Sunday, July 24, 2011

கறுத்த மச்சான்..


ஆயிரங் கனவுகளோடு
அடியெடுத்து வைக்கவில்லை
உன்னைக் கைப்பிடிக்கையில்
”ஆனால்”

ஆயிரத்தை தாண்டியும்
என் ஆழ்மனக் கனவுகளும்
அழகாய் நிறைவேற்றி வரும்
ஆருயிரானவன்

பதிமூன்றாம் அகவையில்
பதியமிடப்பட்ட வாழ்க்கை விதை
பனிவிழும் மலர்வனமாய்
பத்தொன்பதாம் வருடத்திலும்
பூத்துக் குலுங்கச் செய்யும்
புதுமையானவன்!

பாலைவன வாழ்க்கையில்
பலசிரமங்களுக்கு நடுவிலும்
பலவருடம் தன்னுடனே வைத்து
பசுமையை மட்டுமே எனக்கு
பகிர்ந்தளித்த பண்புள்ளவன்!

எத்தவறையும் மன்னிப்பவள்
பெற்றதாய் மட்டுமே என்பதை
பொய்யாக்கியவன்
என் குற்றங்குறைகளையும்
குறைசொல்லாமல் மன்னித்த
புண்ணியமனம் கொண்டவன்!


பிள்ளைகளின் தேவையறிந்து
கடமைசெய்பவன் தந்தை-ஆனால்
என் தேவைகளை நான்
உணரத்தொடங்கையிலே
உணர்ந்து செயல்படுபவன்
உணர்ப்பூர்வமானவன்!

ஆணாதிக்கம் என்பதை
அறிந்ததில்லை நான் உன்னிடம்
அன்பாதிக்கத்தையே அளவில்லாமல்
அள்ளிதருவதில் நீதான் முதலிடம்!

கொண்டவளை
அடக்கியாள்வோர் மத்தியில்
என் எண்ணங்களுக்கூட மதிப்பளித்து
எழுதவும் விட்டதோடு
என்னை மேடையேற்றி அழகுபார்க்கும்
மதிப்புக்குறியவன்!

உன் சிலநேர சினத்தில்
நானும் சிணிங்கியதுண்டு
சிந்தி அழுததில்லை
ஊடலில்லாமல் கூடலில்லை-அதை
அறியாதோர் வாழ்க்கையில்
உயிர்ப்பூக்கள் பூப்பதில்லை

கறுத்த மச்சானே-உன்
கார்கால அன்பில் நான்
கரைந்து போகவில்லை
கனிந்து போகிறேன்

இறைவன்
எனக்கு அனுமதிக்கவில்லை
”இல்லையெனில்”
நான்வாழும் காலந்தோரும்
உன் காலடி தொழுவேன்
என் இதயதுடிப்பு இருக்கும்வரை..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
Source : http://niroodai.blogspot.com/2011/07/blog-post_15.html

No comments: