Saturday, July 30, 2011

முனைவர் அ . இரபியுதீன் எழுதிய "நினைத்தேன் எழுதுகிறேன்" என்ற நூலுக்கு நீடூர் சிந்தனைச் சித்தர் அ. மு. சயீது சீருரை.


 தமிழ் இஸ்லாமிய இலக்கியக் கழகத்   தலைவர் சிந்தனைச் சித்தர் 
நீடூர் அ. மு. சயீது சீருரை.
                                           

                                                           
                                            வல்லான் முற்றும் உணர்ந்தான் தன்னை
                                            சொல்லால் மனத்தால் செயலால் தொழுவோம்.


எந்த சந்தர்பத்திலும், சோதனைகளிலும்,மகிழ்ச்சியிலும், தூய சிந்தனை இருந்தால் மனித வாழ்க்கை சிறப்புடன் அமையும் .
 உழைப்பும் , நேர்மையும் , பரந்த நோக்கமும் , விரிந்த சிந்தனையும் , நன்றி உணர்வும் , மனிதனை இறையருளால்   முன்னேற்றப் பாதையிலேயே  அழைத்துச்  செல்லும்.
    சமுதாய ஒளி விளக்காகத் திகழ்கிற சகோதரர் அல்ஹாஜ் முனைவர் 
அ . இரபியுதீன் நன்றியுணர்வை நன்கு பெற்றிருக்கிறார் என்பதை "நினைத்தேன் எழுதுகிறேன்" என்ற இந்த நூலில் ஆழமாகப் பதித்திருக்கிறார்.
  உச்சத்திற்கு தான் ஏறிய ஏணியை அவர் உதறிடவில்லை. பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் " ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்தல் அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், உதவியரைப் புகழ்ந்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் ஒருவித நன்றிக் கடனாகும்" என்று குறிப்பிடுகிறார்கள். தம் வழிகாட்டிகளில் அதற்கு விளக்கம் தருகின்றார்.
 ஒரு காசை உருட்டிவிட்டால் அது சிறிது தூரம் ஓடிப்படுத்து விடும், அது போலத்தான் உலக வாழ்க்கை. சக்தி உள்ள வரை ஓடி வாழும், இந்த வாழ்க்கையில் தாய் மொழிக்காகவும், தமிழ் பண்பாட்டிற்காகவும் , தான் சார்ந்திருக்கிற சமுதாயத்திற்காகவும், தாய் நாட்டிற்காகவும் பொருளீட்டுவதற்காக வாழும்  நாடுகளுக்காகவும் தன்னால் இயன்ற தொண்டினை தொய்வில்லாமல் தம்பி     இரபியுதீன் ஆற்றி வருகிறார் என்பதை இந்த நூலில் ஒவ்வொரு வரியும் நமக்கு மெய்ப்பித்து காட்டுகிறது.
பண்டிதர் ஜவஹர்லால் நேரு வின் பொன்மொழி ஒன்று இந்த நூலை படித்த போது எனக்கு நினைவுக்கு வந்தது "என்னை பற்றி யாராவது நினைவு கூர்ந்து பார்க்க விரும்பினால், அவர்கள் பின் வருமாறு பேச வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்". இந்த மனிதர் தமது மனம் , மொழி, மெய் இவற்றால் முற்றாக இந்தியாவையும் இந்திய மக்களையும் நேசித்தார் . அவர்களும் பதிலுக்கு அவரிடம் அளவுக்கு மீறி சகிப்புத்தன்மை காட்டி மித மிஞ்சிய அன்பை பெய்தனர் ."
வரலாற்று நாயகன் விரும்புவது போலவே "நினைதேன் எழுதுகிறேன் " என்ற நூலின் நாயகனும் நாற்று பற்று உடையவராக , மொழி பற்று உடையவராகத் தம்மை வளர்த்துக்  கொண்டிருப்பதை  வாசகர்கள் உணரலாம் . இரபியுதீன் அவர்களின் நினைவுகள் கற்பனை பெட்டிகளல்ல, பகுத்தறிவின் பொக்கிஷம்; மனசாட்சியின் பதிவிடம்; சிந்தனையின் ஆலோசனை அறை!
வாழ்க்கையில் விரக்தி கொள்ளாது , பிரச்சனைகளின் தாக்குதல்களில் மனநோயாளியாகாமல் , நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வத்தைப் பெற்று, ஆன்மீக அளவுகோலை அறிந்து , உழைப்பால் உயரலாம் என்று உற்சாகம் பெற்று , வாழ்கையின் வெற்றி கனியைத் தட்டிப்  பறிக்க , இன்றைய இளைஞர்கள்  இந்நூலைப்  படித்தேயாக வேண்டும் .
படிப்பவர்களை சிந்திக்க தூண்டுவதே இலக்கியத்தின் பொறுப்பாகும். சிந்திக்க வைப்பதோடு விட்டு விடாமல், மனிதகுல முன்னேற்றதிர்க்காகவும் , சமூகம் செழுமையுறுவதற்கும்     வழிகளை காண்பிக்க இலக்கியம் துணைபுரிய வேண்டும் . அந்த வகையில் இந்த நூல் இலக்கியத்தின் பட்டியலில் இடம் பிடிகிறது .


நபிதோழர் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள் : "நன்மைகள் செய்வதன் காரணமாக இதயத்தில் ஒளியும் , முகத்தில் அழகும் , உடல் உறுதியும் வாழ்வில் வளமும் , மக்களிடத்தில் அன்பும் ஏற்படுகின்றன "


ஆம் ! சகோதரர் இரபியுதீன் நல்லவைகளையே நினைத்து நற்தொண்டு ஆற்றுவதையே வாழ்வின் இலக்காக வைத்திருப்பதால் , அவர் முகத்தில்  அழகு தெரிகின்றது  .
என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்த அறிவும் , எப்படிச்  செய்ய வேண்டும் என்பதை அறிந்த ஆற்றலும் , அதை செயல்படுத்துகின்ற அறமும் பெற்றிருக்கிற நூலாசிரியர் , இது போன்ற நல்ல பல நூல்களை தமிழ் இலக்கியத்திற்குத் தந்து நீடித்து வாழ பிரார்திகின்றேன் . வாழ்த்துகின்றேன் .


S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan நன்றி
-----------------------------------------------------------------------------------------------------------

No comments: