Monday, October 17, 2011

கல்யாண வாழ்க்கை


இப்பொழுதெல்லாம் கட்டுரைத் தலைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. “சொந்த அனுபவமா?” என்று இரண்டே வார்த்தையில் கேள்வியைத் தொடுத்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிவிடுகிறார்கள் என் ஆத்ம நண்பர்கள்.
கல்யாண வாழ்க்கையைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று துழாவிப் பார்த்தேன்.
சாக்ரடீஸ் சொல்கிறார், “தாராளமாக கல்யாணம் பண்ணிக் கொள். நல்ல மனைவி கிடைத்தால் சந்தோஷக் கடலில் நீந்துவாய். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவவாதி ஆகி விடுவாய்”.  சாக்ரடீஸ் தத்துவவாதி என்பது நாம் எல்லோரும் அறிந்த செய்தி.
காரில் தன் மனைவியுடன் வந்திறங்கும் ஒருவன் ஓடிப்போய் தன் மனைவிக்காக கார் கதவை பவ்யமாகத் திறக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியென்றால் ஒன்று, அவள் மனைவி புதுசு என்று அர்த்தமாம் அல்லது அவன் கார் புதுசு என்று அர்த்தமாம்.
‘கல்யாணம்’ என்பது ஒரு சொல் அல்லவாம். வாக்கியமாம். “Marriage is not a word. It is a sentence” என்று நண்பன் ஆங்கிலத்தில் சொன்னபோதுதான் “Sentence” என்பதற்கு தண்டனை  என்ற மற்றொரு பொருள் உண்டென்பது புரிந்தது.
“கல்யாணத்தின் போது ஒருத்தன் தன் Bachelor’s பட்டத்தை இழக்க, வந்தவளோ Master’s பட்டத்தை பெற்று விடுகிறாள்” என்கிறார்கள். உண்மைதான். ஏகப்பட்ட இல்லத்தில் தாய்க்குலம்தானே மாஸ்டர்களாக இருக்கிறார்கள். உங்க வீட்லே எப்படிங்க? என்று நண்பர் பாண்டியனிடம் கேட்டால் “I am in total control, but don’t tell my wife” என்கிறார்.

அவன் ஒரே ஒரு வளையத்தைதான் (Wedding Ring) அவள் விரலிலே போடுகிறான். நாளடைவில் இரண்டு வளையம் அவன் கண்களுக்கு கீழ் ‘டொக்’ விழுந்து போய்விடுகிறது – இது இன்னொரு பழமொழி
“Marriage is a Three ring circus” என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். ‘த்ரீ ரிங் சர்க்கஸ்’ என்றவுடன் ‘ரிங் மாஸ்டர்’ கையில் சாட்டையை வைத்துக் கொண்டு சிங்கத்தை வளையத்திற்குள் புகவைக்கும் காட்சிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. உண்மையில் Three Rings எதுவென்றால் 1.Engagement Ring,  2.Wedding Ring,  3.Suffering.
முஸ்லீம்களுக்கு Murmering. இந்துக்களுக்கு Offering (அர்ச்சனை). அப்போ Suffering? அது எல்லோருக்கும் பொருந்துகிறது.
“நிக்காஹ்விலே ஒரே வார்த்தையை மூணுதடவை ‘கபூல்’ ‘கபூல்’ ‘கபூல்’ என்று முனகச் சொன்னாங்க. இப்போ என் வாழ்க்கையே காபூல் மாதிரி ஆயிடுச்சு” என்கிறார் நண்பர் சலீம்.  “அங்கேயும் இதே கதைதானா?” என்று வாசகர்கள் சிலரும் ஆமோதிக்கக்கூடும்.
ஒருவன் சர்ச்சிலே ஒரு சில வார்த்தைகள் முனகித் தொலைக்க அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாம். அதற்குப் பிறகு தூக்கத்தில் ஏதோ முனகித் தொலைக்க டைவர்ஸ் ஆகிவிட்டதாம்.
“இறைவா! இன்னிக்கு தூக்கத்தில் ஏதும் உளறிக் கொட்டாமல் இருக்க நீதான் என்னைக் காப்பத்த வேண்டும்” என்று எத்தனைப்பேர் பயபக்தியுடன் பிரார்த்தனை செய்துவிட்டு படுக்கப்போகிறார்களோ தெரியாது. நான்  எப்போதும் போல வேண்டுதல் முடித்துவிட்டுத்தான் தினமும் தூங்குகிறேன்.  
இன்னொரு நண்பர் கூறிய உதாரணம்தான் கொடுமையாக இருந்தது. “கல்யாணம் முடிப்பது என்பது ரெஸ்டாரண்ட் சென்று சாப்பாடு அயிட்டம் ஆர்டர் பண்ணுவது போலவாம். பக்கத்து டேபிள்காரரின் பிளேட்டைப் பார்த்த பிறகுதான், அடடா! இதை ஆர்டர் பண்ணியிருக்கலாமே!” என்று ஞானதோயம் பிறக்குமாம்.
கல்யாணத்திற்கு முன்பு ஒருவன் ஒரு பெண்ணின் கையைப் பிடித்தால் அது காதலினால் என்று அர்த்தமாம். கல்யாணத்திற்குப் பிறகு பிடித்தால் அது தற்காப்புக்கு என்று அர்த்தமாம். எனக்கும் தற்காப்புக்கலை கற்க வேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை.
என் நண்பர் சரவணன் எப்போதுமே சிரித்த முகமாக இருக்கிறார். கல்யாணமான புதிதில் ஒருவன் சிரித்தமுகமாய் இருக்கும்போது எதனால் அது என்று எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது. கல்யாணமாகி 10 வருடம் கழித்த பிறகும் அவர் சிரித்த முகமாய் இருப்பதை பார்க்கும்போதுதான் மண்டையை உடைத்துக் கொள்ள நேரிடுகிறது.
கல்யாணத்திற்கு முன் ஒருவன் தன் காதலியை பார்த்து “கண்ணே உனக்காக நான் நரகத்தைக் கூட சந்திக்கத் தயார்” என்று வீரவசனம் பேசினானாம். கல்யாணத்திற்குப்பிறகு அவன் சொன்னது அப்படியே பலித்துவிட்டது. (இதுவும் நானில்லை)
‘இப்படி ஒரு கட்டுரை எழுதுகிறீர்களே. உங்களுக்கு பயங்கர துணிச்சல்தான் போங்க’ என்று என் நண்பர்கள் என்னை பாராட்டப் போவதை என்னால் நன்றாக உணர முடிகிறது.
Source : http://nagoori.wordpress.com/
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

‘இப்படி ஒரு கட்டுரை எழுதுகிறீர்களே. உங்களுக்கு பயங்கர துணிச்சல்தான் போங்க’

LinkWithin

Related Posts with Thumbnails