இந்த ஆண்டின் இறுதியில் இது முழு அளவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிலேயே மிகவும் குறைந்த விலையிலான தொடுகணினியை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் கணினித் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 13 சென்டிமீட்டர் அகலம் கொண்ட ஆகாஷ் என்று பெயரிடப்பட்ட இந்தத் தொடுகணினி மாணவர்களுக்கு 1500 ரூபாய்க்கு கொடுக்கப்படும்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இந்தச் சாதனைத்தை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒட்டுமொத்தமாக 1 கோடி மாணவர்களுக்கு இது போன்ற கணினிகளை அளிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்தக் கணினியில் wifi எனப்படும் கம்பியில்லா இணைய வசதி உண்டு. அண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் மூலம் இது இயங்கும். இணையத்தில் இருக்கும் செய்திகளை வாசித்துச் சொல்லும் திறனும் இதற்கு உண்டு. ஆண்டின் பிற்பகுதியில் பொதுச் சந்தையில் விற்கப்படும் போது இதன் விலை மூவாயிரம் ரூபாய்க்கும் சற்று குறைவாக இருக்கும்.
டில்லியில் நடைபெற்ற விழாவில் பெருமித்துடன் இந்த புதிய தொடுகணினியை இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் அறிமுகப்படுத்தினார். இந்தச் சாதனம் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த தொடுகணினியை தயாரித்துள்ள டேட்டாவிண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுனித் சிங் டூலி இது குறித்து கூறுகையில், இந்த அளவுக்கு குறைவான விலையில் இதை விற்றாலும் தங்கள் நிறுவனத்துக்கு நிச்சயம் லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மொத்தச் செலவில் தொடுதிரை அமைக்க அதிகச் செலவானதாகவும், ஆனால் அதையும் 10 டாலருக்கும் குறைவான செலவில் தாம் தயாரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கணினியில் வீடியோ பார்க்க முடியும் என்றாலும் கேமரா வசதி கிடையாது. இதன் மெமரியும் மிகவும் குறைவாகவே இருக்கும்.
Source : http://muthupet.org/தொடுகணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.:
No comments:
Post a Comment