்னுமொரு உதாரணத்தின் மூலம் இதனை விளக்கலாம். திருமணம் முடித்த ஒருவர் தனது மனைவிக்கு அடிமைப்பட்டு வாழ்கிறார். அவளை நன்மைகளின்பால் தூண்டுவதும் இல்லை. தீமைகளை விட்டும் தடுப்பதுமில்லை. அவளிடம் தனது ஆளுமையை இழந்து அவள் விருப்பப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பொடுபோக்கானவர். மற்றொருவர் மனைவியை அடக்கியாள்கிறார். அவளை ஒரு பொருட்டாக கொள்வதே கிடையாது. வேளைக்காரர்களை விடக் கேவலமாகவே நடத்துகிறார். இவர் எல்லை மீறியவர்.
இன்னொருவர் அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியபடி தன் மனைவியுடன் வாழக்கூடியவர்.
‘கணவனுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு..’ (அல்குர்ஆன் 2:228)
‘ஒரு முஃமினான (கணவன்) முஃமினான (மனைவியை) வெறுக்க வேண்டாம். ஏனெனில் அவளது பண்புகளில் ஒன்றை வெறுத்தால் மற்றொன்றை அவன் பொருந்திக் கொள்வான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
இவ்வாறு அல்லாஹ்வும் ரசூலும் கூறுகின்ற போதனைகளை மதித்துத் தனது மனைவியுடன் வாழக்கூடியவரே நடுநிலை பேணக் கூடியவர்.

Source : மார்க்கத்தில் நடுநிலை பேணல்  

http://islamthalam.wordpress.com

No comments: