Thursday, July 21, 2011

பத்மநாப சுவாமி கோயில் சொத்துகள் கொள்ளைச் சொத்துகளா?

சாதியை அரசாங்கம் அங்கிகரிப்பது பற்றி உங்கள் கருத்து? - மாதவன்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஆனால் பிறந்தவுடன் சாதி ஒட்டிக் கொள்கிறதே! சாதி அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் சாதியை அரசாங்கம் அங்கீகரித்தே ஆக வேண்டும். சாதி அடிப்படையில் எங்களுக்குச் சலுகை வேண்டாம் என்று அனைத்து சாதிகளும் கூறும் நிலையில் இந்தியா இல்லையே! இன்னும் தீண்டாமைக் கொடுமையும் இரட்டைக் குவளை முறையும் நீடிக்கிறதே. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது ஏட்டில் மட்டுமே உள்ளவரை அரசைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.

ஒன்றரை மாத ஜெ.வின் ஆட்சி எப்படி உள்ளது?- அப்பாஸ், நெல்லிக்குப்பம்

ஒன்றரை மாதத்தில் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் முதலமைச்சர் நாற்காலியில் முழுதாக அமரும் முன்பே தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர் கல்வி வழக்கில் எதிரிடையான நீதிமன்றத் தீர்ப்பு, இரு முறை அமைச்சரவை மாற்றம் மற்றும் மரியம் பிச்சை மரணத்தில் சதி எனப் பரபரப்புத் தகவல் போன்றவை பட்டியலில் ஏறியுள்ளன.

குழந்தைகள் புத்தகங்களின்றி பள்ளி சென்று வருவதைப்பற்றி வமுவின் கருத்து என்ன?- சி. கோயா
புத்தகங்களின்றி வகுப்பை நடத்தும் ஆசிரியர்களைப் பாராட்டியே தீர வேண்டும்.

பொது அறிவு, கதைகள், வரலாறு, பொதுக்கணக்கு, கணினி இயல் எனப் பலவிதமாகச் சொல்லிக் கொடுத்துப் பொழுது கழிவதாக எங்கள் ஊர்த் தனியார்ப் பள்ளி மாணவன் மூலம் அறிந்தேன்.

அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க தனிநபர்கள் உண்ணாவிரதம் என்ற பெயரில் மிரட்டுவது குறித்து வணங்காமுடியின் கருத்து என்ன?- ஜான்பிரிட்டோ

எலாத் தனிநபர்களும் அப்படி மிரட்ட முடியாது என்பதற்கு யோகா ட்ரெய்னர் ராம்தேவே சான்று.

அன்னா ஹஸாரே காந்தீயவாதி என முன்னரே பெயர் பெற்றிருந்தவர் என்பதால் அவருக்கு மக்களிடையே ஆதரவு எழுந்தது. எல்லாத் தனிநபருக்கும் அப்படி மக்கள் ஆதரவும் கிடைக்காது; அரசும் அடிபணியாது.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரததம் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஏதேனும் கலவரத்தை மூட்டிவிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் என்ற ஐயம் எனக்கு உள்ளது. உங்களுக்கு அப்படி ஏதாவது தோன்றுகிறதா?- ராஜன்

இல்லை; அரசு முனையும் வாய்ப்பும் இல்லை.

ஏன் எப்போதும் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் பாமக ஆட்சியைப் பிடித்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என முழங்குகிறார்? - மணி, பண்ருட்டி.

அதிலென்ன தவறு? ஓர் அரசியல் கட்சித் தலைவர் தம் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்குச் செய்யப்போவதாகச் சொல்வது அரசியல் சட்டம் அனுமதித்த ஒன்றுதானே?

இப்போது நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இலவசங்களை அள்ளி வழங்குவதாக வாக்குறுதி தந்ததை மறந்து விட்டீர்களா? "மூன்றுபடி லட்சியம்; ஒரு படி நிச்சயம்" என்ற வாக்குறுதி இளம் தலைமுறை அறியாத ஒன்று.

பாபர் மசூதியை இடித்தவர்களை உடனே தண்டிக்க வலியுறுத்தி அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் எனக்கு ஆதரவு கிடைக்குமா?- அலி கான், தொண்டி

'பொது'மக்களின் ஆதரவு கிடைக்கலாம்; ஆனால் ஊடக வெளிச்சம் கிடைக்காது.

லோக்பால் விசாரணையில் பிரதம மந்திரியை உட்டபடுத்தவேண்டும் என காங்கிரசும் மன்மோகன் சிங்கும் கூறிவிட்டால் பிரச்சனை சுமூகமாகிவிடுமே! மடியில் கனமிருப்பதால் வழியில் பயமோ?- ராஜேஷ்

இப்போதுள்ள பிரதமருக்கு மடியில் கனமில்லை; அதனால் அவர் அஞ்சுவதாகவும் இல்லை. ஆனால் பிரதமர், ஜனாதிபதி போன்ற நாட்டின் மிக உயர் பதவி வகிப்போருக்கு "ஸீஸரின் மனைவி ஐயத்திற்கப்பாற்பட்டவள்" என்ற தகுதி வேண்டும் என எதிர்பார்க்கிறர்கள்.

கனிமொழி, ராசாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் ஜஸ்வந்த் சிங் கூறி இருப்பது சரியா? - அறிவழகன், ராயப்பேட்டை

அது அவரது கருத்து. நீதி மன்றத்தை யாரும் நிர்பந்திக்க முடியாது.

லிபிய அதிபர் கடாபி "கற்பழிப்பை ஆயுதமாக்குகின்றார்" என்று ஹிலாரி க்ளிண்டன் கூறியிருப்பது குறித்து? - ரபீக், முத்துப்பேட்டை

Victor will have the right over the womenfolk of the vanguished என்பது ஆதிகாலம் முதல் பழங்குடியினரின் வழக்கமாகும். அது இன்று வரை தொடர்கின்றது.

யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் -- ஏனை வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள.

எனும் நீதி வெண்பாப் பாடலும் இதையே உணர்த்துகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ராணுவ முகாம்களில் ஸெக்ஸ் அடிமைகளாக சுமார் இரண்டு லட்சம் கொரிய, சீன மற்றும் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டுப் பெண்கள் இருந்ததாகவும் ஒவ்வொரு பெண்ணும் நாளொன்றுக்குப் பத்து முறை வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகவும் வரலாறு பதிந்து வைத்துள்ளது. அதுபோல ஜெர்மானிய ராணுவ முகாம்களிலும் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டுப் பெண்கள் பிடித்து வைக்கப்பட்டு ஸெக்ஸ் அடிமைகளாக இருந்துள்ளனர். லிபியாவில் சொந்த நாட்டுப் பெண்களைக் கற்பழிப்பதை ஆயுதமாக்கியுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆகும். மோனிகா லெவின்ஸ்கி கிளிண்டனின் ஸெக்ஸ் அடிமையாக இருந்தார் எனச்சொன்னால் ஹிலாரி ஒப்புக் கொள்வாரா?

ஆடு, மாடுகள் அறுப்பதை எதிர்ப்போர் ஏன் மனிதர்களை கொலை செய்வதை மட்டும் எதிர்ப்பதில்லை? - அக்ரம்
விலங்குகளை நேசிப்பவர்கள் ஆடு, மாடுகளை அறுப்பதை எதிர்க்கின்றனர். நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கில் ஆடு, மாடுகள் உணவுக்காக அறுக்கப்படுகின்றன. மனிதர்கள் தினமும் ஆயிரக் கணக்கில் கொல்லப்படுகிறார்களா என்ன? கொலை என்பது உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அல்லது திட்டமிட்டு அல்லது கூலிக்காக நடப்பது. இன மத சாதிக் கலவரங்களில் மட்டும் ஆயிரக் கணக்கில் கொலைகள் நிகழலாம். கொலைகளுக்காக வழக்குகளும் தண்டனைகளும் உண்டு; ஆனால் ஆடு மாடுகளை அறுத்தால் தன்டனை இல்லை. அதனால்தான் விலங்கு நேசிகள் அவற்றுக்காகக் குரல் கொடுக்கின்றனர்.

கேரளாவிலுள்ள பத்மநாபசாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆபரண புதையல் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து மன்னர்கள் பதுக்கியவைதானே? அவற்றை அரசுடமையாக்கி மக்களுக்கு உபயோகமான நலத்திட்டங்களைச் செய்வதில் அரசுக்கு ஏதாவது சிக்கலுண்டா? - அருள், கத்தர்
மக்களைக் கொள்ளையடித்துச் சேர்த்ததாகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட முடியாது. பொதுமக்கள் கோயிலுக்கு வழங்கிய காணிக்கையாகவும் இருக்கலாமே? இன்று திருப்பதி கோயிலில் கொட்டப்படும் பணம் நகை போன்றவை இதற்குச் சான்று.

மேலும் மக்க்ளைக் கொள்ளையடித்துச் சேர்த்திருந்தால் அவற்றை ஆடம்பரமாகச் செலவு செய்து அனுபவித்திருப்பார்களே? மக்களைக் கொள்ளையடித்துச் சேர்த்திருந்தால் இன்று வரை திருவாங்கூர் மன்னர் பரம்பரையை மக்கள் மதித்துக் கொண்டிருப்பார்களா?

அக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஆபரணப் புதையலை அரசுடமையாக்கி மக்களுக்கு உபயோகமான நலத்திட்டங்களைச் செய்வதில் அரச குடும்பம் மற்றும் கேரள அரசு இணைந்து முடிவெடுக்க வேண்டும்.


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails