Tuesday, July 12, 2011

நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை–2

இஸ்லாத்துக்கு முந்தைய அரேபிய வாழ்க்கை

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஒரு அரசாங்கமோ, எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடிகின்ற அதிகாரமோ அரேபியாவில் இருந்ததில்லை. எங்கு பார்த்தாலும் சண்டையும் சச்சரவும் ஒழுங்கின்மையும்தான் இருந்தது. விபச்சாரம் செய்வதை, ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்வதை அரேபியர் பெருமையான காரியமாக நினைத்தனர். அதைப் பற்றி கவிதைகளில் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.  கொலை, கொள்ளை, வழிப்பறி, அனாதைகளின் உடமைகளைப் பறித்துக் கொள்ளுதல், சிலை வணக்கம், குலப்பெருமை, குலத்தகராறுகள், பழிக்குப் பழி வாங்குதல், மூட நம்பிக்கைகள், கூடா ஒழுக்கம், பெண்களை ஒரு (போகப்) பொருளாக நினைத்தல், பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தல், அடிமைகளைக் கொடுமைப் படுத்துதல், சூதாட்டம், சதுரங்க ஆட்டம், மது, மாது – இவை அத்தனையையும் ஒட்டு மொத்தமாக ஒரு வரியில் குறிப்பிட வேண்டுமென்றால் ‘இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியா’ என்று சொல்லிவிடலாம்.

சூது விளையாடுவதில் அவர்களிடையே கட்டுக்கடங்காத வெறி இருந்தது. இருப்பதையெல்லாம் வைத்து விளையாடித் தோற்றுவிட்டால், தன் சுதந்திரத்தைக் கடனாக வைத்து விளையாடுவார்கள். அதிலும் தோற்றுவிட்டால் ஜெயித்தவரிடம் அடிமைகளாகப் போவார்கள். மனைவியை வைத்து மஹாபாரதத்தில் விளையாடிய மாதிரி.

அரேபியா முழுக்க குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்திருந்தது. குலங்களுக்குத் தலைவர்கள் இருந்தனர். அவர்களின் பொருட்டு ரத்தம் அதிகமாக சிந்தப்பட்டது. ஒரு குலத்தைச் சேர்ந்த யாராவது கொலை செய்யப்பட்டுவிட்டால் அதை குலத்துக்கே நிகழ்ந்த அவமானமாக அவர்கள் கருதினர். தலைமுறை தலைமுறையாக ரத்தம் சிந்தப்பட்டது. தன் குலத்தலைவருக்காக மனைவியைக்கூட ஒருவன் விட்டுக் கொடுத்துவிடுவான்.

சிலைகள் மட்டும் கிட்டத்தட்ட 360க்கும் மேல் இருந்தன. குறைஷிகளில் ஒரு பிரிவினர் சந்திரக் கடவுள்கள் என்று கருதப்பட்ட லாத், மனாத், உஸ்ஸா என்ற பெயர்களைக் கொண்ட  சிலைகளை வணங்கினர். லாத், மனாத் வணக்கம் அரேபியா முழுவதும் பரவி இருந்தது. கோபமாக இருக்கும் கடவுளை சாந்தப்படுத்துவதற்காக மனிதர்களை பலி கொடுக்கும் வழக்கமும் இருந்தது. உஸ்ஸா மர ரூபத்திலும், மனாத் ஒரு பெரிய கல்லின் உருவத்திலும் வணங்கப்பட்டன.  மனித உருவத்தில் சிவப்பு மாணிக்கக் கல்லில் செய்யப்பட்ட ஹுபலின் சிலை வணங்கப்பட்டது. அதன் கையில் சிறகுகளற்ற ஏழு அம்புகள் இருந்தன. க’அபாவின் முன் சுவரில் அவை வைக்கப்பட்டிருந்தன. சிங்கம், குதிரை, கழுகு ஆகிய உருவங்களும் வணங்கப்பட்டன. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் அரேபியர் வணங்கினர். ஹுனைன் கோத்திரத்தார் சூரியனையும், கினானா கோத்திரத்தார் சந்திரனையும், கைஸ் கோத்திரத்தார் நட்சத்திரங்களையும் வணங்கினர். சிலை வணக்கத்தின் பிரதான கேந்திரமாக மக்கா இருந்தது.

அரேபியாவில் மூட நம்பிக்கைகள் நிறைந்திருந்தன. புனிதமாகக் கருதப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்களும், அவர்களும்கூட வணக்கத்திற்குரியவர்களாகக் கருதப்பட்டனர். கனவுகளுக்கு விளக்கம் கேட்பது, குறி கேட்பது முதலியவற்றில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். இறைவனின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள அம்புகளை வானத்தை நோக்கி எறிவது பழக்கமாக இருந்தது. மிருகங்களைப் பலியிடும்போது அவர்களுக்குப் பிடித்த, அவர்களால் தெய்வமாகக் கருதப்பட்ட ஆண் அல்லது பெண்ணின் பெயரைச் சொல்லி பலியிடுவது வழக்கம். மூன்றாவது முந்திர் என்பவன் 6ம் நூற்றாண்டில் அரேபியாமீது படையெடுத்தபோது அவனால் பிடிக்கப்பட்ட கிந்தாவின் மகன் ஒருவனை உஸ்ஸாவுக்கு பலிகொடுத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகின்றனர். இன்னொரு சமயம், நானூறு கிறிஸ்தவ கன்னிகா ஸ்த்ரீகளை அவனே பலியிட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

தர்மம், நியாயம் என்பது பற்றியெல்லாம் கடுகளவுகூட அவர்கள் சிந்தித்ததில்லை. பெண்கள் அனவைரும் போகப்பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். விதவையான மாற்றாந்தாயை மகன் மணந்து கொள்ளும் வழக்கமும் இருந்தது. இத்தகைய திருமணத்தை ‘நிகாஹுல் மெகி’ (அவமானகரமான திருமணம்) என்று கூறினர். அவமானகரமானது என்று தெரிந்தும், அப்படிப் பெயர் வைத்தும், அவர்களே அந்த அவமானகரமான காரியத்தைச் செய்து கொண்டிருந்ததுதான் வேடிக்கை! பலதார மணம் என்பது அவர்கள் வாழ்க்கை முறையின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருந்தது. அதேபோல, மனைவியை வேண்டாம் என்று விவாகரத்து செய்வதும் அதிகமாக இருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், பலவிதமான மன நோய்களுக்கு ஆளாகி இருந்த அழுகிய சமுதாயமாக அரேபிய சமுதாயம் இருந்தது. நம்பத்தகுந்த நண்பர்களாகவோ, எதிரிகளாகவோகூட அரேபியர்கள் இல்லை. ஆறுகளற்ற பாலைவன பூமி அது. கலாச்சார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் வறண்டு கிடந்த அரேபியாவை வெற்றிகொள்ள வேண்டும் என்று ரோமானியர்களோ பாரசீகர்களோ நினைக்கவில்லை.

அரேபியாவுக்குப் பக்கத்தில் இருந்த யெமன் வளமான தேசமாக இருந்தது. மழை பொழிகின்ற செழிப்பான பூமி. ம’ஆரிப் அதன் தலைநகராக இருந்தது. ஆனால் ஒரு வெள்ளத்துக்குப் பிறகு சன்’ஆ அதன் தலைநகராக மாற்றப்பட்டது. அங்குதான் அப்ரஹா என்பவன் க’அபாவுக்குப் போட்டியாக ‘அல் காலிஸ்’ என்ற பிரம்மாண்டமான ஒரு தேவாலயத்தைக் கட்டினான். அவன் நினைத்தது நடக்காமல், க’அபாவை அழிக்க அவன் எடுத்த முயற்சியில் எப்படி இறந்தான் என்பதைப் பற்றி அல்லாஹ்வே திருமறையில் கூறுகிறான். யெமன் நாட்டு ராஜாக்கள் ‘துப்பா’ (ஆற்றல் மிக்கவர்கள்) என்று அழைக்கப் பட்டனர். (எங்கள் ஊரில் ஒரு ஆளை முட்டாள் என்று திட்ட வேண்டுமென்றால் ‘துப்பா’ என்று சொல்வது வழக்கம்)! ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக யெமன் நாடு அபிசீனியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பிறகு பாரசீகர்கள் அதனை ஆண்டார்கள்.

பாரசீக சாம்ராஜ்ஜியத்தை ஒட்டிய நீண்ட நிலவெளி ஹீரா எனப்பட்டது. யெமன் நாட்டு அரசுக்குக் கீழாக இருந்த ஒரு அரசமைப்பாக ஹீரா இருந்தது. ஹீராவின் பல அரசர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அதையடுத்து கஸ்ஸான் என்ற அரேபிய கிறிஸ்தவ ராஜ்ஜியம் இருந்தது. மக்காவில் குறைஷிகள் முக்கியமானவர்களாக, க’அபாவின் பொறுப்பாளர்களாக இருந்தனர். அதன் காரணமாக உலகளாவிய தொடர்பும் அவர்களுக்கு இருந்தது.உலக நடப்பும் பெருமானாரின் முன்மாதிரியும்

இந்த சூழ்நிலையில்தான் ஏப்ரல் 22, 571-ல் திங்கள் கிழமை அன்று முஹம்மது என்ற சூரியன் உதித்தது.

முதல் வேலையாக சண்டையிட்டுக் கொண்டிருந்த குறைஷிகளை அது ஒன்று படுத்தியது. அதன் பிறகு மத்திய அரேபியாவில் இருந்த எண்ணற்ற கோத்திரத்தினரை இஸ்லாத்துக்கு முஹம்மது அழைத்தார்கள். இறுதியாக யெமன் சன்’ஆவின் ஆட்சியாளர்களுக்கும், ஹீரா, கஸ்ஸான் ஆகியவற்றின் ஆட்சியாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்கள்.

ரோமானியர்களுடைய புகழும் அதிகாரமும் சரிய ஆரம்பித்திருந்தது. சர்வதேச ஒழுக்கத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. கிமு 450-ல் ‘ஜஸ்டினியன் கோட்’ என்ற ரோமானிய சட்டத்தொகுப்பு கொடுக்கப்பட்டது. தங்களுக்கென சட்டங்களை உருவாக்கிக் கொள்ள பதிமூன்று நூற்றாண்டுகள் ஆகியிருந்தன அவர்களுக்கு. உடன்படிக்கைகளின் புனிதத்தை அவர்கள் மதித்ததில்லை. ஒத்துக்கொண்ட உடன்படிக்கைகளை இஷ்டத்துக்கு மீறிக்கொண்டிருந்தார்கள். தங்களை நாகரீகமானவர்கள் என்று சொல்லிக் கொண்டும் நினைத்துக் கொண்டும் இருந்த அவர்கள் அடுத்தவரை அடிமைப்படுத்துவதற்காக போர் செய்தார்கள்.

அரேபிய தீபகற்பத்தின் கிழக்கில் பாரசீகர்களின் சாம்ராஜ்ஜியம் இருந்தது. கிஸ்ராக்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அவர்கள் சாதனைகள் செய்து கொண்டிருந்தனர். டமாஸ்கஸையும் ஜெருசலத்தையும் வெற்றிகொண்ட இரண்டாம் கிஸ்ராவின் படைகள் நிச்சயமாக மக்கா மதினாவுக்குள்ளும் வரும் சாத்தியம் இருந்தது. ‘தெய்வீக ரத்தம்’ தங்கள் உடம்பில் ஓடியது என்ற பொருள்படும்படி, பாரசீக அரசர்கள் தங்களை ‘கிஸ்ரா’ என அழைத்துக் கொண்டனர்.

யூத மதம் வழக்கில் இருந்தது. போர்க்களத்தில் எதிரிகளை மட்டுமின்றி, குழந்தைகளையும், பெண்களையும்கூடக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் புத்தியில் ஏற்றப்பட்டிருந்தது. அந்தக் காலத்தில் ஜொராஸ்டர் என்பவர் போதித்த மதமும் சிலரால் பின்பற்றப்பட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த காலத்தில் ஜொராஸ்ட்ரிய மதத்தின் வேத நூல் என்று அறியப்படும் ‘அவெஸ்தா’வுக்கு என்னானது என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒழிந்து போய்விட்டது என்ற நிலை.

நசுக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த மதமாக கிறிஸ்தவ மதம் அந்த காலத்தில் இருந்தது. நற்குணங்களையும் சகோதரத்துவத்தையும் அது போதித்தது. ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வைத்த பலரை அது ஈர்த்தது. ஆனால் விரைவிலேயே முத்தெய்வக் கொள்கை அதில் விதைக்கப்பட்டது. இயேசு கடவுளாக்கப்பட்டார். பன்றிக் கறியும் மதுவும் அனுமதிக்கப்பட்டன. புனித ஓய்வு நாளும், ஆண் குறியின் முன் தோல் நீக்கும் சடங்கும் ஒழிக்கப்பட்டன. போகப்போக, திருச்சபையில் பல பிரிவுகள் ஏற்பட்டன. இயேசுவின் பெயரால் அடிமைப்படுத்துவதும், கொடுமைப்படுத்துவதும், கொலை செய்வதும், அவர்மீது கொண்ட ‘அன்பு’ என்று அர்த்தப்படுத்தப்பட்டது. இறைத்தூதர்களையும் ஞானிகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வணங்கும் வழக்கம் ஏற்பட்டது. இஸ்லாம் பரப்பப்பட்டபோது இருந்த சூழ்நிலை இதுதான்.

இயேசுவின் செய்தி வழிதவறிய இஸ்ரவேலர்களுக்காக சொல்லப்பட்டது. ஆனால் பெருமானாரின் செய்தியும் வெளியுறவுக் கொள்கையும் மனிதகுலம் முழுமைக்குமானது. இஸ்லாம் அரேபியாவுக்குள்ளேயே சுருங்கியிருக்காமல் உலகளாவப் பரவி இருக்க இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

இனம், நிறம், குலம், மொழி அடிப்படையிலான பெருமைகளைத் தகர்தெறிந்தது இஸ்லாம். “மக்களே, எல்லா மனிதர்களும் ஆதத்திலிருந்து படைக்கப்பட்டவர்களே. ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டார். பாரசீகர்களைவிட அரேபியர்களோ, அரேபியர்களைவிட பாரசீகர்களோ உயர்ந்தவர்கள் அல்ல. வெள்ளையாக இருப்பவர்களும் கறுப்பாக இருப்பவர்களும் சமமானவர்களே. ஒரு நல்ல குடிமகனுக்கான அடையாளம் பக்தியும், இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து நடத்தலும் மட்டுமே” என்று தங்கள் இறுதிப் புனித யாத்திரையில் பெருமானார் பேசினார்கள்.

அன்றிலிருந்து, கண்ணியம், அந்தஸ்து, நாகரீகம் என்பதெல்லாம் பிறப்பை அடிப்படையாக வைத்ததாக இல்லாமல், நடத்தையை அடிப்படையாக வைத்ததாக ஆனது. மனிதகுல மொத்தமும் ஒரே இறைவனின் குடும்பம் என்று பெருமானார் சொன்னதால், வித்தியாசங்களும், பெருமைகளும், உயர்வு மனப்பான்மையும் ஒரே அடியில் ஒழிக்கப்பட்டன. முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர் என்று சொன்னார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று கருத்துக்களையும் உலகுக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தியது. 1789ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சி, 1969ல் நடந்த வியன்னா கன்வென்ஷன் ஆகியவற்றில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை 7-ம் நூற்றாண்டிலேயெ இஸ்லாம் சொல்லிவிட்டது.

மற்ற மதங்களை இஸ்லாம் மதித்தது. ‘உங்களுக்கு  உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம்’, ‘மார்க்கத்தில் வற்புறுத்தல் இல்லை’ — என்றெல்லாம் குர்’ஆனில் இறைவன் கூறினான். இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட முதலாம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதற்கு உதாரணம் காட்டலாம்.

அப்போது கிறிஸ்தவ ஆட்சியாளர் வசம் அபிசீனியா இருந்தது. ஆனால் அதைத் தாக்க வேண்டாம், அமைதியாக இருக்க விட்டுவிடுங்கள் என்று பெருமானார் கூறி இஸ்லாத்தில் இல்லாத ஒரு அரசோடு நல்லுறவு பேணி இருக்கிறார்கள். இஸ்லாமியர் அல்லாதவர்களின் சுதந்திரத்தை இஸ்லாம் எப்போதுமே கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதை பாதிக்காத வகையில்தான் நடந்து கொண்டுள்ளது. இஸ்லாமிய ஆட்சிகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு உயர்ந்த அரசுப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அபிசீனியாவுக்குத் தூதராக அனுப்பப்பட்ட அம்ரிப்னு உமைஷ் தமாரி முஸ்லிமல்ல. போடப்பட்ட உடன்படிக்கைகளில் மாற்று மதத்தவரின் உயிரும், உடமைகளும் மட்டுமின்றி, அவர்களது நம்பிக்கையும் பாதுகாக்கப்பட்டன. உண்மை இறைவனிடத்திலிருந்து வருகிறது. நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதவர்கள் அப்படியே இருக்கட்டும் என்று இஸ்லாம் கூறியது.

நயவஞ்சக யூதர்களோடு நடந்த கைபர் யுத்தத்தின்போது தௌராத்தின் பல பிரதிகளை முஸ்லிம் படையினர் கைப்பற்றினர். ஆனால் யூதர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்த பிரதிகளையெல்லாம் அவர்களிடமே பெருமானார் ஒப்படைத்தார்கள். ஆனால் ரோமானியர்கள் ஜெருசலத்தை கிமு 70ல் கைப்பற்றியபோது யூதர்களின் வேதநூல் பிரதிகளையெல்லாம் தீக்கிரையாக்கினர். அதேபோல, சிலுவைப் போரின்போது, பாலஸ்தீன திரிபோலியில் இருந்த பெரும் நூலகங்களில் இருந்த பொக்கிஷங்களையெல்லாம் அழித்தனர். அந்த நூலகத்தின் முதல் அறையில் திருக்குர்’ஆனில் பிரதிகள் மட்டுமே இருப்பதை அறிந்த படையின் தளபதி அந்த நூலகத்தை அப்படியே தீக்கிரையாக்க உத்தரவிட்டார்.

முஸ்லிம்கள் செய்த போர்களெல்லாம் தற்காப்பு யுத்தங்களாகவே இருந்தன. மதினாவில் இருந்த முஸ்லிம்களை குறைஷிகள் தாக்க வந்தபோது பத்ர் என்ற இடத்தில் தற்காப்பு யுத்தம் நடந்தது. அதேபோல இன்னொரு தற்காப்பு யுத்தம் உஹதில் நடந்தது. மக்காவில் இருந்தவர்கள் யூதர்களோடு சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை எதிர்த்தபோது மதினாவைச் சுற்றி அகழிகளைத் தோண்டி வைத்து முஸ்லிம்கள் தற்காத்துக் கொண்டனர். அது அகழ்ப்போர் எனப்படுகிறது. மதினாவில் இருந்த முஸ்லிம்களால் மக்காவாசிகளுடைய வாழ்வாதாரத்தையே சிதைக்க முடியும். காரணம், அவர்கள் மதினாவைத் தாண்டித்தான் வாணிகம் செய்ய சிரியாவுக்கு செல்ல வேண்டியிருந்தது.

 அந்த வழியாகச் சென்றால் தாவளங்களைப் (caravan)பிடித்து வைத்துக்கொள்வோம் என்று ஆரம்பத்தில் பெருமானார் அவர்களை அச்சுறுத்தி வைத்திருந்தார்கள். மதினாவைச் சுற்றி வாழ்ந்த, முக்கியமாக தாவளங்கள் செல்லும் வழியில் வாழ்ந்து வந்த, முஸ்லிமல்லாத அரேபியர்களோடு நல்லுறவை ஏற்படுத்தி இஸ்லாத்துக்கு வலிமை சேர்த்து வைத்திருந்தார்கள். இவ்வகையில் ஒரு சங்கிலித்தொடர் போன்ற ஆதரவு தரும் நடுநிலை நாடுகளை ஏற்படுத்தி வைத்து மெல்ல மெல்ல மக்காவைச் சுற்றி வளைத்திருந்தார்கள். உஹது யுத்தத்துக்குப் பிறகு ‘ரஹ்லத்துஷ் ஷத்தா’ என்ற வணிக வழி மக்காவாசிகளுக்கு அடைபட்டது. இப்போது அவர்கள் கொஞ்சம் சுற்றி வளைத்துக்கொண்டு நஜ்த் வழியாகச் சென்றார்கள். பின்னர் அந்த வழியும் அடைபட்டது. இப்படி எல்லா வழிகளும் அடைபட்டபோது தாவளங்களை நம்பி வாழ்ந்தவர்கள் வேலையின்றித் தவித்தார்கள். இப்படி ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவுடன், அஷ்ஜா என்ற குலத்தோர் முஹம்மதுவிடம் ஒரு பிரதிநிதிக்குழுவை அனுப்பி ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர்.

ஒரு நாட்டோடு ஒப்பந்தம் செய்து கொண்டால் அதன் தோழமை நாடுகளையும் தன் தோழமை நாடுகளாகக் கருதி செயல்படுவதுதான் பெருமானாரின் வழக்கம். மக்காவோடு பத்தாண்டு போர் நிறுத்த உடன்படிக்கையை பெருமானார் செய்தபோது பனூ பக்ர் கோத்திரத்தார் மக்காவாசிகளோடு சேர்ந்து கொண்டனர். குஸா கோத்திரத்தார் பெருமானாரோடு சேர்ந்து கொண்டனர். அரேபியாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களோடு நட்பு பாராட்ட பெருமானார் விரும்பினார்கள். பிஷப் துகாதிர் என்பவருக்கு பெருமானார் எழுதிய கடிதம் இந்த வகையிலான ராஜதந்திரம் சார்ந்ததே.

நவீன ராஜதந்திரத்துக்கு உதாரணமாக இருக்கும் வெர்சைல்ஸ் உடன்படிக்கையோடு பெருமானாரின் ஹுதைபிய்யா உடன்படிக்கையை ஒப்பிடுவது பொருத்தமானது. ஏனெனில் பெருமானாரின் வெளியுறவுக் கொள்கைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக ஹுதைபிய்யா உடன்படிக்கை உள்ளது. அந்த உடன்படிக்கை முடிவுற்ற சமயத்தில் இஸ்லாத்தில் இணைந்திருந்த அபூ ஜந்தல் என்பவர் அங்கு வந்தார். அவரை குறைஷிகள் பிடித்து வைத்திருந்தனர். அபூஜந்தலை உடனே மக்காவுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும், இல்லையெனில் ஹுதைபிய்யா உடன்படிக்கையை நிறைவு செய்ய முடியாது என்று மக்காவாசிகள் சார்பாக அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த சுஹைல் இப்னு அம்ர் என்பவர் கூறினார். பொறுமையைக் கடைப்பிடிக்கும்படி அபூஜந்தலுக்கு அறிவுரை சொல்லி சுஹைல் கேட்டுக் கொண்டபடியே அபூஜந்தலை மக்காவுக்கு பெருமானார் அனுப்பினார்கள்.

இதேபோல மதினாவுக்கு வந்து சேர்ந்த அபூ புசைர் என்பவரும் திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால் இதெல்லாம் நடந்தபோது பெருமானார் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். அவர்கள் விரும்பி இருந்தால் வன்முறை மூலம் மக்காவை ஆக்கிரமித்திருக்கலாம். உடன்படிக்கையை மீறி இருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படியெல்லாம் செய்யவில்லை. மக்காவை வெற்றி கொண்டபோதுகூட எதிரிகளிடமிருந்து எந்த ஒரு நஷ்ட ஈட்டையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இந்த உலகில் செய்யப்பட்ட நவீன உடன்படிக்கைகளின்போது நடந்தது என்ன, ராஜதந்திரிகள் நடந்து கொண்ட விதம் என்ன என்று பார்த்தால் பயங்கரம்தான். உலகமே அதிர்ச்சியடைந்தது. ட்ரெஸ்டனின் மார்கலோனி அரண்மனையில் மெட்டர்நிக்-கோடு பேசுகையில் தன் தலைத்தொப்பியை தூக்கி கோபமாக விரிப்பின் மீது எறிந்தார் நெப்போலியன். மொராக்கோ சுல்தானோடு பேசிக்கொண்டிருக்கையில் சர் சார்லஸ் ஸ்மித் உடன்படிக்கையின் ஒரு பிரதியை சுல்தானின் முன்னிலையிலேயே கிழித்து எறிந்தார். அல்ஜிசிராஸ் மாநாட்டில் கௌண்ட் டாட்டன்பேக் தன் வசமிழந்து கோபமுற்று தன் நாட்டையே அவமானத்துக்கு உள்ளாக்கினார்.

முதல் உலகப் போர் முடிந்த பிறகு, வெர்சைல்ஸ் உடன்படிக்கை ஜூன் 28, 1919ல் கையெழுத்தானது. போருக்கு ஒரே காரணம் ஜெர்மனிதான் என்று குற்றம்சாட்டப்பட்டது. அதன் ராணுவம் நிராயுதபாணியாக்கப்பட்டது. நேசநாடுகளின் முன்னிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த ராஜதந்திரிகள் அவமானப்படுத்தப்பட்டனர். உடன்படிக்கையை தயார் செய்துகொண்டிருந்த முழு நேரமும் அவர்கள் குற்றவாளிகளைப்போல நின்று கொண்டே இருக்க வைக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, கடுமையான நஷ்ட ஈடாக 25,000,000,000 செலுத்தவேண்டும் என்று ஜெர்மனிமீது சுமை ஏற்றப்பட்டது. பொறுத்துக்கொள்ள முடியாத தியாகங்களை ஜெர்மனி செய்ய வேண்டும் என்று உடன்படிக்கை நிர்பந்தித்தது. அதை ஜெர்மனி செய்தால் அதன் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து போகும் என்ற நிலை இருந்தது. அதனால்தான் “வெற்றியடைந்தவர்களின் உடன்படிக்கை” என்று ஹெச்.ஜி.வெல்ஸ் அதை வர்ணித்தார்.

நவீன காலத்தில் ‘டிப்ளமசி’ என்று சொல்லப்படும் அரசியல் செயல்திறமானது ஒரு சாராருக்கு மட்டுமே நன்மைகள் செய்யும் மோசடி விஞ்ஞானம் என்றாகிவிட்டது. வெளிநாட்டுத் தூதர் என்பவர் தன் நாட்டு நலனுக்காக வெளிநாட்டில் இருக்கும் ஒரு நேர்மையான அதிகாரி என்பது 19-ம் நூற்றாண்டோடு போய்விட்டது. இன்று வெளிநாட்டுத் தூதர்கள் கொல்லப்படுகிறார்கள்.

ஆனால் முஹம்மதின் ராஜதந்திரம் என்பது இறைவனின் ஆணைகளுக்கு இன்னொரு பெயராக இருந்தது. அதில் கசப்போ, சந்தேகமோ, தவறுகளோ இல்லாமலிருந்தது. மனித உறவுகளை அது பாழாக்கவில்லை. உஹது யுத்தத்தில் பெருமானாரில் சிற்றப்பா ஹம்ஸாவைக் கொடூரமான முறையில் கொன்றவராக இருந்தபோதும், குறைஷிகளின் தூதுவர் என்ற முறையில் மனிதகுல வரலாற்றில் எங்குமே காணப்படாத அளவுக்கு மென்மையாக நடத்தப்பட்டார் கொலைகாரர் வஹ்ஷி.

(தன்னையும் தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்ட) பொய்யன் முசைலமாவின் தூதுவர்கள், “முசைலமா பின்பற்றும் நம்பிக்கையைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று திமிராகக் கூறியபோது, “நீங்கள் மட்டும் தூதுவர்களாக இருந்திராவிட்டால், உங்களைக் கொன்றுபோடச் சொல்லி இருப்பேன்” என்றார்கள் பெருமானார்.

இதேபோல, அபூ ரஃபீ என்பவரை தூதுவராக குறைஷிகள் ஒருமுறை மதினாவுக்கு அனுப்பினார்கள். அவர் மதினாவில் தங்கி இருந்தபோது முஸ்லிம்கள் வாழ்ந்த முறையைப் பார்த்துவிட்டு தனக்கும் இஸ்லாத்தில் இணைய விருப்பம் இருப்பதாகக் கூறினார். நீங்கள் ஒரு தூதுவராக வந்திருக்கிறீர்கள் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள் என்று அவருக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு, முஸ்லிமாக ஆவதாக இருந்தால், மக்கா திரும்பி சென்ற பிறகு, ஒரு சாதாரண மனிதராக இஸ்லாத்தில் இணையலாம் என்று பெருமானார் கூறியனுப்பினார்கள்!

பெரிய நன்மைகளுக்காக சின்னவைகளைத் தியாகம் செய்ய வேண்டும் என்றே இஸ்லாத்தில் பிறப்பிக்கப்படும் ஒவ்வொரு உத்தரவும் வற்புறுத்துகிறது. ஹுதைபிய்யா உடன்படிக்கையில் நடந்ததும் அதுதான். கைபருக்கும் மக்காவுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. இரண்டுக்கும் மத்தியில் இருந்த மதினா இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்தது. யூதர்கள் விஷயத்தில் குறைஷிகள் நடுநிலையாக இருக்கும்படிச் செய்தது பெருமானாரின் அறிவுத்திறனே. அவர்களது அரசியல் மற்றும் ராஜதந்திர வெற்றிக்கு இது ஒரு பெரிய சான்றாக விளங்குகிறது. கைபரை வெற்றி கொண்டபோதும் நட்புதான் வலுப்படுத்தப்பட்டது. இவ்வகையான நடவடிக்கைகள் காரணமாக, மக்கத்துக் குறைஷிகள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். ரத்தமின்றி மக்கா வெற்றி கொள்ளப்பட்டது.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட மூன்று மாதங்கள் கழித்து ஹஜ்ஜுடைய காலத்தில் ராணுவம் நீக்கிக்கொள்ளப்பட்ட பிரகடனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக இஸ்லாம் யெமன், யமாமா, ஒமன், ஈராக், சிரியா என வெகுவேகமாகப் பரவியது. இஸ்லாத்தின் வருகைக்கு முன் இந்தப் பகுதிகளில் அரேபியர்கள் பெரும் சாம்ராஜ்ஜியங்களை நிறுவியிருந்தனர். இஸ்லாம் அங்கு பரவிய காலத்திலும் ரோம, பாரசீக சாம்ராஜ்ஜியங்களின் தாக்கத்தில்தான் அவர்கள் இருந்தனர். எனினும், முஸ்லிம்கள் ஏற்படுத்திய அரசியல் அதிகாரம் இந்த உலகையே உலுக்கியது. ஜம்ஷெட் நௌஷேர்வான், கிஸ்ராக்கள், ருஸ்தம் போன்றோரின் அதிகாரத்தை இல்லாமலாக்கியது. பத்து ஆண்டுகளுக்குள் இஸ்லாம் இந்த சாதனையைச் செய்து காட்டியது. ஒரு நூற்றாண்டுக்குள், இஸ்லாம் காட்டிய உண்மையானது ஆடனிலிருந்து ஆண்டியாக் வரை, செவில்-லில் இருந்து சாமர்கண்டு வரை பரவியது. இஸ்லாம் என்ற சூரியனின் ஒளியின் முன்னால் தனது விளக்குகளை எந்த நாடும், அரசும் ஏற்ற முடியாமல் இருந்தது.

சண்டையிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரையெல்லாம் ஒற்றுமை எனும் கயிற்றால் பிணைத்தது இஸ்லாம். பெருமானாரின் மேதைமை அவர்களுக்கு ஒழுக்கத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது மட்டுமின்றி, ஆற்றல் மிக்க ராணுவமாகவும் அவர்களை மாற்றியது. வெற்றிகளின் ஊடே, கலை, தொழில்நுட்பம், விஞ்ஞானம் போன்றவற்றிலும் முஸ்லிம்கள் பங்களிப்பு செய்தனர். அறியாமையிலும், அநாகரிகத்திலும் பெருமை கொண்டிருந்தவர்கள் உலகத்துக்கே முன்மாதிரிகளாக ஆயினர். கிழக்கு ரோமாபுரியின் கிறிஸ்தவத்துக்கும் ஈரானின் ஜொராஸ்ட்ரியத்துக்கும் அது சவால் விட்டது. ஆனால் இதெல்லாமுமே பெருமானாரின் வெளியுறவுக் கொள்கைகளால்தான் சாத்தியமானது. அவற்றின் முக்கிய அம்சங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:

1.         இஸ்லாமிய அரசு மற்ற அரசுகளை ஏமாற்றக் கூடாது. நிறைவேற்ற முடியாத பொறுப்புகளையெல்லாம் நிறைவேற்றுவதாகச் சொல்லி ஏற்றுக்கொள்ளக் கூடாது. இரு நாடுகள் அல்லது குழுக்களுக்கு இடையிலான உறவு நட்புடனும் அன்புடனும் இருக்க வேண்டும்.

2.         செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றவேண்டும்.

3.         தகுந்த காரணமின்றி அண்டை நாட்டார்மீது படையெடுக்கக் கூடாது.

4.         தனது நன்மைக்காக அடுத்த நாடுகளில் குழப்பங்களை உருவாக்கக் கூடாது.

5.         எந்த அரசும் வன்முறையையும் வற்புறுத்தலையும் பயன்படுத்துவதை உற்சாகப்படுத்தக் கூடாது.

6.         எதிரியை வென்ற பிறகு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. அது எதிர்கால முன்னேற்றத்துக்குத் தடையாக அமைந்துவிடும்.

7.         தூதுவர்களை கொல்லவோ, மரியாதைக் குறைவாக நடத்தவோ கூடாது.

8.         சரிசமமான உரிமைகளின் அடிப்படையில் வாணிகம் செய்யப்பட வேண்டும்.

by: நாகூர் ரூமி
 Source : http://nagoorumi.wordpress.com/


இதனையும் கிளிக் செய்து  படியுங்கள்நபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை

இதனையும் படியுங்கள் நாகூர் ரூமி -

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails