Thursday, July 21, 2011
முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 1
(இந்த பதிவை மிக நீலமான பதிவாக பதிவிட எண்ணினேன் படிப்பதற்கு சிரமமாக இருக்கலாம் என எண்ணி தொடராக எழுதுகிறேன்.)
இது ஒரு விடுமுறை அனுபவம்சூன் மாதம் இருபதில் எனது கோடைவிடுமுறை துவங்கியது அமீரகப் பள்ளிகள் சூலை முதல்வாரம் வரையில் இருந்ததால் நான் மட்டும் பத்துதினங்களுக்கு முன்னதாகவே ஊர் செல்ல தீர்மானித்தேன்.
சூலை முதல்தேதியில் எனது மனைவி பிள்ளைகள் ஊர்வருவதற்கு டிக்கேட் போட்டிருந்தேன் ஒன்றாக சேர்ந்து செல்லமுடியாத காரணம் எனது குருகிய விடுமுறையும், பள்ளியும்தான்.
• துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டேன் ஆரம்பமே அபாரமாக இருந்தது அதாவது இக்கணாமி வகுப்புக்குரிய எனது பயண இருக்கையை பிஸ்னஸ் இருக்கைக்கு மாற்றி கூடுதலான வசதியை எமிரேட்ஸ் நிறுவனத்தினர்கள் தந்தார்கள். மகிழ்சியாக இருந்தது. உட்கார்ந்துக் கொண்டு தூங்க வேண்டிய என்னை படுத்துக் கொண்டு தூங்கும்மளவு வசதியைத்தந்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி.
• சென்னையிலிருந்து நான்மட்டுமே தனியாக செல்வதால் முன்கூட்டியே இரயில் டிக்கேட் பதிவு செய்திருந்தேன். என்னை அழைப்பதற்கு எனது சகலையின் மகனார் வந்திருந்தார். காலை எட்டு முப்பது மணிக்கு தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு திருச்சி விரைவு இரயிலில் பயணித்தேன்.
கோடைவெப்பம் இன்னும் தமிழகத்தில் இருந்துக் கொண்டுதானிருக்கிறது அதனால் ஏசி கோட்ச்சில் பயணம் செய்தது சுகமாக இருந்தது.
எங்கள் இருக்கையில் ஒரு குடும்பம் நான்கு பேர்கள் அமர்ந்திருந்தார்கள். என் இருக்கை எண்ணை கூறியதும் இருதய அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஊர் திரும்புகிறோம் என்று கூறவே சன்னல் ஓர இருக்கையை அவர்களிடம் கொடுத்துவிட்டு மத்திய இருக்கையில் படுத்துக் கொண்டேன்.
அந்த இருதயக்காரர் துபாயிலிருந்து விடுமுறையில் வந்தவர்தானாம் வந்த இடத்தில் நெஞ்சுவலி ஏற்பட சென்னையில் அறுவை சிகிச்சையை முடித்து விட்டு ஊர் திரும்புகிறார்கள்.
அவருடைய மகள் அவரை ரொம்பவும் கவனமாக பார்த்துக் கொண்ட விதம் என்னை நெகிழச் செய்தது. அந்த பெண் கல்லூரியில் படித்து முடித்திருக்கிறாள். அவருக்கு இரண்டு பெண் குழந்தை மூத்தப் பெண்ணுக்கு திருமணத்தை முடித்துவிட்டார் இளையமகளை நன்றாக படிக்க வைத்துள்ளார். அவருடைய மனைவி யாரிடமோ கைபேசியில் உரையாடினார். இந்த அறுவை சிகிச்சைக்கு செய்த சிலவில் ஒரு கல்யாணமே செய்திருக்கலாம் என்று ஆதாங்கப்பட்டுக் கொண்டார்.
கவலைப்படாதீங்க சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் உங்க கணவர் நல்லபடி குணமடைந்து மீண்டும் துபாய் சென்று சம்பாதித்துக் கொடுப்பார் என்று நம்பிக்கை ஊட்டினேன்.
பணம் காசி முக்கியமில்லை என்புருசனுடைய உயிர்தான் முக்கியம் என்ற வார்த்தையும் அவர்களிடமிருந்து வந்தது.
நடுத்தர மக்களுக்கு இப்படித்தான் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. பணக்காரர்களுக்கு எந்த நோய் வந்தாலும் அந்த நோயைப் பற்றிய கவலைமட்டுமே ஆனால் நடுத்தரவர்க்கத்திற்கு நோயைப்பற்றிய கவலையும் பணத்தைப்பற்றிய கவலையும் சேர்ந்துக் கொள்கிறது. இறைவன் நோயற்ற வாழ்வை அனைவருக்கும் வழங்க அருள்புரிவானாக…
• காரில் வருவதைக்காட்டிலும் இரயிலில் வந்ததது எந்த கலைப்பும், அலுப்பும் தெரியாமல் மயிலாடுதுறை வந்திறங்கினேன். என்னை வரவேற்க எனது சகோதரனும், மைத்துனரும் நின்றிருந்தார்கள்.
மதியம் இரண்டு முப்பது மணிக்கு இரயில் நிலையத்திலிருந்து கிளியனூருக்கு புறப்பட்டோம். இருபது நிமிடங்களில் என் வீட்டு வாசலில் அம்மா… என்னை ஆரத்தழுவி அன்பாய் அரவணைக்கும் அந்தக் கைகள். நான் என்தாயை என்நெஞ்சோடு அணைத்துக் கொள்வது இரண்டுமுறை தான் ஒன்று பயணத்திலிருந்து வரும்போது, மற்றொன்று பயணம் புறப்படும்போது.
சுகமான குளியலுக்குப் பின் மதிய உணவு அம்மாவின் கரங்களிலிருந்து அமுதாய் அருந்தினேன்.தாயின் கைப்பட்டால் நஞ்சும் கூட விசத்தன்மையை முறித்துகொள்ளும்.
• மாலை நேரத்தில் கனடா நாட்டின் குடிஉரிமைப்பெற்ற கிளியனூர் கிராமவாசி விடுமுறையில் வந்திருக்கும் எனது அன்பிற்குரிய நண்பர் முஹம்மது சபீர் M.B.A, என்னைக் காண இல்லம் வந்தார்.
இருவரும் காலாற கதைத்துக் கொண்டே நடந்து பள்ளிவாசலில் இறைவணக்கம் செய்துவிட்டு வந்தோம்.
எந்த நாட்டில் எப்படிபட்ட பதவி வகித்தாலும், வாழ்ந்தாலும் தான் பிறந்த மண்ணில் நம் பாதம் படும்போது ஏற்படுகின்ற அலாதி நிறைவு எங்கும் கிடைப்பதில்லை. தாயின் கைமனம் போல தாய் மண்ணின் மனமும் நம்மை வசீகரிக்கிறது.
• நான் எப்பொழுது தாயகம் வந்தாலும் எனது முதல் விஜயம் நாகூராகதானிருக்கும். மகான்களின் மீது எனக்கு உயர்ந்த மரியாதை இருக்கிறது.
பெரும்பாலும் பைக்கில் தான் பயணிப்பது வழக்கம் அமீரகத்தில் மகிழ்துவிலேயே சுற்றும் எனக்கு இங்கு பைக் சவாரி செய்வதில் அலாதி. இந்த முறை எனது வேகத்தை குறைத்துக் கொண்டுள்ளேன். எனக்கு எதிரில் வரக்கூடியவர்கள் வேகமாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருவேலை ஏற்படுத்திக் கொண்டு சுற்றுகிறேன். இந்த முறை எனது சகோதரியின் இல்லத்தில் அரைநாளுக்கும் அதிகமாய் தங்கியிருந்தேன். மாலையில் எனது தங்கை மற்றும் மச்சானுடன் காரைக்கால் பீச் சென்று காற்று வாங்கியதும் அவர்களுடன் மனம்விட்டு பேசியதும் எங்கள் மனங்களுக்கு பளுகுறைந்திருந்தது. அதனால்தான் டாக்டர்கள் கௌன்சிலிங் செல்லவேண்டும் என்கிறார்களோ?
• திருவாருர் முன்னைவிட இப்போது பொலிவு இழந்திருந்தது ஆட்சிமாற்றம் என்பதை எளிதில் புரிந்துக் கொள்ளமுடிந்தது. எனது பங்குசந்தையின் ஆலோசகர் மோத்திலால் ஏஜன்சி பிரோஸ்சாவை சந்திக்க சென்றிருந்தேன். இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றி ஒரு பாடமே நடத்திவிட்டார் அவருடைய பேச்சை கேட்பதற்கு ஆவலாகவே இருந்தது. அமீரகத்திலும் ஒரு செமினார் நடத்தவேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். இவர் ஒரு பொருளாதார நிபுணர். குடும்பத்துடன் வந்துள்ளீர்களா என்று கேட்டார்? அடுத்தவாரம் வருகிறார்கள் என்றேன் அமீரகப் பாதுகாப்பை எண்ணி வியந்தார் இதுவே நம் நாட்டில் தனியே விட்டுவர இயலாது என்றார். இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து, பாதுகாப்பில் பின்தங்கி இருப்பது வருத்தப்படவேண்டிய செய்தி.
தினமும் மூன்றுமுறை துபாயிலிருந்து எனது துணைவியார் பிள்ளைகள் கைபேசியில் பேசிவிடுவார்கள் அவர்கள்பேசும் அதிகமான வார்த்தை நீங்கமட்டும் ஜாலியாக சுத்துறீங்க…
• நீடுரில் எனது சொந்தங்கள் நிறைய பேர்கள் இருந்தாலும் பதிவர் முஹம்மதுஅலி ஜின்னாஹ்வை சந்திப்பதில் எனக்கு மித்த ஆர்வம். இவர் பல வலைப்பதிவு வைத்திருப்பவர் அதிகமானவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். காலை பத்து மணிக்கு அவர் வீட்டு அழைப்பு மணியை நசுக்கியதும் கதவை திறந்த அவருக்கு என்னைக் கண்டு அதிர்ச்சி.
என்னைக் கண்ட அவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்ல மனைவியை அழைத்து எனது வருகையை கூறினார் அரை மணிக்குள் பில்டர் காபியும், சர்பத்தும் கொடுத்து அன்பை ஊட்டினார்.
அவர் வீட்டு கொல்லைபுறம் அழைத்துச் சென்று முக்கனியில் முதல்கனியான மாம்பழத்தை அவரைப்போலவே இனிப்பாக கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த மரத்தைப் பற்றிய சுருக்கமான வரலாற்றை கூறினார்.
ஆரம்பக் காலத்தில் வலை உலகில் உதவி செய்த மூவரை என்னால் மறக்க இயலாது என்று நினைவுக் கூர்ந்தார். அதில் அன்புடன் புகாரி, முஹம்மது ரிஷ்வான், மற்றும் என்னையும் அவர்களில் சேர்த்திருந்தார் எனக்கு சந்தோசமாக இருந்தது.
சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் கழித்தேன் நிறைய விசயங்கள் துண்டு துண்டாக கிடைத்தது. எத்தனையோ நாடுகளை வியாபார விசயமாகவும், தனிப்பட்ட முறையிலும் உலகம் சுற்றிருக்கும் இவரிடம் மாம்பழம்போல சுவையான அனுபவங்கள் இருக்கிறது. மிகவும் சுறுசுறுப்பு மிக்கவர் தன்னை இன்னும் இருபத்தி இரண்டாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றார்.
உரையாடுகையில் கூறினார் மனிதர்களை வெறுக்கக் கூடாது அவனுடைய துர்குணத்தை வெறுக்க வேண்டும் என்றார். இறைவணக்கம் நேரம் போக மீதி நேரத்தில் இணையதள சேவைதான் அவருடைய பொழுதுபோக்கு.
என்னை உற்சாகப்படுத்தி விமர்சனம் செய்தார். அவருடைய வார்த்தைகள் எனக்கு கிடைத்த வைரங்கள் இவர் ஒரு வெள்ளை மனிதர் இவரின் உடல், உடை, உள்ளம் அனைத்தும் வெண்மை… தன்னைவிட இளையவர்களிடம் பழகுவதாகவும் அதனால் வயதை மறப்பதாகவும் கூறும் இவர் நமக்கு படிப்பினை… நீண்ட ஆயுலுடன் வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்…!
சகோதரர் முஹம்மதுஅலி ஜின்னாவைப்பற்றிய செய்தி இத்துடன் நிறைவு பெறவில்லை இன்னொரு முக்கியமான சந்திப்பு நடந்துள்ளது அது வாழ்க்கையில் மறக்கமுடியாது! அதையும் தொடரில் தொடரலாம்...
Source : http://kismath.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மாஷா அல்லாஹ்..
மாஷா அல்லாஹ். வல்ல இறைவன் எங்கள் தாய் மாமாவிற்கு நீண்ட ஆயுளைவும், நிறைவான செல்வத்தையும், உடல் ஆரோக்யத்தையும் தந்தருள் புரிவானாக. ஆமீன்!
எங்கள் மாமாவின் முயற்சியை, சேவையை வலைபதிவில் அனுபவ செறிவு மிக்க சகோதரர் பாராட்டுவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. குடும்பத்தில் படித்த பட்டதாரிகள் பலர் இருந்தும் தன்னுடைய சொந்த முயற்சியால் இணையம் கற்று, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று இன்று இணையம் பல நடத்தி வரும் எங்க இனிய மாமாவிற்கு வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்.
Post a Comment